சுதா ரகுநாதன் in Download மனசு
நல்ல சங்கீதம்
நல்ல ஸ்ருதியும், தாளமும், உணர்ச்சியுடன் பாடக்கூடிய உணர்வும் இருந்தால் அது யார் பாடினாலும் நல்ல சங்கீதம். ஆனால் இந்த விஷயங்கள் கண்டிப்பா இருக்கணும். எது எப்படியிருந்தாலும் பாடறவங்க பாடும்போது ஒரு சுவை இருக்கணும். சிந்தனையை செம்மைப்படுத்தாத எந்த இசையும், அது எத்தனை இனிமையான குரலில் இருந்து வந்தாலும், சங்கீதமாகக் கருத முடியாது. அப்படி இல்லையென்றால் அது இசைதான். உயர்ந்த ஸ்தானத்திலிருந்து வர்ற சங்கீதம் உலகத்தைக்கூட புரட்டிப் போட்டுடும்.
அப்படி சங்கீதத்தை கேட்கறதுக்கு நிறைய சான்ஸ் எனக்கு கிடைச்சிருக்கு. பயிற்சிதான் ஒருவரை இசைக்கலைஞராக ஆக்கும். ஆனால் அது மட்டுமே போதுமா? அதையும் சொல்ல முடியாது. மொழி அறியாவிட்டாலும் தியாகராஜரின் உணர்ச்சிகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடிவதன் காரணம் என்ன? இசைக்கும் மானுட உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான தொடர்பு இருக்கக் கூடுமோ... சொல்லப் போனால் சங்கீதம் பேசறதுக்கான விஷயம் இல்லை. அது பாடறதுக்கான... கேட்கிறதுக்கான விஷயம்தானே!
கற்ற பாடம்
நேரம் பொன்னானது.
குரு-சிஷ்யை உறவு
எங்க அம்மா சூடாமணி இயற்கையாகவே என்னை சங்கீதத்தில் கொண்டுவந்து விட்டாங்க. இஷ்டம் இல்லாமல், force பண்ணி எதையும் செய்யலை. நான் விளையாடிக்கிட்டே இருப்பேன். சும்மா பாடிட்டே வந்து கூட்டிட்டுப் போவாங்க. நானும் அதையே முணுமுணுத்துக்கிட்டு பின்னாடி போவேன். குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை திணிச்சால் அதுல குவாலிட்டி வராது. இயற்கையாகவே குழந்தைகளுக்கு சங்கீதம் வேணும்னு உணர்வு இருக்கணும்.
நான் மகளிர் நல மருத்துவராக ஆகணும்னு நினைச்சபோது காலேஜில் இவ்வளவு திவ்யமான குரலை வைச்சுக்கிட்டு டாக்டர் ஆகப் போறியா? அதுக்கு உனக்கு நேரம் கிடைக்குமான்னு விசனப்பட்டாங்க. ஒரு உதவித்தொகை கிடைச்சு எம்.எல்.வசந்தகுமாரி அம்மாகிட்டே சேர்ந்தேன். அவங்களுக்கு என்னைப் பிடிச்சுப் போச்சு. 12 வருஷம் படிச்சேன். அதெல்லாம் அனுபவம். அதற்குப் பிறகு கல்யாணம் செய்துகிட்டு, குழந்தை பிறந்த பிறகும் படிச்சேன்.
அதற்குப் பிறகு மக்கள் என் சங்கீதத்தை விரும்ப ஆரம்பிச்சாங்க. எம்.எல்.வி. அம்மா பாணின்னு ஏதாவது என்னைத் தொட்டுட்டு வந்திருக்கலாம். ஏணிப்படி ஏறுகிற மாதிரி ஒவ்வொரு படியா ஏறித்தான் இப்ப இருக்கிற நிலைக்கு வர முடிஞ்சது. கடவுளோட ஆசீர்வாதமோ.. குருவோட மனசோ... எல்லாம் சேர்ந்து வந்திருக்கணும்.
மறக்கமுடியாத நாட்கள்
பத்மபூஷண் கிடைச்ச நாள். பத்மஸ்ரீ விருதை அப்துல் கலாம் ஐயா கையால வாங்கினது. இதுவரைக்கும் மூணே மூணு பெண்மணிகள்தான் சங்கீத கலாநிதி, பத்மபூஷண்னு கௌரவம் அடைஞ்சிருக்காங்க. டி.கே. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்தகுமாரிக்குப் பிறகு எனக்குக் கிடைச்சது வரம். ஐ.நா. சபையில் எம்.எஸ். அம்மாவிற்குப் பிறகு பாட நுழைஞ்சபோது உடம்பெல்லாம் பதட்டமாச்சு. சிலிர்த்துப் போச்சு. அந்த அனுபவத்தை மறக்க முடியுமா! எம்.எஸ். போய் பாடி 50 வருஷம் கழிச்சு நான் அந்த இடத்துல போய் பாடினது என்ன கொடுப்பினை! உலகத்திற்கே அமைதியைப் போதிக்கிற இடத்தில் பாடுறது எவ்வளவு அருமையானது!
