துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் புதனும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 66

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் புதனும் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால், அவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். ‘நேற்று என்பது இனி எப்போதும் இல்லை. இன்று என்பதே நாளைய தினத்தின் சாத்தியம்’ என்று  இவர்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள். அடுத்த தலைமுறை என்ன செய்யும் என்றே எப்போதும் சிந்திப்பார்கள். ‘அதற்கு என் பங்கு என்ன என்பதே முக்கியம்’ என்று பேசுவார்கள்.

‘மாலுடன் வள்ளி சேரின் மதிமிகப் பெருகும்தானே’ என்கிற பழம் பாடலுக்கு ஏற்றபடி திருமாலின் அம்சமான மாலாகிய புதனுடன் வெள்ளியாகிய வள்ளி எனும் சுக்கிரன் சேர்ந்தால் புத்தி, வித்தை, சரஸ்வதி கடாட்சம் என எல்லாம் மிகுந்து வரும். புத்தியின் நுட்பமும், தந்திரமும் ஒரே முகத்தை உடையது. எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமக்கு நன்மையா தீமையா என்று கணிக்க முடியும்.  புதனின் போக்கைக் கொண்டே சுக்கிரன் இவர்களுக்கு எந்த அளவிற்கு உதவுவார் என்று தெரிந்துவிடும்.

‘படிப்பு என்பது புத்தகத்தில் அல்ல. அது வாழ்க்கையின் அனுபவத்தில்’ என்பதை மிகச் சிறிய வயதிலேயே இவர்கள் உணர்ந்து விடுவார்கள். வசீகரமான பேச்சும், அடித்தரை நுட்பம் என்கிற ஆழமும் இவர்களிடத்தில் அநாயாசமாக இருக்கும். எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எப்படி சமாளிப்பது என்பதை புதன் சொல்லித் தருவார்.  எப்போதும் ஏதேனும் புதிய தகவல்களைக் கொண்டு வந்து கொட்டுவார்கள். பழைய விஷயங்களையே, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் இவர்களிடம் நடக்காது.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரனும் புதனும் ஒரே இடத்தில் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான பலன்கள் இவை. இப்போது நாம் துலாம் லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு ராசிக்குள்ளும் இவ்விரு கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்று பார்க்கலாமா? ராசிக்கு முதல் இடத்தில் - அதாவது துலாம் லக்னத்திலேயே சுக்கிரனும் புதனும் இருப்பதென்பது நல்ல அமைப்பாகும்.

ஏனெனில், இந்த லக்னத்தின் அயன, சயன, மோட்ச ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானத்திற்குரியவரே புதன்தான். இவர்கள் இயல்பிலேயே தீட்சண்யமும் வசீகரமும் நிறைந்த தோற்றத்தோடு இருப்பார்கள்.  எவ்வளவு  உயர்ந்தாலும் கால் கீழேதான் நிற்கும். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்கிற கொள்கையோடு இருப்பார்கள். தந்தையின் பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்கிற பரிதவிப்பு இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் கலையுலகை ஒரு பார்வை பார்த்தபடியே இருப்பார்கள். இந்த அமைப்பிலுள்ள பல பேர் கலையுலகத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பார்கள்.

துலாம் லக்னத்திற்கு இரண்டாம் இடமான விருச்சிகத்தில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பின் மிக நுட்பமாகப் பேசுவதைத்தான் விரும்புவார்கள். மேலும், பணத்தைக் கையாளுவதில் பிரச்னை இருக்கும். இவர்களில் சிலர் கவிதை, இதழாளர், சினிமா விமர்சகர் என்றெல்லாம் இருப்பார்கள். இவர்களின் வாரிசுகள் சமூகத்தில் பிரபலமாவார்கள். சிறியதாக மாறுகண் அமைப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு மூன்று நாட்கள் கண்களே திறக்கவில்லை என்றெல்லாம் சொல்வார்களே... அதுபோல இருந்து, பிறகு சாதாரணமான அமைப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

