தமிழ்நாட்டு நீதிமான்கள்



-கோமல் அன்பரசன்

என்.சி.ராகவாச்சாரி

எம்.ஜி.ஆர் இறந்து 15 நாட்கள் ஆகியிருந்தது. அவரது வாரிசு ஜானகியா? ஜெயலலிதாவா? என கட்சிக்குள் குடுமிப்பிடி சண்டை நடந்தது.   ஆதரவு எம்.எல்.ஏக்களைக் கொண்டு தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக ஜானகி அம்மாள் பதவியேற்றிருந்தார். அரசியலைத்தாண்டி எம்.ஜி.ஆரின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைப் பற்றிய பேச்சு இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பரந்து விரிந்த ராமாவரம் தோட்டம், சத்யா ஸ்டூடியோ, தி.நகர் வீடு, அ.தி.மு.க. தலைமை அலுவலகம் போன்றவை எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட சொத்துகள் என்பது அதற்கு முக்கிய காரணம்.

இதைப்பற்றியெல்லாம் அவர் உயிரோடு இருக்கும் போதே எழுதி வைத்த உயில்களைப் பற்றியும் கதை கதையாகப் பேசப்பட்டது. உயிலில் எம்.ஜி.ஆர் என்ன சொல்லியிருப்பார், கட்சி உடைந்து கிடக்கும் நிலையில் அவற்றை யார் முன்னெடுத்து நிறைவேற்றுவது என்ற கேள்விகள் பரபரத்தன. எல்லாவற்றுக்கும் 1988 ஜனவரி 9 ஆம் தேதி விடை கிடைத்தது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில்  செய்தியாளர்களிடம் மூத்த வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி எம்.ஜி.ஆரின் உயிலை வெளியிட்டார்.

23 பக்கங்களைக் கொண்ட அதில், தனது உயிலை செயல்படுத்தும் பொறுப்பை ராகவாச்சாரியிடம் ஒப்படைப்பதாக எம்.ஜி.ஆர் கூறியிருந்தார். மிகப்பெரிய மக்கள் சக்தி கொண்ட ஒரு தலைவரின் நம்பிக்கையைப் பெறுவது அத்தனை எளிதல்ல; அதிலும், ‘என் வாழ்வு முடிந்தபிறகும், இவர் என் எண்ணங்களை நிறைவேற்றும் சரியான நபராக இருப்பார்’ என்ற அளவுக்கு நம்பிக்கையைப் பெற்றிருப்பது பெரிது. எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் போது அவரின் முக்கியமான சட்ட ஆலோசகராக ராகவாச்சாரி இருந்தார்.

அவருக்காக பல வழக்குகளில் ஆஜரானார். தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவாக சபாநாயகர் கே.ஏ.மதியழகன் செயல்பட்ட விவகாரம், சர்க்காரியா கமிஷன் விசாரணை போன்றவற்றில் எம்.ஜி.ஆர் தரப்புக்காக ராகவாச்சாரி வாதிட்டார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; ராஜாஜி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்களுக்கும் ராகவாச்சாரி அணுக்கமானவர். முக்கியமான அரசியல் சாசன வழக்குகளில் இவர்களுக்காக வாதாடியவராகவும் ஆலோசனைகளை வழங்கியவராகவும் என்.சி.ஆர். திகழ்ந்தார்.

தமிழகத்தில் மதுவிலக்கு நீக்கப்பட்டபோது ராஜாஜி ஆலோசனைப்படி அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி கட்டிட வழக்குகளிலும் காமராஜரின் தேர்தல் வழக்குகளிலும் மிகத்திறமையாக வாதாடியவர். நெருக்கடி நிலைக்குப் பிறகு வந்த ஜனதா அரசு அமைத்த ஷா கமிஷன் விசாரணைகளின் போது, இந்திராகாந்திக்கும் சட்ட நுணுக்கங்களைத் தந்தவர்.

