குங்குமம் ஜங்ஷன்
புத்தகம் அறிமுகம்
காலகண்டம் - எஸ்.செந்தில்குமார் (உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை- 600018. விலை: ரூ.400/-. தொடர்புக்கு: 044-24993448) பதினாறாம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குடியேறிய ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மூலக்கதைதான் இந்த நாவலின் அடிப்படை. ஆபரணத் தொழிலில் ஈடுபட்ட சமூகத்தின் பாரம்பரியம், சரித்திரம் பேசப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட நல் உணர்வுடன் நாவல் உருவ லட்சணங்களுடன் அமைந்துவிட்டது.
பெரும்போக்கில் விசாலமான பரப்பில் விரியும் இந்நாவலின் விஸ்தீரணம் வியக்க வைக்கிறது. செந்தில்குமார் அநாயாசமாக எழுதிய சாதாரண வரிகளில்கூட அசாதாரணம் பிடிபட்டிருக்கிறது. எழுதுவதற்கு அவரிடம் நிறைய மூலாதாரப் பொருட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் அவர் அடர்த்தியில் பொருந்திவிடுகிறார். கலைஞன் எப்போதும் உயரங்களையே குறிக்கோளாகக் கொள்ள முடியும்.
மக்களின் மொழி, எழுத்தாளனை விடவும் வளமுடையதாக இருப்பதை நாவல் முழுவதும் உணர முடிகிறது. மரபை மீட்டெடுக்கும், மக்களின் முழு வாழ்க்கைக்கும் அருகாமையில் இருக்கிற புத்தகம் இது. எழுதப்பட்ட நுட்பத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு மேலான அனுபவத்துக்கு இந்த நாவல் அழைத்துப் போகும்.
நிகழ்ச்சி மகிழ்ச்சி
‘‘வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஷங்கரிடம் வேலை பார்ப்பது கஷ்டமானது. இந்தப் படத்தின் ஹீரோ அக்ஷய்குமார்தான். இந்தப் படம் ஹாலிவுட்டுக்கு நிகரானதாக இருக்கும்’’ - என ஒரு பக்கம் ரஜினியின் பாராட்டு. ‘‘எனது 25 வருட சினிமா வாழ்க்கையில் நான் அதிகமாக மேக்கப் போட்டதில்லை. அதுக்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில்தான் மேக்கப் போட்டிருக்கேன்’’ என்று இன்னொரு பக்கம் அக்ஷய்குமார் ஆச்சரியம் என பிரமாண்டமாக மும்பையில் நடந்திருக்கிறது ஷங்கரின் ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விழா.
இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய்குமார், சல்மான்கான், எமி ஜாக்ஸன், ஆர்யா, ஜெயமோகன் என பலரும் கலந்து கொண்டனர். இப்படி ஒரு விழாவை சென்னையில் நடத்தாமல் மும்பையில் நடத்தியது குறித்து ரஜினி ரசிகர்கள் பலரும் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
சிற்றிதழ் Talk
தன்னைச் சாதியாக உணரும் மனதால் எந்த விடுதலையையும், எந்த ஈடேற்றத்தையும் அடையவே முடியாது. அதனால்தான் எல்லா விடுதலைகளுக்கும் சாதிய விடுதலையே முதன்மையானது. சமத்துவம் என்பது எல்லோரும் சமத்துவமாக மதிக்கப்படுவது அல்ல. அதிகாரங்களையும் வாய்ப்புகளையும் எல்லோரும் சமமாகப் பகிர்ந்துகொள்வதே! - எழுத்தாளர் ஷோபா சக்தி (‘ஆக்காட்டி’ இதழில்)
யூ டியூப் லைட்
கிட்டத்தட்ட 30 லட்சம் பார்வையாளர்கள், 20 ஆயிரத்தைத் தொடும் ஷேர்கள், 3200 கமென்ட்டுகள் என அசத்தியிருக்கிறது ‘people are awesome’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று. பிரபலமான ஸ்லாக்லைனரான லைல் க்ரன்பர்க் (Lyell Grunberg) சுவிஸ் நகரத்தின் கரையிலிருந்து கடல் மீது கயிறுகள் கட்டி கடந்து செல்லும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். ஜிம்னாஸ்டிக் வித்தைகளோடு அந்தரத்தில் பேலன்ஸ் செய்து அவர் கடலைக் கடக்கும் அந்த 11 நொடி வீடியோவுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதிரிபுதிரி. இந்த ஆண்டின் சிறந்த வீடியோவாக இது தேர்வாகியிருக்கிறது.
சர்வே
இந்தியாவில் கிராமங்களைவிட நகரங்களில் அதிகமாக வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இருந்தபோதிலும் நகரம்தான் கொஞ்சம் முன்னேறியிருக்கிறது என்று சொல்கிறது மத்திய அரசின் ஒரு ஆய்வு. 2013ம் ஆண்டில் கிராமங்களில் இருந்த வேலையில்லா திண்டாட்டத்தை விட நகரங்களில் 3.3 சதவீதம் அதிகமாக இருந்திருக்கிறது. இது 2014ல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது.
மத ரீதியாகவும் இந்த திண்டாட்டத்தை விவரப்படுத்தியிருக்கிறது இந்த ஆய்வு. இந்தப் பிரச்னையால் கிறிஸ்தவர்கள் கிராமங்களில் 4.5 சதவீதமும், நகரங்களில் 5.9 சதவீதமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு அடுத்து இஸ்லாமியர்கள். இவர்கள் கிராமங்களில் 3.9 சதவீதமும், நகரங்களில் 2.6 சதவீதமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வருங்காலங்களில் சொந்தமாக ஏதாவது தொழில் செய்வதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
டெக் டிக்
உலகளவில் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரானிக் பொருட்களில் ஆடியோ ஸ்பீக்கரும் இடம் பிடித்துள்ளது. எலெக்ட்ரானிக் சந்தையில் நாளுக்கு நாள் புதுவித தொழில்நுட்பத்துடன், கலை நயத்துடன் பொருட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. லேட்டஸ்ட்டாக ‘புளூடூத் ஸ்பீக்கர்’, அச்சு அசல் வாட்டர் பாட்டில் போன்ற வடிவத்தில் சந்தைக்கு வந்திருக்கிறது. நீங்கள் பாடல்கள் கேட்கும்போது மட்டும்தான் இதில் ஸ்பீக்கரும் உள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும். தண்ணீரில் விழுந்தாலும் ஸ்டீரியோ சத்தத்துடன் தெளிவாகக் கேட்கும் திறன் கொண்டது. 700 மி.லி. அளவு தண்ணீரை இதில் வைத்துக்கொள்ளலாம். 3 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும். இதன் விலை ரூ.650/-
|