தனுசு ராசியான மூன்றாம் இடத்தில் இவர்கள் இருவரும் அமர்ந்திருந்தால் அற்புதமான மனனம் செய்யும் திறன் இருக்கும். சிறிய வயதிலேயே 1330 குறளையும் மனனம் செய்து வைத்திருப்பது போன்ற அபாரமான மன ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். இளைய சகோதரர்களுக்காக பல தியாகங்களைச் செய்து முன்னேற வைப்பார்கள். காது, மூக்கு, தொண்டை பிரச்னைகள் வந்து வந்து நீங்கும்.

ஆனால், இவர்களின் மிகப்பெரிய பலமே நிறைய பெரிய மனிதர்களைத் தெரிந்து வைத்திருப்பதுதான். அவர்களைக் கைக்குள் வைத்து பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமலும் இருப்பார்கள். தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். உடன்பிறந்தவர் பெண்ணாக இருந்தால் மிகுந்த அதிர்ஷ்டமான வாழ்வு கிட்டும். மகர ராசியான நான்காம் இடத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பது மிகமிக அற்புதமான பலன்களைக் கொடுக்கும்.

தாயே தெய்வம் என்றிருப்பார்கள். தாய்வழிச் சொத்துகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எது செய்தாலும் தாயின் ஆலோசனையின்றி செய்ய மாட்டார்கள். தாத்தா, தாய் மாமன் போன்றோர் வைத்துக் கொண்டிருந்த பொருட்கள் மற்றும் சொத்துகளை இவர்கள் ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்களின் உடலில் உப்புச் சத்து சம்பந்தமான தொந்தரவுகள் வந்துபோகும். எப்போதும் சொந்த ஊரிலிருந்து வட கிழக்கு பக்கமாக இடமோ, மனையோ வாங்கக் கூடாது. இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு சந்திரன் கெட்டுப் போயிருந்தால் பால்ய வயதிலேயே தாயாரின் உடல்நிலை பாதிக்கக் கூடும்.

கும்ப ராசியான ஐந்தாம் இடத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் பெரும் புத்திசாலி என்று பெயரெடுப்பார்கள். பூர்வீகச் சொத்தும் கிடைக்கும். மந்திர உபதேசம் பெற்று பிற்கால வாழ்க்கையில் ஆன்மிகத்திற்குள் நுழைந்து அமைதியாக வாழ்வார்கள்.  திடீரென்று எதிர்பாராத வகையில் செல்வம் வந்து சேரும்.  மூதாதையர்கள் மீது மிகுந்த மரியாதையோடு இருப்பார்கள். அவர்களின் கனவுகள், ஆசைகள் என்னென்ன என்று கேட்டு அதையெல்லாம் நிறைவேற்றுவார்கள். சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுவார்கள்.

அன்னதானத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். இவர்களின் வாழ்க்கைத் துணைவரின் ஜாதகத்தில் ஐந்தாம் இடம் - அதாவது மழலை பாக்கியம் கிட்டும் இடம் சரியாக இருக்கும்படி சேர்க்க வேண்டும். புல்லாங்குழல் உள்ளிட்ட குழலிசைக் கருவிகளை தன்னை மறந்து வாசிப்பார்கள். மீன ராசியான ஆறாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் உட்காரும்போது எப்போதும் படபடப்புத் தன்மை உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உணர்ச்சிவசப்படுதலை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் தான்தோன்றித்தனமாக செலவு செய்தலைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சட்டென்று தொட்டதற்கெல்லாம் கோபப்படுவார்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் வெளியிலேயே பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது. வீண் வம்பு, வறட்டு கௌரவத்தை விட்டுவிடுதல் நல்லது. மன உளைச்சலை முடிந்தவரை குறையுங்கள். ஏன் மன உளைச்சலை அடைகிறோம் என்று உட்கார்ந்து யோசியுங்கள்.