அன்றைய சென்னை மாகாணத்தின் நெல்லூரில் பிறந்தாலும் ராகவாச்சாரி படித்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். (இவரது தாத்தா நெல்லூரில் நீதிபதியாக இருந்தவர்.) 1918 மார்ச் 26ல் பிறந்த என்.சி.ஆர், சென்னை ஹிந்து உயர்நிலைப்பள்ளிக்குப்பிறகு, மாநிலக்கல்லூரியில் பி.ஏ பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1941ல் சட்டப்படிப்பை முடித்து, 1942ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். தாய் மாமாவான கே.கிருஷ்ணசுவாமி அய்யங்காரிடம் தொழில் பழகுநராகவும், ஜூனியராகவும் இருந்தார்.

ஏழே ஆண்டுகளில் தனியாக தொழில் நடத்தும் அளவுக்கு வளர்ந்தார். முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர்கள் வி.கே.திருவேங்கடாச்சாரி, கே.ராஜா அய்யர் போன்றவர்களுக்கு முக்கிய வழக்குகளில் உறுதுணையாக இருந்திருக்கிறார். 1971 ல் மூத்த வழக்கறிஞர் என உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட என்.சி.ஆர், தொழிலில் வெளுத்துவாங்கினார். சென்னை மாநகராட்சி, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், டிட்கோ, சிப்காட், டிக், டான்சி,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் போன்றவற்றின் சிறப்பு வழக்கறிஞராகப் பல ஆண்டுகள் இருந்தார்.

இது மட்டுமின்றி சினிமா தொடர்பான வழக்குகளையும் கையாண்டதால், திரையுலகின் முக்கிய நபர்கள் பலருக்கும் இவர்தான் வழக்கறிஞர். மயிலாப்பூர் ‘லஸ்’ சர்ச் சாலையில்  ராகவாச்சாரியின் வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்தது. அது ஒரு ‘குருகுலம்’ போலவே காணப்படும். ஜூனியர்களும் அவர்களது குடும்பத்தினரும் என்.சி.ஆரின் குடும்ப உறுப்பினர்களாகவே நடத்தப்பட்டனர்.

புகழ் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள் என்.எஸ்.வரதாச்சாரி, டி.வி.ராமானுஜன், பி.எஸ்.ஞானதேசிகன் (நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர்), சி.பி.பட்டாபிராமன் (தமிழக சட்ட அமைச்சராக இருந்தவர்),டி.சிவப்பிரகாசம், கே.கோபால், பி.தியாகராஜன், என்.வி.வாசுதேவன், ஏ.முரளிதரன் போன்றோர், இவரது பயிற்சிப்பட்டறையில் தயாரானவர்கள்தான். 

தம்முடைய ஜூனியர்கள்  நேர்த்தியாகத் தொழில் கற்றுகொள்ள வேண்டும் என்பதில் உறுதியானவர். மனுத் தாக்கல் செய்வதற்கான ஆயத்தங்களைத் தொடங்குவதில் இருந்து, வழக்கை நடத்துவது வரை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் ஆலோசனை செய்வார். கட்சிக்காரருக்கும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்; அதே நேரத்தில் நீதிபதிகளின் நன்மதிப்பையும் இழந்துவிடக் கூடாது என்பது என்.சி.ஆரின் தாரக மந்திரம். தனிப்பட்ட முறையில் ஆச்சாரம் தவறாதவராகவும், தொழிலுக்காக ‘காஸ்மோபாலிட்டன்’ மனிதராகவும் வாழ்ந்தார்.

வழக்கறிஞர் தொழிலின் மீது ஆகப்பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவமனையில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. அவர் ஆஜராக வேண்டிய வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் ராகவாச்சாரி தவித்துப்போனார். தம்மால் கட்சிக்காரர்கள் பாதிக்கப்படக்கூடாதே என கவலைப்பட்டார். இதேபோன்று குறுக்கு விசாரணை செய்யப்போவதற்கு முன்பு தேர்வுக்குத் தயாராகும் மாணவனைப் போல கேள்விகளைத் தயார் செய்வார். பதில் மனு மற்றும் எழுத்துபூர்வ விளக்கம் கொடுக்கும்போது 3 பத்திகளைத் தாண்டக்கூடாது என்பார்.

