விஜயனின் வில்



-கே.என்.சிவராமன்

‘‘ஐ’ம் சீரியஸ் ஐஸ்...’’ வலது காதோரம் செல்போனை இடுக்கியபடி தார்பாயை விரித்தாள் தாரா. ‘‘மேல ‘உள்ளேயும் வெளியேவும் உள்ள உபசன்னிதிகள்’னு எழுதியிருக்கு. அதுக்கு கீழ ஸ்கேலால கோடு போட்டா மாதிரி சின்னதும் பெரியதுமா கட்டங்கள். நடுவுல ‘அரங்கநாதர் சன்னிதி’னு பொடி எழுத்துல. லாஸ்ட்டா... தெளிவா... ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய விவரம்’னு கொஞ்சம் பெருசா...’’ ‘‘மைகாட்...’’ மறுமுனையில் ஐஸ்வர்யா அதிர்ந்தாள்.

‘‘இருட்டுல நடக்கிற மாதிரி இருக்கு. சுத்தி என்ன நடக்குதுனு சத்தியமா புரியலை...’’ டியூப் லைட்டை ஆன் செய்துவிட்டு சோபாவில் குத்துக்காலிட்டு அமர்ந்தாள். ‘‘முதல்ல குழப்பத்துலேந்து வெளில வா தாரூ. அப்பதான் தெளிவு கிடைக்கும்...’’ ‘‘ப்ளீஸ் ஐஸ்... எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு. யோசிச்சு புரிஞ்சுக்கிற நிலமைல இப்ப நான் இல்ல...’’ ‘‘ஸ்ரீரங்கத்துக்கும் உனக்கும் ஏதோ தொடர்பிருக்கு...’’ ‘‘சான்ஸ் இல்ல... அங்க நான் போனது கூட இல்ல...’’

‘‘ஒருவேளை உன்னோட பூர்வீகமா அது இருந்தா?’’ உதட்டைக் கடித்தாள் தாரா. இதற்கான பதிலை அப்பா, அம்மாவிடம் கேட்க வேண்டும். அதற்கு அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். கான்டாக்ட் செய்தால் இத்தனை வருடங்களாக ஏன் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை... இப்போது எங்கிருக்கிறோம்... என்ன செய்கிறோம் என்பதைச் சொல்லியாக வேண்டும்... ‘‘தாரூ? லைன்ல இருக்கியா?’’ ‘‘ம்...’’ ‘‘இரண்டே ஆப்ஷன்தான். ஒண்ணு, நடக்கறது பூரா எதேச்சையா இருக்கணும். இல்லைனா உன்னைக் குறி வைச்சு யாரோ காயை நகர்த்தணும்...’’ துள்ளி எழுந்தாள்.

‘‘என்னை ஏன் கார்னர் செய்யணும்?’’ ‘‘மே பி ஏதாவது ரகசியம் உன் வழியா வெளிப்படலாம்னு பர்டிகுலர் பர்சன் நினைச்சிருக்கலாம்...’’ ஃபேன் காற்றை மீறி வியர்த்தது. ‘‘உளறாத ஐஸ்... அப்படிஎன்ன ரகசியம் என்கிட்ட இருக்கு?’’ ‘‘தெரிஞ்சுக்க யார் முயற்சி செய்யறாங்களோ அவங்கதான் இதுக்கு பதில் சொல்லணும்...’’ ‘‘யார் அந்த பர்சன்?’’ ‘‘நோ ஐடியா. ஆணா, பெண்ணா? தெரியலை...’’ ‘‘ஆனா, முடிவுக்கு மட்டும் வந்துட்ட...’’ ‘‘ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்.

கொஞ்சம் பொறுமையா வேற எப்படி யோசிக்கலாம்னு நீயே சொல்லு தாரூ...’’ ‘‘...’’ ‘‘முடியலை இல்லையா? இதுதான் ஃபாக்ட். எதேச்சையா எதுவும் நடக்கற மாதிரி தெரியலை. அஞ்சு முட்டை, ‘KVQJUFS’... இது உணர்த்துவதா நாம ஊகிச்ச ‘JUPITER’... கார்க்கோடகன்... ரங்கம் ப்ளூ ப்ரிண்ட்... இது எல்லாத்துக்கும் நிச்சயமா கனெக்‌ஷன் இருக்கு. அதுவும் உன் வாழ்க்கையோட...’’ ‘‘...’’ ‘‘ஐ நோ... இந்த சூழல்ல எதையுமே யோசிக்க முடியாது. மைண்ட் ப்ளாங்கா இருக்கும். ஸோ, பேசாம தூங்கு. காலைல ஃப்ரெஷ்ஷா மேற்கொண்டு பேசலாம்...’’ ‘‘ம்...’’ ‘‘பட், படுக்கறதுக்கு முன்னாடி ரெண்டு காரியத்தை முடிச்சுடு...’’ ‘‘என்ன?’’

