சைலன்ட் ஸ்ரீதிவ்யா ஜாலி ஆர்யா!
‘மாவீரன் கிட்டு’ விஷ்ணு
“எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தேன். படங்களைத் தேர்வு செய்யும்போது எது நல்லது, எது கெட்டதுனு ஆரம்பத்துல தெரியல. அறிமுகமான படமே என்னை நல்ல ஒரு இடத்துக்குக் கொண்டு சேர்த்தது என்னோட அதிர்ஷ்டம். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துல நல்ல படங்கள் அமைஞ்சது. என்னை ஒரு கதாநாயகனா நான் என்னிக்கும் நினைச்சதில்ல. கதையின் நாயகனாக இருந்தா போதும்னு நினைக்கறேன். நான் எதுக்கும் அவசரப்படல...” - அருமையாகப் பேசுகிறார் விஷ்ணு விஷால். அடுத்தடுத்து நல்ல படங்களில் இருக்கும் ‘தமிழ் சினிமாவின் மிஸ்டர் நம்பிக்கை’.
“ ‘மாவீரன் கிட்டு’வின் போஸ்டர்ஸ் எல்லாமே புதுசா இருக்கு..?’’ “படமும் புதுசா, நல்லா வந்திருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நானும் இயக்குனர் சுசீந்திரன் சாரும் சந்திச்சோம். அப்ப ரெடியானதுதான் இந்தப் படம். அவர் படம்னா தைரியமா, நம்பிக்கையா போய் நிப்பேன். இன்னமும் எங்கேயோ, யாரோ ஒருத்தர் ‘வெண்ணிலா கபடிக்குழு’வைப் பத்தி பேசிட்டிருக்காங்க. சந்தோஷமா இருக்கும். இது 1980கள்ல நடக்கற கதை. ஆனா, இதுல சின்னச் சின்ன விஷயங்களுக்கும் மெனக்கெட்டிருக்கோம்.
‘மாவீரன் கிட்டு’ தலைப்பைப் பார்த்ததும் ‘இது சரித்திரப் படமா’, இல்ல... வேற ஒரு விஷயமான்னு எல்லாம் யோசிக்க வேணாம். படத்துல என்னோட கேரக்டர் பெயர் கிட்டு. பிளஸ் 2வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன். அவனுக்குக் கலெக்டர் ஆகணும்னு லட்சியம். அவனால் கலெக்டர் ஆக முடிஞ்சதா? அவனோட லட்சியத்துக்குக் குறுக்கே நின்னவங்க யார்? இப்படி கதை போகும்.
ஸ்ரீதிவ்யாவோட ஒரு கண்ணியமான லவ் இதுல இருக்கு. பார்த்திபன் சாருக்கு ஒரு லைஃப்டைம் கேரக்டர். நானும் சூரியும் சேர்ந்தால் காமெடி களை கட்டும். இதில் கதையோட ஃப்ரெஷ்ஷா காமெடி இருக்கும். யுகபாரதி பாடல்களோடு முதல்முறையா வசனம் எழுதியிருக்கார். இளைஞர்களைக் குறி வச்சிருக்கோம். ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பொருத்தமா இருக்கும்.”
“ஸ்ரீதிவ்யா காம்பினேஷன் எப்படி?’’ “ ‘ஜீவா’வுக்கு அப்புறம் ஸ்ரீதிவ்யா கூட நடிக்கறேன். அந்த சமயம் ரொம்ப பேசிக்க மாட்டோம். அவங்க உண்டு அவங்க நடிப்பு உண்டுன்னு இருப்பாங்க. அவங்ககிட்ட பிடிச்ச விஷயமே இந்த அமைதிதான். ‘மாவீரன் கிட்டு’ல கோமதியா கலக்கியிருக்காங்க. எங்க காம்பினேஷன் இதிலும் வொர்க் அவுட் ஆகும். மறுபடியும் அவங்களோட படம் பண்ணும் வாய்ப்பு வந்தால், கண்டிப்பா பண்ணுவேன்.”
