வெறுப்பு



-கே.எம்.சும்சுதீன்

‘‘ஸ்டெல்லா... நீ எனக்கு ‘வாட்ஸ் அப்’ல அனுப்புனதைப் பார்த்ததும் அதிர்ந்து போயிட்டேன்..! சுருதி அப்படிப்பட்டவளா?’’ - வெடித்தான் ரவிக்குமார். ‘‘ஆமா.. ரவி.... சத்தியமா சொல்றேன். அவ மொடா குடிகாரி. இத்தனைக்கும் அவ என் உயிர்த் தோழி! இருந்தாலும் நீ என் ஃபிரண்டு. அதனாலதான் உன்னை உஷார் படுத்தினேன். சுருதிகிட்ட என்னைக் காட்டிக் கொடுத்திடாதே... ஓ.கே.வா.?’’ - உடனே தொடர்பைத் துண்டித்தாள் ஸ்டெல்லா.

‘ச்சே... குடிகாரியான அவளோடு ஒரு வாழ்க்கையா?’ அந்த வினாடி முதல் விரக்தியில் யாருடனும் பேசவில்லை. அவனுக்குள் புழுக்கம்... கோபம்... ஆத்திரம்... வெறி... கா ஃபி பாரில்... ‘‘சுருதி... உங்கப்பா குடிச்சிட்டு போட்ட காலி பாட்டில்ல சீரகத் தண்ணீரை ஊத்தி... குடிச்சி... அவனுக்கு நல்லா கடுக்காய் கொடுத்துட்டே வெற்றி! வெற்றி!’’ ஸ்டெல்லா சிரிக்க... ‘‘ஆமாம் வெற்றிதான்!

ஏன்னா நாலஞ்சு நாளா அந்த லூசுப் பயகிட்டயிருந்து ஒரு எஸ்.எம்.எஸ்.கூட வரலே. அந்த முன்கோபியை, அவசரக் குடுக்கையை நான் வெறுத்து ஒதுக்கி மனஸ்தாபம் வராம, அவனே என்னை வெறுக்கும்படி பண்ணிட்டே... தேங்க்ஸ் டி...’’ ஆனால் அந்த வெறுப்பு வேறு விதமாய்த் திட்டமிட்டது! ‘‘‘சுருதி... உன்னை மறக்க முடியலே... எனக்குக் கிடைக்காத நீ யாருக்குமே கிடைக்கக் கூடாது!’’ கொலை வெறியோடு அவள் வரும் ரயில் நிலையத்தில் அரிவாளோடு மறைவாய்க் காத்திருந்தான் ரவிக்குமார்!