அவசர கருத்தடை மாத்திரைக்குத் தடை!



‘ஐ பில்’, ‘அன்வான்டட் 72’ என இன்னும் பல பிராண்டுகளில் ஒரு காலத்தில் சக்கைப் போடு போட்டன ‘எமர்ஜென்சி கான்ட்ராசெப்டிவ் பில்’ (EMERGENCY CONTRACEPTIVE PILL) எனப்படும் அவசர கால கருத்தடை மாத்திரைகள். ஆனால் தமிழக சுகாதாரத் துறை இதற்குத் தடை விதித்திருக்கிறது. அதனால்  தமிழக மருந்துக் கடைகளில் இவை கிடைப்பதில்லை. மற்ற  மாநிலங்களிலிருந்து கள்ளச்சந்தை வழியாக இந்த மாத்திரைகள் வந்து அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்நிலையில், ‘இந்த மருந்துத் தட்டுப்பாட்டால் ஆபத்தான அபார்ஷன்கள் அதிகரித்து பெண்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என கவலை கோஷம் எழுப்புகின்றன பெண்கள் அமைப்புகள். இந்த மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையால் என்ன விளைவுகள் நிகழும்? இதுபோன்ற மாத்திரைகளை மருத்துவ ஆலோசனைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டுமா? இதனால் ஏதாவது பக்க விளைவுகள் உண்டாகுமா? ‘மங்கை’ எனும் பெண்களுக்கான மருத்துவமனையை நடத்தும் மகப்பேறு மருத்துவரான ஜெய்ஸ்ரீ கஜராஜிடம் இந்தக் கேள்விகளை எழுப்பினோம்.

‘‘குடும்பக் கட்டுப்பாட்டில் இரண்டு வகையான மாத்திரைகள் இருக்கின்றன. ஒன்று, ரெகுலரான பர்த் கன்ட்ரோல் மாத்திரை. இன்னொன்று இந்த எமர்ஜென்சி மாத்திரை. ரெகுலர் கர்ப்பத்தடை மாத்திரையைத்தான் பல காலமாக பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு பெண் தனது மாதவிடாய் முடிந்த பிறகு தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால்தான் இது கர்ப்பத்தைத் தடுக்கும். காரணம், இது கர்ப்பத்துக்குத் தேவையான கருமுட்டையை வளரவிடாமல் செய்கிறது.

ஆனால் எமர்ஜென்சி கருத்தடை மாத்திரை, முட்டை வளர்ந்த நிலையில் கர்ப்பத்தைத் தடுக்கிறது. அதுவும் உறவு கொண்ட 72 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கரு கர்ப்பப்பைக்குள் சென்று வளர ஆரம்பிக்கும். பிறகு இந்த மாத்திரையால் எந்தப் பயனும் இருக்காது. ஒரு ரெகுலர் கருத்தடை மாத்திரையானது, மாதவிடாய் ஹார்மோன் சுழற்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால் அவசரகால மாத்திரைகளை, ரெகுலர் மாத்திரைகள் போல தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்பை உண்டாக்கும். இது ரெகுலர் மாத்திரைகள் போல இல்லாமல் வேறான மருத்துவ குணம் கொண்டது. ஹார்மோன் சமநிலையிலும் மாற்றம் உண்டாக்கி உடல்ரீதியான பிரச்னைகளையும் ஏற்படுத்தும். வாந்தி, மயக்கம், மன அழுத்தம், தலைசுற்றல் போன்றவை பக்க விளைவுகளாக ஏற்படலாம்’’ என்கிற ஜெய், தமிழகம் இந்த மாத்திரையைக் கடைகளில் கிடைக்கவிடாமல் தடுத்திருப்பதற்கான காரணங்களைச் சொன்னார்.

‘‘இந்த மாத்திரைகள் அறிமுகமானபோது இதற்கு செய்யப்பட்ட விளம்பரங்கள்தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஒரு மாத்திரை என்றால் அதை யார் உட்கொள்ளவேண்டும்? எப்படி உட்கொள்ளவேண்டும்? பக்கவிளைவுகள் என்ன? என்பது போன்ற தகவல்களைச் சொல்லி விற்கவேண்டும். ஆனால், இதை ஒரு கருக்கலைப்பு மாத்திரை போலவே விளம்பரம் செய்தனர்.

உண்மையில் இந்த எமர்ஜென்சி மாத்திரைகள் என்பவை, குடும்பத்துக்கு வெளியேயும் தவறான உறவுகளாலும் ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தைத் தடுப்பதற்கான மாத்திரைகளாகவே அறிமுகமாகின. ஒரு பெண் குடும்பத்துக்கு வெளியே ஏற்படும் வேண்டாத கர்ப்பத்தைத் தடுக்கவே முயற்சிப்பாள். ஆனால் அதை சரியான நேரத்துக்குள் செய்ய வேண்டும். ரெகுலர் மாத்திரைகள் மாதிரி இதைப் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தினால் வேண்டாத பக்க விளைவுகளோடு, வேண்டாத கர்ப்பமும் உண்டாகும்.