அதற்குள் நீதிபதிக்குப் புரியும் வகையில் விளக்குவதே சிறப்பு என்று சொல்வார். வழக்குகள் நிறைந்த ஒரு வழக்கறிஞரால் இத்தனை அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சமூக சேவையாற்ற முடியுமா? என வியக்க வைத்திடும் அளவுக்கு ஏராளமான பணிகளைச் செய்தார். மயிலாப்பூர் அகாடமியின் தலைவராக எண்ணற்ற மருத்துவ முகாம்களை நடத்தினார். ஊனமுற்றோருக்காகவும் விழி இழந்தோருக்காகவும் இலவச மருந்தகம் நடத்த ஏற்பாடு செய்தார்.

மறைந்த தன்னுடைய மகன்  ஜெயச்சந்திரன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, பின்தங்கிய பகுதி மக்களுக்கு தையல் இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்தார். அந்தப் பகுதி இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக கூடைப்பந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகளை நடத்தினார். ரோட்டரி அமைப்பில் இணைந்து சமூகப் பணிகளை முன்னெடுத்த ராகவாச்சாரி, மயிலாப்பூர் ரோட்டரி சங்கத்தை உருவாக்கி, அதன் சாசனத் தலைவராகவும் இருந்தார்.

தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம், ஆதரவற்ற பெண்களுக்கான அபய நிலையம், மது- போதை அடிமை மறுவாழ்வுக்கான சமூக ஆரோக்கிய சங்கம், மெட்ராஸ் ஊழல் கண்காணிப்பு அமைப்பு, இந்திய சமூக சேவை கவுன்சில், குடிமக்கள் உரிமை அமைப்பு போன்றவற்றில் தலைவராக திறம்பட பணியாற்றினார். விலங்கு வதை தடுப்பு சங்கம், காந்தி அமைதி அறக்கட்டளை, பாரதீய வித்யாபவன், தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகியவற்றிலும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினார். பெரம்பூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடத்தை சட்டப்போராட்டம் நடத்தி மீட்டுக்கொடுத்தார். இதற்காக கட்டணம் எதையும் அவர் வாங்கிக் கொள்ளவில்லை. அந்த மக்கள் தங்களுடைய தெருவுக்கு ‘என்.சி.ராகவாச்சாரி தெரு’ என்றே பெயரிட்டனர். இப்போதும் அப்படியே இருக்கிறது.

‘கல்விதான் மனித வாழ்வில் மகத்தான மாற்றங்களைத் தரவல்லது’ என நம்பிய என்.சி.ஆர். கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் பொறுப்புகளை ஏற்று, காலம் நினைவில் வைத்திருக்கும் பணிகளைச் செய்தார். சென்னையில் புகழ்வாய்ந்த இந்து கல்வி நிறுவன பள்ளிகளுக்கு  20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவராக இருந்து வழிநடத்தினார். எம்.ஜி.ஆரின் ‘சத்யா ஸ்டுடியோ’வில் உருவாக்கப்பட்ட ஜானகி-எம்.ஜி.ஆர் மகளிர் கல்லூரியின் தலைவராக பொறுப்பு வகித்தார்.

