பணமில்லாத பரிவர்த்தனை சாத்தியமா?



பழைய நோட்டுகள் செல்லாது, புது நோட்டுக்கு சில்லறை கிடைக்காது. எதையும் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள். ஊருக்குப் போவதை, ஆபரேஷன் செய்வதை, திருமணம் செய்வதை என எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறார்கள் பலர். கடைகள் காற்று வாங்குகின்றன; தியேட்டர்கள் ஈயடிக்கின்றன; பிரமாண்டமாய் எழும்பி நிற்கும் ஜவுளிக்கடையில் ஒவ்வொரு மாடியிலும் விரல்விட்டு எண்ண முடிகிற நபர்களுக்கு மேல் ஆளில்லை. பிளாட்பார சில்லறை வர்த்தகம் சின்னாபின்னமாகிவிட்டது.

இத்தனை களேபரத்திலும் பிஸியாக இருப்பவை ‘டிஜிட்டல் வாலட்’ எனப்படும் எலெக்ட்ரானிக் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களே. பிரதமர் மோடியையே பிராண்ட் அம்பாசிடர் போல நிறுத்தி இவை வெளியிட்ட விளம்பரங்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தின. ‘‘எதிர்காலத்தில் எந்தக் கடையில் பொருள் வாங்கவும், எந்த சேவையைப் பெறவும் பணமே தேவைப்படாது. உங்கள் ஸ்மார்ட் போனே போதுமானது’’ என சத்தியம் செய்கின்றன இந்த நிறுவனங்கள்.

அது என்ன டிஜிட்டல் வாலட்? மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், அது உங்கள் மணிபர்ஸ் போன்றது. பர்ஸில் பணத்தை அடுக்கி வைப்பது போல இதில் வைக்கத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட் போனிலேயே இதையும் வைத்துக்கொள்ளலாம். Paytm, Mobikwik, SBI Buddy, FreeCharge, mRupee, Oxigen, Citrus என ஏகப்பட்ட நிறுவனங்கள் இப்படி டிஜிட்டல் வாலட் சேவையைச் செய்கின்றன.

ஒரு தனிநபராக நீங்கள், உங்களது செல்போன் மற்றும் இமெயில் முகவரியை வைத்து இதில் பதிவு செய்துகொள்ளலாம். அதன்பின் உங்களுக்கு ஒரு கணக்கு தொடங்கப்படும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இதற்கு கொஞ்சம் பணத்தை நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். (மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை டிஜிட்டல் வாலட்டில் வைக்க முடியும்.) இதேபோல இந்த நிறுவனத்தில் விற்பனையாளராகப் பதிவு செய்துகொண்ட கடைகள், தியேட்டர்கள், பஸ் நிறுவனங்கள், ஆட்டோக்கள், டாக்சி சர்வீஸ்கள், ஹோட்டல்களில் நீங்கள் சேவையைப் பயன்படுத்தும்போதும், பொருட்கள் வாங்கும்போதும், உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் இந்த ‘செயலி’யிலிருந்து பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

உங்கள் அக்கவுன்ட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டு அவர்கள் அக்கவுன்ட்டுக்கு நொடிகளில் சென்றுவிடும். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைத் தேய்த்து பணம் தருவதைவிட மிக எளிமையான செயல்முறை இது. ‘இதற்குத்தான் ஏற்கனவே கார்டு இருக்கிறதே? அப்புறம் எதற்கு டிஜிட்டல் வாலட்?’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்தியாவில் கிராமப்புறங்களில் இதுபோன்ற கார்டுகள் பயன்படுத்துகிறவர்கள் வெறும் 5 சதவீதம்தான்.

அது மட்டுமில்லை... இந்த கார்டுகளைத் தேய்த்து பொருட்கள் வாங்குவதற்கான பாயின்ட் ஆஃப் சேல் வசதி இந்தியாவில் வெறும் 12 லட்சம் இடங்களில்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சம் என்றால், வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அமேசான் போன்ற நிறுவனங்களில் பொருட்கள் டெலிவரி செய்ய வருபவர்கள், கையோடு இந்த பாயின்ட் ஆஃப் சேல் மெஷின் கொண்டு வருகிறார்கள். ஆனால் ஒரு டாக்சி சவாரிக்கோ, ஆட்டோ சவாரிக்கோ, தியேட்டர் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கவோ கார்டு வேலைக்கு ஆகாது.

டிஜிட்டல் வாலட் மூலம் இதெல்லாம் சாத்தியமாகும். கூடவே கார்டு மூலம் செய்கிற எல்லா பரிவர்த்தனைகளையும் இதிலும் செய்ய முடியும். இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களில் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது. ஆனால் டிஜிட்டல் வாலட் இங்கும் செயல்படும். கார்டு விஷயத்தில் நிறைய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில்கூட ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஏ.டி.எம்.களைப் பயன்படுத்திய லட்சக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்களின் பின் நம்பர் உள்ளிட்ட ரகசியத் தகவல்கள் இணையத் திருட்டு கும்பலால் களவாடப்பட்டது.