சங்கீதத்தை கற்றுக் கொள்வது
சங்கீதம் பிடித்திருந்தால் மட்டும் போதாது. தாகம் இருக்கணும். வாய்ப்பாட்டுனா நல்ல குரல் வளம் இருக்கணும். எந்த சாதனையாளராக இருந்தாலும் அவங்க கடக்க வேண்டிய பாதையும், தூரமும் சாதாரணம் இல்லை. அதற்கு உண்டான உழைப்பு வேணும். கஷ்டப்பட்டு, ஆத்ம சுத்தியோடு இதுதான் நமக்குன்னு இறங்கினா அது ஒரு இடத்துல கொண்டுபோய் விடும் பாருங்க... அதெல்லாம் கடந்து வந்தவர்கள் உணரமுடியும். பழைய காலத்தில் ஒரு கச்சேரிக்கு நூறு, நூத்தம்பது பேர்கூட இருக்கமாட்டாங்க.
இன்னிக்கு ஐயாயிரம் பேர் கேட்குறாங்க. எனக்குக் கிடைச்ச மாதிரி guidance கிடைச்சா அதெல்லாம் பேரானந்தம். சங்கீதம் எங்க வரணும்னு காத்துக்கிட்டே இருக்கும். ரொம்ப சுத்தமா சங்கீதம் இருந்துகிட்டே இருக்கு. இப்பவும் வாழையடி வாழையா வந்துகிட்ேடதான் இருக்கு. அதுக்கு இடம் கிடைச்சிட்டா எப்படியோ வரும். அந்தக் காலத்தில் பெண்கள் பாட வர முடியாமல் இருந்து டி.கே. பட்டம்மாள் அம்மாதான் துணிஞ்சு வந்தாங்க. ஒவ்வொரு முன்னோடியும் நல்லது பண்ணிட்டே போயிருக்காங்க. அவங்களை சேவிச்சு, பக்தியா நினைச்சு, உருகி நின்னாலே பாடுற பாட்டுல உணர்வு, தெய்வீகம் வந்திடும்.
கேட்க விரும்பும் கேள்வி
நம்ம தேசத்தை ஏன் இன்னும் சுகாதாரமா வைச்சுக்க முடியலை? நான் அதை அரசு மட்டுமே செய்யக்கூடிய விஷயமா பார்க்கவே இல்லை. நாமும் இதை உணரணும். குப்பைத் தொட்டி இருக்கும்போதே அதில போடாமல் கீழே குப்பையை போடுறாங்களேன்னு கொதிச்சிருக்கேன். அது என்ன மனசு! அப்படியே காறி உமிழ்வாங்க, வெற்றிைலயைப் போட்டு மென்று துப்புறாங்க. சிங்கப்பூருக்குப் போனா இத்துனூண்டு நாடு துடைச்சு வைச்ச மாதிரி இருக்கு! நம்மால ஏன் முடியாது? அப்புறம் மத்தவங்களைப் பத்தி புறம் பேசுறோம்.
அக்கப்போர், பொறாமை மலிஞ்சு போச்சு. சுதாவிற்கு என்ன கார்ல போறா, பட்டுப்புடவை கட்டிக்கிறான்னு பேசுறாங்க. அது சொசைட்டிக்கு போடுற வேஷம். நகல். என் வீட்டிற்கு வந்தால் நான் வேற சுதா. முக்கியமா இன்னொன்று, எந்த மனிதனையும் துச்சமாக மதிக்கக் கூடாது. புறக்கணிக்கக்கூடாது.
மீட்கவேண்டிய இழப்பு
எம்.எல்.வி. அம்மாதான். வேற யாரை நான் சொல்ல முடியும்? இரண்டாவது குழந்தை மாளவிகா கேரிங்ல இருந்தாள். என்னைப் பார்த்து கண்கலங்கிக்கிட்டே இருப்பாங்க. தள்ளாமை வந்துவிட்டது. கஷ்டப்பட்டாங்க. அந்தக் கஷ்டத்திலிருந்து அவங்களுக்கு நிவர்த்தி வந்தது என்ற வரையில் நிம்மதி. ஆனால் எனக்குக் கிடைச்ச குரு என்கிற உன்னதமான ஸ்தானத்திற்கு நான் எங்கே போவேன்! என்னை ஒரு தாய் மாதிரி பார்த்துக்கிட்ட அனுபவத்தை எப்படி உணர வைக்க முடியும்னு நினைக்கிறீங்க? அவங்களோட பரிவுதான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.
பாடுறச்சே ஏதாவது தவறு இருந்ததுன்னா அதை இதமா, பதமா பேசி புரிய வைக்கிற விதம்... நான் எங்கே போவேன்! அவர் எதைப் பாடினாலும் அந்த ராகத்திற்கே உயிர் வந்துடுற அழகை எப்படி சொல்றது! இசை மேதையா வருவதற்கு, ஆவதற்கு என்ன தேவை... அது இயற்கையிலேயே வந்த வரமா? போன பிறவியில ஏதோ ஒரு தெய்வத்துக்கிட்டே உருகி நின்னதா... தெரியல. எனக்கு அந்த உத்வேகத்தையும், பாணியையும் பரிசாகக் கொடுத்தது எம்.எல்.வி. அம்மாதான்.
- நா. கதிர்வேலன் படங்கள் : புதூர் சரவணன்
|