“அடுத்த சொந்தத் தயாரிப்பு எப்போ?” “சொந்தப் படம்னா நாம விரும்பின விஷயத்தை தைரியமா பண்ண முடியும். அடுத்ததாக இப்போ ‘கதாநாயகன்’ல நடிக்கறேன். கேத்தரின் தெரசா ஹீரோயின். விஜய்சேதுபதி சார் இதுல கெஸ்ட் ரோல் பண்றார். ‘இடம் பொருள் ஏவல்’ல ஃப்ரெண்ட்ஸ் ஆனதால, ‘கதாநாயகன்’ல ஒரு கெஸ்ட் ரோல் பண்ணித்தாங்கன்னு அவர்கிட்ட உரிமையா கேட்டேன். அவர் வர்ற ரெண்டு சீன்கள்லதான் கதையே நகரும்.
அப்படி ஒரு முக்கியமான கேரக்டர். ‘காஷ்மோரா’வில் காமெடி ரோல்ல நடிச்ச முருகானந்தம் இதில் இயக்குனரா அறிமுகமாகிறார். இதையடுத்து ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்கத்துல நடிக்கறேன். முதல் தடவையா யூனிஃபார்ம் போட்டு போலீஸா நடிக்கப்போறேன். கலக்கல் போலீஸ் ஸ்டோரி அது!”
‘‘ உங்க மனைவியின் டைரக்ஷன்ல நடிப்பேன்னு சொல்லியிருந்தீங்க...?’’ ‘‘வீட்ல அவங்கதான் என்னை டைரக்ட் பண்றாங்க. முன்னாடி அவங்க எனக்காக ரெண்டு கதைகள் ரெடி பண்ணினாங்க. இப்போ அவங்களுக்கு குடும்பத்தைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு அதிகமாகிட்டுது. இப்போதைக்கு அவங்க கவனம் சினிமாவில் இல்லை!’’
“உங்க ஃப்ரெண்ட்ஸ் விஷால், ஆர்யா எல்லாரும் என்ன சொல்றாங்க?” “விஷால், ஆர்யா நண்பர்களா அமைஞ்சது சந்தோஷமா இருக்கு. எவ்வளவு பிஸியா ஓடிக்கிட்டிருந்தாலும் வாட்ஸ் அப், வாரத்துல ஒரு நாள் எங்கிருந்தாலும் மீட்டிங்னு பேசிக்கிட்டே இருப்போம். தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து விஷாலை நீக்கியதும் அதிர்ச்சியாகி விஷாலைப் போய் பார்த்தேன். ஆனா, அவர் எந்த டென்ஷனும் இல்லாம வழக்கம்போல் செம ஜாலியா இருக்கார். அதான் விஷால்.
ஆர்யாவோட ‘கடம்பன்’ ட்ரெய்லர் பார்த்து மிரண்டுட்டேன். ஜம்முன்னு உடம்பு முறுக்கேறி வேற மாதிரி இருக்கார். ஒவ்வொரு படத்துக்குமே கஷ்டப்பட்டு உழைக்கறார். ‘உனக்கு வேற எந்த கவலையும் இல்ல மச்சி. கல்யாணம் பண்ணிக்காம லைஃப்ல ஜாலியா இருந்துகிட்டு செமையா உழைச்சு படம் பண்றே. சீக்கிரமே கல்யாணத்தைப் பண்ணு மச்சி. நீ மட்டும் ஜாலியா இருக்கறதைப் பார்த்து பொறாமையா இருக்கு’ன்னு சொல்லியிருக்கேன். ஜெயம் ரவி, விஜய்சேதுபதி ரெண்டு பேரும் என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருக்காங்க. புதுசா என் கேங்ல சேதுபதியும் வந்துட்டார். ‘மாவீரன் கிட்டு’ல பார்த்திபன் சார் நட்பும் கிடைச்சிருச்சு. நட்பு வட்டம் பெருகிட்டே போகுது. நல்லதுதானே!’’
- மை.பாரதிராஜா
|