இதுபோன்ற ஆபத்துகளில் அக்கவுன்ட்டில் இருக்கும் எல்லா பணமும் பறிபோய்விடும். டிஜிட்டல் வாலட் ஒருவரின் ஸ்மார்ட் போன் மூலம் பரிவர்த்தனை செய்கிறது என்பதால், இந்த பயம் இல்லை. உயர்மதிப்பு பணம் செல்லாததான இந்த சூழலில் Paytm போன்ற டிஜிட்டல் வாலட் நிறுவனங்கள் அசுரத்தனமாக வளர்கின்றன. ‘‘இப்போது எங்களிடம் 15 கோடி பயனாளிகள் உள்ளனர். ஒரு நாளில் 70 லட்சம் பரிவர்த்தனைகள் எங்கள் மூலம் நிகழ்கின்றன’’ என்கிறது இந்த நிறுவனம்.

Mobikwik நிறுவனம் சமீப நாட்களில் 2000 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. ‘‘வரும் 2023ம் ஆண்டில் பணப்பரிவர்த்தனைகளைவிட டிஜிட்டல் பரிவர்த்தனைகளே அதிகம் நிகழும்’’ என கணிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள், வெறும் 100 ரூபாய்க்குக் கீழே நிகழும் சில்லறை வர்த்தகம்தான். இதை டிஜிட்டல் வாலட் எப்படி அணுகும் எனத் தெரியவில்லை. ஆனால் அம்பானி, அடானி போன்ற புது முதலாளிகளாக டிஜிட்டல் வாலட் நிறுவனத்தினர் உயர்வது சாத்தியம்.

- அகஸ்டஸ்

ஏ.டி.எம்.கள் எப்போது சரியாகும்?

இன்றைக்கு இந்தியாவில் எல்லோரும் அறிந்த ஒரே மெஷின், ஏ.டி.எம். இந்தியாவில் இருக்கும் 2 லட்சத்து 30 ஆயிரம் ஏ.டி.எம்.களில் அநேகமாக எல்லா நேரங்களிலும் 2 லட்சம் ஏ.டி.எம்கள் பூட்டியிருக்கின்றன. ஏன் இத்தனை பிரச்னை? ஒரு ஏ.டி.எம் மெஷினில் நான்கு பண அடுக்குகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் சுமார் 2000 முதல் 2500 நோட்டுகள் வரை அடுக்கலாம். புதிய நோட்டுகள் என்றால் நிறைய அடுக்க முடியும். பழைய நோட்டுகள் கசங்கி விடுவதால் குறைவாகவே வைக்க முடியும்.

1000 ரூபாய் நோட்டுகள், 500 ரூபாய் நோட்டுகள் 100 ரூபாய் நோட்டுகள் என கலந்து அடுக்கினால் சுமார் 6 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரை ஒரு ஏ.டி.எம் மெஷினில் வைக்க முடியும். இப்போது 1000, 500 நோட்டுகள் செல்லாது. வெறும் 100 ரூபாய் மட்டுமே வைக்க முடியும் எனும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கான அடுக்குகள் காலியாக விடப்படுகின்றன. 100 ரூபாய்க்கும் தட்டுப்பாடு. கடந்த ஆண்டு முதலே வங்கிகளுக்கு போதுமான அளவு 100 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.

இப்போதுதான் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வருகின்றன. அவை தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. புதிய 500 ரூபாய் நோட்டு, பழைய நோட்டைவிட சிறியது. 1000 ரூபாய் நோட்டு செல்லாததாக்கப்பட்டு புதிதாக வந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டும் பழைய 500 ரூபாயைவிட சிறிய சைஸில் உள்ளது. இந்த நோட்டுகளை ஏ.டி.எம்.மில் வைக்க வேண்டும் என்றால், பண அடுக்குகளிலும், ஏ.டி.எம்மின் சாஃப்ட்வேரிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதை recalibration என்கிறார்கள்.

‘வங்கிகள் ஒவ்வொரு நாளும் சுமார் 12000 ஏ.டி.எம்.களை மாற்ற வேண்டும்’ என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. சுமார் 2000 எஞ்சினியர்கள் இரவு பகலாக உழைத்து தினமும் சுமார் 10200 ஏ.டி.எம்.களை புதிய செட்டப்புக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் 80 சதவீத ஏ.டி.எம்.கள் இப்படி மாற்றப்பட்ட பிறகு, ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு உயர்த்தப்படும். அதன்பின் ஏ.டி.எம்மில் ‘அவுட் ஆஃப் சர்வீஸ்’ போர்டு தொங்காது. அநேகமாக நவம்பர் மாத சம்பளம் போடப்படும் நேரத்தில் நிலைமை சரியாகக்கூடும்!