‘‘சாகறதுக்கு முன்னாடி கார்க்கோடகன் ஏதோ பேப்பர்ல கிறுக்கி இருந்தார்னு சொன்னியே... அதை உடனடியா நோட் பண்ணு. அப்புறம் மறந்துடும்...’’ ‘‘நல்லவேளை நினைவுபடுத்தின. கொஞ்சம் இரு...’’ செல்போனுடன் நகர்ந்து ஷோ கேஸைத் திறந்த தாரா, அங்கிருந்த நோட்டை எடுத்தாள். யோசிக்க நொடி இடம் தரவில்லை. கல்வெட்டாக மனதில் பதிந்திருந்தது. அப்படியே எழுதினாள். ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’
‘‘டன். அடுத்தது?’’ மறுமுனையில் பதில் வரவில்லை.

‘‘ஐஸ்?’’ ‘‘ஆங்...’’ இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா குரல் கொடுத்தாள். ‘‘எழுதிட்டியா?’’ ‘‘ம்... இன்னொரு காரியம் என்ன?’’ ‘‘என்னை நீ தப்பா நினைக்கக்கூடாது..?’’ ‘‘எதுக்கு இப்படி ஜிலேபி பிழியற ஐஸ்..? ஸ்ட்ரெய்ட்டா சொல்லு...’’ ‘‘இது லெவன்த் ஹவர்...’’ ‘‘ம்...’’ ‘‘முட்டு சந்துல நிக்கறோம். வேற வழியே இல்ல...’’ ‘‘கமான் ஐஸ்... எதுக்கு புதிர் போடற?’’ ‘‘விடுவிக்கத்தான்...’’ மைக்ரோ நொடி தயங்கியபின் ஐஸ்வர்யா தொடர்ந்தாள். ‘‘வந்து... பாயில்ட் எக்குல யார் எழுதினாங்கனு இன்னும் தெரியல... ஸோ...’’

தாராவின் உடல் இறுகியது. செல்போனைப் பிடித்திருந்த கை முஷ்டியில் நரம்பு முளைத்தது. ‘‘அதுக்கு..? அவன்கிட்ட பேசுன்னு சொல்றியா?’’ ‘‘ப்ளீஸ் தாரூ... ஸ்பேர் கீ சிவாவைத் தவிர வேற யார்கிட்டயும் இல்ல. ஒண்ணு அவன் வந்து அவிச்ச முட்டைல எழுதியிருக்கணும். இல்லைனா வேற யாராவது நுழைஞ்சு அந்தக் காரியத்தைச் செய்திருக்கணும்.

இந்த ரெண்டுல எது நடந்ததுனு தெரிஞ்சாதான் நாம மேற்கொண்டு ப்ரொசீட் பண்ண முடியும்...’’ ‘‘உன் கிரிப்டாலஜி புத்தில இடி விழ...’’ பல்லாவரம் மின் மயானத்தை அவன் அடைந்தபோது நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பைக் சத்தம் கேட்டு வெளியில் வந்த காவலாளி மலர்ந்தான். ‘‘போன்ல பேசினது..?’’ ‘‘நான்தான்...’’ ஹெல்மெட்டை எடுக்காமல் பதில் சொன்னவன் தனது கறுப்பு நிற ஜெர்கினுக்குள் கைவிட்டு ஐந்து இரண்டாயிரம் ரூபாய் தாள்களை எடுத்தான். ‘‘இந்தா...’’ ‘‘பேசினதுக்கு மேல இருக்கே...’’ வாயெல்லாம் பல் முளைத்தது.

‘‘அஸ்தி எங்க?’’ ‘‘இதோ...’’ திறந்திருந்த கேட்டுக்குள் நுழைந்த காவலாளி இருட்டில் கலந்தான். கைகளைக் கட்டியபடி அந்தத் திசையையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். சரியாக ஒரு நிமிடம் சென்றதும் சிறு மண் குடுவையுடன் காவலாளி வெளிப்பட்டான். புத்தம் புது வெள்ளைத் துணி அதன் வாயை மூடி இருந்தது. ‘‘அவரோடதுதானே?’’ அஸ்தியை முகர்ந்தான். புனுகின் நெடி ஹெல்மெட்டை மீறி நாசியைத் துளைத்தது. ‘‘சத்தியமா அவருதுதான்.

