குட்டிச்சுவர் சிந்தனைகள்
ஆல்தோட்ட பூபதி
முதல்ல ஆரம்பிக்கிறப்ப, ‘நாலாயிரம் ரூபாவை மாத்திக்குங்க’ன்னு சொன்னாங்க. அடுத்த நாள் காலைல பேங்க் போனா, ‘ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டுன்னு ஏதாவது அடையாள அட்டை கொண்டு வந்தாதான் நாலாயிரத்தை மாத்திக்க முடியும்’னாங்க. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நேர்ல வந்தாக்கூட இம்புட்டு கூட்டம் கூடாது. நயன்தாராவை பார்க்க சேலத்துல கூடுன கூட்டத்தை விட அதிகமா வங்கிகளில் கூடுவதை பார்த்துட்டு, ‘திரும்பத் திரும்ப ஒருத்தர் பணம் எடுப்பதைத் தவிர்க்க, நோட்டு மாற்றத்தை கேமராவுல பதிவு பண்றோம்’னு சொன்னாங்க.
இதனால கும்பல் பழனிக்கு பாத யாத்திரை போற குரூப்பாட்டம் குறையும்னு பார்த்தா, அது திருப்பதி அன்னதானம் சாப்பிடப் போறவங்களாட்டம் அதிகமாகிட்டே போச்சு. அடுத்து, ‘நாலாயிரத்தை மாத்த முடியாது, ரெண்டாயிரம்தான் மாத்த முடியும்’னு சொன்னாங்க. அப்புறம் அடுத்த நாளே, ‘நோட்டு மாத்துறவங்க விரல்ல மை வைக்கிறோம்’னு ஆரம்பிச்சாங்க. இது இப்படியே போனாக்கா, அடுத்து இவனுங்க ‘ஒரு தடவைக்கு மேல பழைய நோட்டுக்கு புது நோட்டை மாத்துறவன் ரத்தம் கக்கி சாவான்’னு சாபம் விடுவாங்கன்னு நினைக்கிறேன்.
எங்கங்க... 10 நாளா ஆளையே பார்க்க முடியலை’’ன்னு ஒருத்தர் கேட்டாரு. ‘‘பணம் எடுக்க பக்கத்து ஏ.டி.எம்.ல நின்னுக்கிட்டு இருந்தேன்’’னேன். கஷ்டத்தை புரிஞ்ச மாதிரி, பேசாம போயிட்டாரு. அந்தளவுக்கு ரெண்டு வாரமா ஒட்டுமொத்த இந்தியாவும், ஏ.டி.எம் வாசல்லதான் உட்கார்ந்திருக்கு. ‘இந்த வாரம் இந்தியா’, ‘சென்ற வார உலகம்’னு நடந்த நிகழ்வுகளை நியூஸா பார்ப்போம்ல... அதே போல, இப்ப இந்தியப் பத்திரிகைகளில் முதன்முறையாக உங்களுக்காக பிரத்யேகமா, ‘இந்த வார ஏ.டி.எம் நிகழ்வுக’ளைப் பார்ப்போம்.
* அஞ்சலி பாப்பா பின்னால தகர டப்பா டிரெயின் மாதிரி, திருப்பூரில் ஏ.டி.எம்ல பணம் நிரப்பும் (empty) வேன் பின்னாடி கிறுக்கனாட்டம் சுத்திக்கிட்டு இருந்த நாற்பது பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தது. ‘எந்த ஏ.டி.எம்முக்கு போனாலும் பணமில்லாததால், பணம் நிரப்பும் வேன் பின்னால் சென்றால் எங்க பணம் நிரப்புவார்களோ அங்கே எடுத்துக்கொள்ளலாம்’ என, கீர்த்தி சுரேஷுக்கு கல்யாணமாயிடுச்சுன்னு கேட்ட மாதிரி கடும் விரக்தியில் நான்கு நாட்களாக சுற்றியதாக கூறினர்.