ஏழாம் இடமான மேஷத்தில் புதனும் சுக்கிரனும் அமர்வதென்பது வாழ்க்கைத்துணையின் இடத்தைப் பலப்படுத்துவதாகும். அறிவிலும் அந்தஸ்திலும் வாழ்க்கைத்துணை மேலோங்கியிருப்பார். சிலருக்கு கல்லூரியில் உடன் படித்தவரே வாழ்க்கைத்துணையாகவும் வருவார்கள். சில காலம் வேலை நிமித்தமாக வாழ்க்கைத்துணையை விட்டு அன்னிய தேசத்தில் இருக்க வேண்டியிருக்கும். தொழில் செய்து சம்பாதிப்பதைவிட திறமைக்கேற்ற சன்மானங்களையே நிறைய பெறுவார்கள்.

என்னதான் இருந்தாலும் புதனின் ஆதிக்கத்தால் அவ்வப்போது யார் புத்திசாலி, யார் மிகுந்த திறமைசாலி என்பதில் போட்டி அதிகமிருக்கும். ஆனால், இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஆணாக இருந்தால் நிச்சயமாக மனைவியின் ஆலோசனையின்றி முக்கிய காரியங்கள் எதையும் செய்யக் கூடாது. எட்டில் அதாவது ரிஷப ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் மறைவதால் பிறமொழிகளைக் கற்று வைத்திருப்பார்கள். எட்டில் புதன் இருப்பதால் சிறுசிறு வினாக்களில் மதிப்பெண்களை இழப்பார்கள்.

இவர்கள் தங்களை மிகவும் புத்திசாலித்தனமாக எண்ணியபடியே இருப்பார்களே தவிர, பொது வாழ்க்கையில் நிரூபிக்கத் தவறுவார்கள். வாகனங்களில் செல்லும்போதும், இரவு நேரப் பயணங்களின்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். மர்ம ஸ்தானத்தில் நோய் வந்து நீங்கும். ஒன்பதாம் இடமான மிதுனத்தில் இவ்விரு கிரகங்களும் அமைந்திருந்தால் தந்தையை விஞ்சும் அளவிற்கு பெரிய நபராக வருவார்கள். செய்தொழிலிலும், குலத் தொழிலிலும் மிக ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஆடிட்டிங், வங்கி, வீணை வித்துவான் என்று பல்வேறு களங்களில் இறங்கி சாதிப்பார்கள். புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள்.

ஏதேனும், பெரிய பதவியில் இருந்து கொண்டேயிருப்பார்கள். பத்தாம் இடமான கடகத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால் ஜவுளி வியாபாரத்தில் பெரும் பொருளீட்டுவார்கள். பெரும்பாலோர் கலைத் துறை மற்றும் இறக்குமதி ஏற்றுமதி தொழிலில் சாதனையே செய்வார்கள். ஆனால், இவர்களிடம் தொடர்ச்சியான ஊக்கம் இருக்காது. அவ்வப்போது ஊக்கம் குறைந்து வெறுமையாக இருப்பார்கள். வாழ்க்கையை முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமோ என்று தேவையற்ற பயமெல்லாம் வந்துபோகும்.

ஜூவல்லரி, பியூட்டி பார்லர், மினரல் வாட்டர் என்று தொழில் தொடங்கி பிரமாதமாக வருவார்கள். நவீன நாடகங்கள் இயற்றும் கலைஞர்களாகவும் மிளிர்வார்கள். இவர்கள் யாரையுமே சார்ந்திராமல் தனித்துவம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிறிய வயதில் வறுமையை அனுபவித்ததால் நான்கு பேருக்கு பயன்படும்படியாக ஏதேனும் செய்வார்கள். தன்னை மதிக்காதவர்களை சட்டென்று அவமானப்படுத்தும் குணம் இருக்கும்.

