சாலையோரக் கடையிலும் இனி கார்ட் ஸ்வைப்பிங்தான்!



‘பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று மோடி அறிவித்த நாளிலிருந்து அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிறுவணிகர்களும், குறு வியாபாரிகளும்தான். கடந்த இரண்டு வாரங்களில் அவர்கள் அனுபவித்த கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. மரணம் நிகழ்ந்த வீட்டில் மெல்ல  மெல்ல ஒவ்வொருவராக இயல்பு நிலைக்குத் திரும்புவது போல அரசின் நடவடிக்கைகளுக்கு தங்களையும், வியாபாரத்தையும் மாற்றிக்கொண்டு வருகின்றனர் இவர்கள். இதன் உச்சகட்டம்தான் சாலையோர காய்கறிக் கடைகளில் தொங்க விடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு, ‘we accept all major credit and debit cards’.

‘‘500, 1000 ரூவா செல்லாதுன்னு  மோடி அறிவித்த மறுநாளே இந்த மெஷினைப் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன். ஒரு நாளைக்கு 100 பேருக்கும் மேல கார்டு மூலமாத்தான் பர்ச்சேஸ் பண்றாங்க. 200 ரூபாய்க்கு மேல பர்ச்சேஸ் பண்ணா கார்டுலதான் பணம் வாங்குறேன். முதல்ல எல்லாம் பேரம் பேசுவாங்க. ஃப்ரீயா ஒரு பழம் தாங்கனு கேட்டு வாங்கிட்டுப் போவாங்க. எப்பவும் பரபரப்பா இருக்கும். இப்ப கார்டுல தேய்க்கறதால அவங்களோட நடவடிக்கைல கொஞ்சம் மாற்றம் தெரியுது. சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு’’ என்று சந்தோஷம் பொங்க பேசுகிறார் கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்துவரும் விநாயகம். 

‘‘கல்லாப் பெட்டில பணத்தைப் பார்த்து சந்தோஷப்படுற ஆளுங்க நான். பத்தாயிரத்தை பத்துமுறை எண்ணிப் பார்த்து பூரிச்சுப் போவேன். இப்பலாம் பணமே கைக்கு வர்றது இல்லை. 2000 ரூபா நோட்டு மட்டும் ரெண்டு இருக்கு. அதை அப்போ அப்போ எடுத்து பாத்துட்டு வச்சிடுறேன். மத்தபடி எல்லா கொடுக்கல் வாங்கலும் பேங்க் மெஷின்தான். மக்கள் 500, 1000 கொண்டு வந்தாலும் வாங்கிக்கிறேன்.

அதுக்கான கடைசி நாள் முடியுற வரைக்கும் வாங்கலாம்னு இருக்கேன். அப்படி வாங்கலைன்னா வியாபாரமே ஆகமாட்டேங்கிது. மொத்த வியாபாரம் செய்யுறவங்களுக்கு பணப்பிரச்னை இல்லை. சில்லறை வணிகம்தான் ரொம்ப தடுமாறுது’’ என்கிறார் தேங்காய் வியாபாரம் செய்யும் கணேசன்.

‘‘எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரைக்கும் வியாபாரம் ஆகும். அதுல 2 ஆயிரத்தை பேங்க்ல வைப்பேன். 500, 1000 ரூபாய் செல்லாதுனு அறிவிப்பு வந்த முதல் வாரத்துல வெறும் 200 ரூபாய்க்குத்தான் விற்பனை ஆச்சு. ரொம்ப கஷ்டப்பட்டேன். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு கணக்கு வச்சிருந்த பேங்க்ல ஐடியா கேட்டேன். இந்த மெஷினைக் கொடுத்தாங்க. இப்ப வியாபாரம் நல்லா இருக்கு’’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் காய்கறி வியாபாரியான சிவன்.

இந்த மாற்றத்தை நுகர்வோர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? மளிகை வாங்க வந்த ராஜேந்திரனிடம் கேட்டோம் ‘‘இதுக்கு முன்னாடி மார்க்கெட் வரேன்னா எவ்வளவு செலவு செய்றோம்னு கணக்கு தெரியும். 1000 ரூபாய் கொண்டு வந்தா, பல கடைகள்ல பேரம் பேசி பொருளை குறைஞ்ச விலையில வாங்கிட்டுப் போவேன். 20 ரூபாய்க்கு வெங்காயம், 15 ரூபாய்க்கு  தக்காளினு கணக்குப் போட்டு வாங்குவேன்.

கையில காசு இருந்தப்ப பார்த்துப்  பார்த்து செலவு செய்வேன். இப்போ கார்டுல தேய்க்கறதால கணக்கு தெரியலை. இப்படியே போனா வரம்பு இல்லாம செலவு செய்ய வேண்டி வரும். சிக்கனமா இருக்கணும்ங்கிற மனப்பான்மையே இல்லாமப் போயிடும் போல’’ என்கிறார் அவர். தமிழ்நாடு வணிகர்கள் சங்கப் பேரமைப்பு செயலாளர் விக்ரமராஜாவிடம் இதுபற்றிக் கேட்டபோது, ‘‘எங்களுக்கு வேறு வழி இல்லை. வங்கிப் பரிவர்த்தனையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். அரசு எடுக்கும் முடிவுக்குத் தயாராக உள்ளோம்.

சிறிய தொகை பணப் பரிமாற்றம் என்றாலும், அதை முறையாகச் செய்யத் தயாராக இருக்கிறோம். அதே போல சில்லறை வணிகர்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் அரசு  உதவி செய்ய வேண்டும். முறையான, சாதகமான வரி விலக்கு தர வேண்டும். வங்கி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் கார்ட் மெஷினை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி தரவேண்டும். அடுத்த வாரம் எங்களது  மாதாந்திரக் கூட்டத்தில் கார்ட் ஸ்வைப்பிங் மெஷினைப் பற்றித்தான் பேசி முடிவெடுக்க உள்ளோம்’’ என்கிறார் அவர் நிறைவாக!

- திலீபன் புகழ்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்