* கன்னியாகுமரியில் கேஷ் இல்லாம பாதி ஷட்டர் மூடியிருக்கிற ஏ.டி.எம்.முக்குள்ள ஜோடி ஜோடியா போவதாக புகார் எழுந்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரித்ததில் ‘பணமில்லாத ஏ.டி.எம் மெஷின் அறைகளில் ஏ.சி வீணாகப்போவதால், வீணாப் போற தண்ணியில வாயைக் கழுவிக்கலாம் என்று வந்ததாக’ தெரிவித்தனர்.
* சேலத்தில் ஏ.டி.எம். வாசல்ல 3 மணி நேரமா நின்னு, பழக்க தோஷத்துல பேலன்ஸ் மட்டும் பார்த்துட்டு வந்த நபருக்கு மனைவி தர்ம அடி தந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* சென்னை மயிலாப்பூரில் ‘பிச்சைக்காரருக்கு கட்டித் தந்தாலும் தருவேன், எங்கள் பொண்ணுங்களை பேங்க் ஆபீசருக்கு தர மாட்டேன்’ என ஏ.டி.எம்.களில் நான்கு நாட்களாக நின்று கொண்டிருந்த பொதுமக்களில் பலர் சத்தியம் செய்து பரபரப்பைக் கிளப்பி உள்ளனர்.
* மதுரை மேலூரில் ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க ரெண்டு நாட்களாகக் காத்திருந்த ஒரு வாலிபரும் பெண்ணும் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளிதழ்களுக்கு பேட்டி அளித்த புதுமணத் தம்பதியினர், தங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ‘மினிமம் பேலன்ஸ்’ என பெயர் வைக்கப் போவதாகத் தெரிவித்தனர்.
போன வாரம் வரை கரன்சி நோட்டு மேல பற்று வச்சிருந்தவனெல்லாம், இந்த வாரம் காதுல கேட்க முடியாதபடி நாட்டுப்பற்றோடு ‘காஞ்சனா’ பேயாட்டம் வெறிகொண்டு அலையுறானுங்க. பூரா பயலுகளும் உள் பனியன் முழுக்க தேசியக் கொடியா குத்தி வச்சிருக்கானுங்க. கொஞ்சூண்டு சந்தேகப்பட்டாலும் சட்டையைக் கிழிச்சு தேசப்பற்றைக் காட்ட ரெடியா இருக்கான்.
இதுல அதிகமா பாதிக்கப்பட்டது நம்ம ராணுவ வீரர்கள்தான். எவன்கிட்ட போயி என்ன கேட்டாலும், ‘‘நமது எல்லையில் ராணுவ வீரர்கள்...’’னுதான் பேசவே ஆரம்பிக்கிறாங்க. ‘‘எல்லா வங்கி வாசல்லயும் ரொம்ப கும்பல்’’னு சொன்னா, உடனே ‘‘நமது எல்லையில் ராணுவ வீரர்கள் பல மணி நேரம் கால் கடுக்க நின்று காவல் காக்கிறார்கள், உன்னால ஒரு மணி நேரம் நிற்க முடியாதா’’ன்னு சொல்றானுங்க.
‘‘ரெண்டாயிரம் ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்கான்’’னுதான் கேட்டேன். ஒருத்தன், ‘‘எல்லையில் ராணுவ வீரர்கள் கையில காசே வைத்திருக்காமல் இருக்கும்போது’’ன்னு ஆரம்பிச்சு முந்தா நாள் மோடி பட்டினியா படுத்தார்ங்கற ரேஞ்சுக்கு போயிட்டான். ‘‘எல்லையில் ராணுவ வீரர்கள் நொடி கூட கண்ணிமைக்காமல் காவல் காக்கும்போது’’ன்னு ஆரம்பிச்சிடுவானோன்னு நாட்டுல நம்பி குட்மார்னிங் சொல்லக்கூட பயமா இருக்கு. வீட்டுல அம்மாகிட்ட ‘‘இன்னிக்கு நைட்டும் சப்பாத்தியா’’ன்னு கேட்டா, உடனே அம்மா கூட ‘‘எல்லையில் ராணுவ வீரர்கள் தினமும் சப்பாத்தி...’’ன்னு ஆரம்பிக்கிறாங்க. இவனுங்க பூசாரியை முதற்கொண்டு ரவுடியா மாத்தி வச்சிருக்கானுங்க.
ஓவியங்கள்: அரஸ்
|