சிம்ம ராசியான பதினோராம் இடத்தில் சுக்கிரனும் புதனும் அமர்ந்திருந்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணம் சம்பாதிப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் காட்டும் வல்லமை இவர்களுக்கு உண்டு. மூத்த சகோதர சகோதரிகள் தன்னிடம் இன்னும் பாசமாக இருந்தால் நல்லதுதானே என்று நினைப்பார்கள். எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் எப்பாடுபட்டாவது சாதித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள்.

பலவிதங்களில் வருமானம் செய்யும் தந்திரத்தை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆத்மகாரகனான சூரியனின் இடத்தில் புதன் இருப்பதால் எங்கேனும் தீர்த்த யாத்திரை சென்றபடி இருப்பார்கள். கன்னி ராசியான பன்னிரண்டாம் இடத்தில் புதனும் சுக்கிரனும் அமர்ந்தால் வானவியல், இயற்பியல், ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஸ்கை வாட்சிங் போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். எப்போதுமே கோழித்தூக்கம்தான் இவர்களுக்கு.

பணத்தைப் பற்றிய கவலையிலேயே அதிகம் தூங்காமல் இருப்பார்கள். சயன ஸ்தானத்திற்கும், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் வருகிறார். ஆழ்ந்த தூக்கம் இருக்காது. ஏதேனும் யோசித்தபடி இருப்பார்கள். பழைய ஆன்மிக நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவார்கள். துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதியான சுக்கிரனும், பாக்ய ஸ்தானத்திற்குரிய புதனும் சேர்ந்திருப்பது என்பது நல்ல பலன்களையே தரும். நீசமானோலோ அல்லது பகை பெற்றிருந்தாலோ தவிர பொதுவாகவே புதனும் சுக்கிரனும் நல்லதே.

அப்படியும் தொந்தரவு வந்ததெனில் பகவான் கிருஷ்ணரின் ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். ஸ்ரீகிருஷ்ணர் தென் வங்கக் கடலோரத்தில் குடும்பத்தோடு ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தார். கலியுகம் முழுவதும் திருவல்லிக்கேணியில் அமர்ந்து அர்ச்சாவதார ரூபமாக அருள்பாலிக்கலாம் என்று உறுதியோடுதான் பயணத்தைத் தொடங்கினார். ஏகசக்ரபுரி என்றழைக்கப்பட்ட தற்போதைய செங்கத்திற்குள் தம் திருப்பாதத்தை பதித்தார். ஊரே திரண்டது. பேரரசன் முதல் சிறு மன்னன்வரை எல்லோரும் அங்கே கூடி தரிசித்துக் குளிர்ந்தனர்.

காடுகளுக்குள் தவமிருந்த முனிவர்களும், ரிஷிகளும், சித்தர்களும் கிருஷ்ணத் தென்றல் வீசுவது உணர்ந்து அதன் மூலத்தைக் காண ஊருக்குள் குவிந்தனர். அந்த திவ்ய தரிசனம் எல்லோருக்குள்ளும் கல்வெட்டாகப் பதிந்தது. செவி வழிச் செய்தியாகவே பல நூறு தலைமுறைகள் தொடர்ந்தன. தளவாய் திம்மப்ப நாயக்கர், கிருஷ்ணரிடம் பெரும் பக்தி பூண்டிருந்தவர்.

அவர் தன் பக்தியை கோபுரமாக உயர்த்தி, கோயிலாக நிறைத்துக் காட்டினார். கருவறையில் ருக்மிணி-பாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி. வேணுகோபாலன் பார்த்தசாரதியாக, தேரோட்டும் சாரதியாக கையில் சாட்டையோடு நிற்கிறார். இவரின் அழகு உள்ளத்தை நெகிழ்த்தும். செங்கம் திருத்தலம், திருவண்ணாமலை - பெங்களூரு பாதையில் திருவண்ணாமலையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்