ஸ்மைல் உங்களுடையது... சேட்டை எங்களுடையது!



சினிமா, அரசியல் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கலாய்த்து  ‘யூ டியூப்’ இணையதளத்தில் அதகளம் செய்கிறார்கள் ‘ஸ்மைல் சேட்டை’ டீம். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வேலைதேடி சென்னைக்கு வந்த பட்டதாரி இளைஞர்களால் உருவாகியிருக்கிறது இந்த டீம். சமூகப் பிரச்சனைகளை நகைச்சுவையோடு தந்து சிந்திக்க வைப்பதுதான் இவர்களின் ஸ்பெஷல்.

“நான் ரேடியோவில் பணிபுரியும்போது ஒரு டீம் செட் ஆச்சு. பணத்தைத் தாண்டி ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சோம். இனி இணையம் தான் எதிர்காலம். அதனால ‘ஸ்மைல் ஸ்டூடியோ’னு ஒரு புரொடக்‌ஷன் ஸ்டூடியோவைத் துவங்கி, பிறகு எங்ககிட்ட இருந்த பணத்தைப் போட்டு ‘வெப்’ ரேடியோ ஆரம்பிச்சோம். பயங்கரமான நஷ்டம். அப்படி இருந்தே 3 வருசத்துக்கு மேல அதை வெற்றிகரமா நடத்தினோம்.
 
கஷ்டத்துலயும் நஷ்டத்துலயும் ரொம்பவே சந்தோசமா எங்க திறமையை மெருகேத்திக்கொண்டே இருந்தோம். அடுத்து என்னன்னு யோசிச்சப்போதான் ‘யூ டியூப் சேனல்’ ஐடியா சிக்குச்சு’’ என்று உற்சாகமாக பேசத்துவங்கினார் ஸ்மைல் சேட்டையை ஆரம்பித்ததில் முக்கியப் பங்கு வகிக்கின்ற விக்னேஷ் காந்த்.

‘‘ஆரம்பத்துல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கலாய்த்து ‘‘சொல்வதெல்லாம் பச்சை பொய்’னு ஒரு வீடியோ பண்ணினோம். அது பெரிய ஹிட். தொடர்ந்து பண்ணும்போது, டி.வி. சேனல்ல இருந்து நிகழ்ச்சி பண்ணித்தரச் சொல்லி அழைப்பு வந்துச்சு. என்னிடம் இருந்த டீம் அப்போ வரைக்கும் பணம்ங்கிற விஷயத்தைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை.. அதனால வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டோம். ஓரளவு பொருளாதாரத் தேவை பூர்த்தியானது.

அந்த நேரம்தான் யூ டியூப்பில் சேனல் தொடங்கி சிலர் பட்டையக் கிளப்பிக்கிட்டிருந்தாங்க. ‘யூ டியூப் சேனல்’ ஒரு நல்ல மார்க்கெட் டாகவும் இருந்துச்சு. அதை நாமளும் பயன்படுத்திக்கலாம்னு எங்க டீமோட காட்ஃபாதர் சுட்டி அரவிந்த் வழிகாட்ட கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி ‘ஸ்மைல் சேட்டை’ யைத் தொடங்கினோம்.

வட மாநிலங்களில் நையாண்டி புரோகிராம் அதிகம். தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிகழ்ச்சியை யாரும் செய்யலை. அப்படியே செய்தாலும். அது ஒருதலைப்பட்சமாக இருந்தது. தேர்தலை மையமாக வைத்த நிகழ்ச்சிக்கு ‘தி பீப் ஷோ’ என்று பெயரிட்டோம். டிசம்பர் மாத பெரு வெள்ளம் சென்னையை ஒரு காட்டு காட்டி ஓய்ந்த நேரம். அப்போது அரசியல் கட்சிகள் செய்த ஸ்டிக்கர் மேட்டரில் தொடங்கி அறிக்கை விட்டது வரை ஒரு விஷயத்தையும் விடாமல் கிண்டல் செய்து வீடியோ பண்ணினோம்.

நல்ல வரவேற்பு கிடைத்தது. மற்றவர்கள் முகத்தைக் காட்டாமல் கிண்டல் பண்ணும்போது, நாங்கள் முகத்தைக் காட்டியே கிண்டல் செய்ததால் எங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களுக்குப் புதிதாக இருந்தது.’’ ‘இதுக்கெல்லாம் மிரட்டல் வந்திருக்கணுமேனு உங்களுக்குத் தோணலாம்’ என்று பேசத்துவங்கினார் கார்த்திக். அவ்வப்போது வித்தியாசமான, சாமானிய மனிதர்களைத் தேடிப்போய் பேட்டி எடுத்துக் கலங்கடிக்க வைப்பவர் இவர்.

“மிரட்டல் எல்லாம் எதுவும் வரலை. ஆளும்கட்சி சேனல்களிலும், எதிர்க்கட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி பண்ணித்தரச் சொல்லிப் பேசினார்கள். எங்களுக்குப் பழக்கமானவர்கள், ‘அவங்க பார்த்தால் என்ன நடக்கும்னு தெரியும்ல. சீரியஸ்னஸ் தெரியாம அவங்களைக் கலாய்க்கிறீங்க. பார்த்து இருந்துக்கோங்க’ன்னு சொன்னாங்க. ஆனால், நாங்கள் ஒரு சார்பாகக் கிண்டல் கேலி செய்யாமல் அனைவரையுமே ஓட்டுவோம். ஆரம்பத்துல பயம் இருந்தது.

ஆனால் வெளியில காட்டிக்கல. அதேமாதிரி நாங்கள் நையாண்டி செய்யறதை சம்பந்தப்பட்ட நபரோ, அரசியல் தலைவர்களோ பார்த்தாலும் கோவப்படாம சிரிக்கணுங்கிற எண்ணத்தில்தான் பண்ணுவோம்” என்றார் அவர். ‘‘விளிம்புநிலை மனிதர்களான பிச்சைக்காரங்க, சாலையோரம் வாழ்றவங்கனு தேடிப்போய் பேட்டி எடுப்போம்.  நமக்குத் தெரியாத, வலிநிறைந்த, நெஞ்சைப் பதறவைக்கும் வாழ்க்கைக் கதை அவர்களிடம் இருக்கிறது.

அப்படி நாங்க எடுத்த வேளாங்கண்ணி-சரோஜாங்கிற செருப்பு தைக்கிற தம்பதியின் பேட்டி வேதனை நிறைந்தது. அவங்களுக்கு எங்களால முடிந்த உதவியை எங்க பார்வையாளர்கள் மூலமா செய்து புதிய வாழ்க்கைப் பாதையை உருவாக்கித் தந்திருக்கிறோம். நிறைய இருக்கு சார். ‘ரகசியன்’ என்ற பெயரில் தமிழர்களுடைய மறைக்கப்பட்ட வரலாற்றை வீடியோவாகப் பண்ணப் போறோம். அதில் முதலாவதா ‘மருதநாயகம்’ வரலாற்றை வெளியிட்டுள்ளோம். செம ரெஸ்பான்ஸ்’’ என்றார் ராம்குமார்.

“இன்னும் கொஞ்ச நாள்ல நிறைய ஸ்டார்ஸ் எல்லாம் யூ டியூப்பில் இருந்துதான் உருவாகப் போறாங்க. அப்போ எங்களைத் திட்றவங்களும் எங்களைப் பாராட்டுவார்கள். ஸ்மைல் உங்களுது, சேட்டை எங்களுது’’ என்று சொல்லி விடை பெற்றனர் இளம் படைப்பாளிகள்.

- புகழ் திலீபன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்