பாரம்பரிய பெருமைமிக்க மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி, இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், சென்னையில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பு போன்றவற்றிலும் ராகவாச்சாரியின் பங்களிப்புகள் அமைந்தன. இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டம், இந்திய செஞ்சிலுவை சங்கம், இமயமலை ரிஷிகேசத்தில் டிவைன் லைஃப் சொசைட்டி ஆகியவற்றின் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் சேவை புரிந்திருக்கிறார்.  தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

விளையாட்டிலும் மிகுந்த ஈடுபாடுடைய என்.சி.ஆர், 60 வயது வரை டென்னிஸ் மற்றும் கோல்ஃப் விளையாடினார். ஜிம்கானா கிளப், எம்.சி.சி போன்றவற்றில் உறுப்பினராக இருந்தார்.  வழக்கறிஞராக 50 ஆண்டுகளை இவர் நிறைவு செய்தபோது, மெட்ராஸ் வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை சேர்ந்து பாராட்டு விழா நடத்தின.

அதன்பிறகு வழக்குகளைக் குறைத்துக் கொண்ட ராகவாச்சாரி, தம்மிடமிருந்த அரிய சட்டப் புத்தகங்களை மெட்ராஸ் பார் அசோசியேஷனுக்கு அன்பளிப்பாக அளித்தார். ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது உள்ளிட்ட பல பெருமைகள் அவருக்குக் கிடைத்தன. பழைய மாமல்லபுரம் சாலையில் முதியோர் இல்லம் ஒன்றை உருவாக்கியதற்காக காஞ்சி சங்கரமடத்தின் சிறப்பு விருதினைப் பெற்றார்.

89 வயது வரை வாழ்ந்த என்.சி.ஆருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் . இப்போது அவரது பேரன் என்.சி. சித்தார்த், 5 வது தலைமுறை வழக்கறிஞராகத் திகழ்கிறார். பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ராகவாச்சாரியின் பெயரில் மயிலாப்பூர் ரோட்டரி சங்கம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.

(சரித்திரம் தொடரும்...)
ஓவியம்: குணசேகர்


ஏன் நீதிபதி ஆகவில்லை?

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அனந்தநாராயணன் இருந்தபோது என்.சி.ராகவாச்சாரியை நீதிபதியாக்க விரும்பினார். இது குறித்து அவரது விருப்பத்தை தலைமை நீதிபதி கேட்டார். தன் அம்மா மீது பெரும் மதிப்பு வைத்திருந்த ராகவாச்சாரி, அவரிடம் கேட்டுச் சொல்வதாக தெரிவித்தார். நீதிபதியின் சம்பள விவரங்களைக் கேட்ட அவரது அம்மாவோ, ‘அது நம்மாத்துல வாங்கற பாலுக்குக்கூட போறாதேடா’ என்று கூறிவிட்டார். இதனால் ராகவாச்சாரி நீதிபதி ஆகவில்லை. வழக்கறிஞர் தொழிலில் ஜாம்பவானாகத் திகழ்ந்தார்.

கட்டணமில்லா பயிற்சி

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இருவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஒருவருமாக மூன்று பேரை வழக்கறிஞர் பயிற்சி பெறுவதற்காக என்.சி.ஆரிடம் தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக மூன்றாண்டுகளுக்கு ராகவாச்சாரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை அப்படியே பயிற்சி வழக்கறிஞர்கள் சட்டப்புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்காக என்.சி.ஆர் கொடுத்துவிட்டார். இன்று அவர்கள் மூவரும் சிறப்பாக வழக்கறிஞர் தொழில் புரிந்து வருகின்றனர்.

மூன்று கட்டளைகள்

என்.சி.ஆர், தமது ஜூனியர்களுக்கு மூன்று பொன்விதிகளைக் கொடுத்திருந்தார். அதாவது, 1. சொத்து வழக்குகளில் வாங்கியவர் மற்றும் விற்றவர் என இரு தரப்பிலும் செயல்பட நினைக்காதீர்கள். 2. உயில்களுக்கு சான்றொப்பம் இடாதீர்கள் 3. தனி வங்கிக் கணக்குத் தொடங்கி, வழக்கு தொடர்பான வரவு- செலவுகளைச் செய்யுங்கள். இம்மூன்றும் இன்றைக்கும் வழக்கறிஞர்கள் பின்பற்றத்தக்கவை.