இதனால்தான் எமர்ஜென்சி கருத்தடை மாத்திரை போன்ற சிக்கலான மாத்திரைகளை எடுக்க விரும்பும் நபர்கள் மருத்துவர்களைப் பார்த்து பரிசோதித்து எடுப்பது நலம். ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற அவசரகால மாத்திரையை ஒன்று அல்லது இரண்டு தடவை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அதற்குமேல் பயன்படுத்துவது ஆபத்து’’ என்று அக்கறையுடன் முடித்தார் ஜெய்ஸ்ரீ.

பெண்ணிய அமைப்புகளில் சில ‘இந்த மாத்திரை கடைகளில் கிடைக்காமல் இருப்பது பெண்களின் உரிமையைப் பறிப்பதற்குச் சமம்’ என்று கூறிவருவது பற்றி பாலியல் மருத்துவரான நாராயண ரெட்டியிடம் கேட்டோம். ‘‘மருத்துவத்தைப் பொறுத்தளவில் ஆண், பெண் என்று பிரிக்கமுடியாது. உண்மையில் சில மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மாத்திரைகூட இந்திய மருத்துவ விதியின்படி ‘ஷெட்யூல் ஹெச்’ எனும் பட்டியலில் வருகிறது. இதில் வரும் மாத்திரை, மருந்துகளை ஒரு டாக்டரின் ஆலோசனை, பரிந்துரையின்படிதான் நுகர்வோருக்கு ஒரு மருந்துக்கடை விற்க முடியும். ஆனால், இந்த மாத்திரையைத் தடை செய்திருப்பதால் உறவுச்சிக்கலுக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதிப்பு நிச்சயம். காரணம், இது அவர்களுக்கு மிக அவசியமான மாத்திரை.

சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து, அதன் விளைவுகளைத் தவிர்க்க கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கும்போதுகூட அந்த 72 மணி நேரத்துக்குள் ஒரு மருத்துவரை நாடி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். இது கிடைக்காமல் இருக்கும்போது வேண்டாத கர்ப்பத்தைக் கலைக்க முயற்சிப்பார்கள். கருக்கலைப்பு என்பது மருத்துவத் துறையிலேயே ஒரு சிக்கலான விஷயம். எனவே இந்த மாத்திரைகள் கடைகளில் கிடைக்கும்விதமாக இருக்கவேண்டும்.

இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் விதம், இதன் பக்கவிளைவுகளைப் பற்றி அரசும், மருந்துக் கம்பெனிக்காரர்களும் மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக விளம்பரங்களைச் செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் தடையால் ஒரு பிரச்னையைப் பெரிதாக்குகிறோம். ‘மருந்துக்கடைகளில் வயாகரா கிடைக்கிறது எனும்போது இதைத் தடை செய்வது பெண்களின் உரிமையில் தலையிடுகிறது அரசு’ எனச் சொல்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், ‘வயாகரா’கூட பட்டியலில் வரும் மாத்திரைதான்.

ஆனால் அது மட்டும் எப்படி கடைகளில் கிடைக்கிறது என்று கேட்கலாம். அதை அரசுதான் கண்காணிக்க வேண்டும். அதற்காக அவசரகால கருத்தடை மருந்தையும் கடைகளில் எல்லோருக்கும் கிடைக்கும்படி தரச் சொல்வது பெண்களுக்கே சரியானது அல்ல. காரணம், பட்டியலில் வரும் மாத்திரைகளை ஒரு மருத்துவர்தான் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று சொல்வதில் ஒரு அறிவியல் இருக்கிறது. அதோடு ஒரு பாதுகாப்பும் இருக்கிறது’’ என்கிறார் நாராயண ரெட்டி.

‘அரசு இதைத் தடை செய்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான்’ என்பது மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளின் வாதம். ‘‘இந்த மாத்திரைகளில் Levonorgestrel எனும் ஹார்மோன் உள்ளது. பாதுகாப்பற்ற உறவுக்குப் பிறகு கரு உருவாவதை இதுவே தடுக்கிறது. இது 0.1 மில்லிகிராம் அளவைவிட அதிகமாகக்கூடாது. ஆனால் பல மாத்திரைகளில் 0.75 மில்லிகிராம் அளவைவிட அதிகமாக இருக்கிறது. இது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது’’ என்கிறார்கள் அதிகாரிகள்.

- டி.ரஞ்சித்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்