இதுல எல்லாம் நாங்க ஏமாத்த மாட்டோம்...’’ ‘‘அப்ப வேற எதுல ஏமாத்துவ?’’ தோளில் மாட்டியிருந்த பைக்குள் குடுவையை வைத்தான். ‘‘வேற யாராவது வந்தாங்களா?’’ ‘‘எரிக்கும்போதா சார்?’’ ‘‘எரிச்ச பிறகும்...’’ ‘‘இல்ல. அநாதை பொணம்தானே...’’ முடிப்பதற்குள் காவலாளியின் கண் முன்னால் பொறி பறந்தது. பிரமை பிடித்த நிலையில் தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டான். வலித்தது. ‘‘நீ அநாதையாகிடுவ... ஜாக்கிரதை...’’ ஸ்டார்ட்டரை அழுத்தினான். வண்டி காற்றைத் துண்டு துண்டாக வெட்டியது.

‘‘வீட்டுக்கு வந்திருந்தியா?’’ கேட்ட பிறகுதான் உச்சரித்த வாக்கியத்தின் அபத்தம் தாராவுக்குப் புரிந்தது. இரவு பதினொரு மணிக்கு மேல் எந்தவொரு ஆணிடமும் இப்படி கேட்கக் கூடாது. குறிப்பாக செல்போனில். ‘ஏன் வீட்டுக்கு வரலை..?’ என்று மறைமுகமாக விசாரிப்பதாக அந்த வினாவை அவன் புரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் எப்படியோ... சிவா அப்படித்தான் எடுத்துக் கொள்வான். குணமும் புத்தியும் அப்படி.

சுதாரித்தவள் அவன் பதில் சொல்ல இடம் தரவில்லை. ‘‘உடனே நாக்கை தொங்கப் போடாதே. கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு...’’ சீறினாள். ‘‘ஏதாவது பிரச்னையா..?’’ வழிந்த அன்பு, செவி வழியாக இதயத்துக்குள் பாய்ந்து அனலை அணைத்தது. ‘‘ஆமா... பைத்தியம் பிடிக்கிறா மாதிரி இருக்கு...’’ அடிவயிற்றில் இருந்து பீறிட்ட கதறலை அரும்பாடுபட்டு தொண்டையில் தடுத்து நிறுத்தினாள். மென்று விழுங்குவதற்குள் யுகங்கள் கழிந்தன. பதிலுக்குக் கோபப்பட்டு வார்த்தைகளைச் சிதறவிட்டிருந்தால் கூடப் பரவாயில்லை.

ஆனால், இந்தப் பரிவு... முட்டிக் கொண்டு அழுகை வந்தது. அவன் மார்பில் முகம் புதைக்க மனம் துடித்தது. வலுவான அந்தக் கரங்கள் தன்னை அணைத்தால்... மலையைக் கூடப் புரட்டி விடலாம். ‘‘ஹலோ... ஹலோ... வாசு..?’’ பாய்ந்த வெள்ளத்தில் கரை உடைய ஆரம்பித்தது. வாசு... வாசுகியின் சுருக்கம். நாள் நட்சத்திரம் பார்த்து அப்பாவும் அம்மாவும் அவளுக்கு வைத்த பெயர். ஆனால், செல்லப் பெயரான தாராவே நிலைத்துவிட்டது. ஸ்கூல் சர்ட்டிபிகேட் முதல் நண்பர்கள் வட்டாரம் வரை.

நினைவு தெரிந்து யாருமே அவளை ஜாதகப் பெயரைச் சொல்லி அழைத்ததில்லை. பெற்றோர் உட்பட சகலருக்கும் அவள் தாரா... தாரூதான். சிவா... சிவா மட்டும்தான் அந்தப் பெயரில் அழைப்பான். அதுவும் முழுமையாக அல்ல. சுருக்கமாக. வாசு. உடலும் மனமும் ஒருசேர நெகிழ நெகிழ... இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். அந்த விநாடியில் தன்மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. அருகாமையில் உருவம் கூட இல்லை. எங்கிருந்தோ குரல் மட்டும். என்றாலும் தன் நரம்புகள் அதிர்கின்றன. ‘வாசு’ என்ற அந்த அழைப்புக்கு ஏற்றபடி நர்த்தனமாடுகின்றன.

இதை மட்டும் சிவா அறிந்தால்..? ‘‘ஷட் அப்...’’ கத்தினாள். ‘‘அப்படிக் கூப்பிடாத. கேட்டதுக்கு பதில். வீட்டுக்கு வந்தியா..?’’ ‘‘இல்ல...’’ அதற்கு மேல் சிவா பேச இடம் தரவில்லை. செல்லை சோபாவில் வீசிவிட்டு தரையில் சரிந்தாள். வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டைக் கடந்ததும் அவன் பைக்கை நிறுத்தினான். ஹெல்மெட்டை எடுத்து மிரரை மூடினான். சரவணா ஸ்டோர்ஸுக்கு எதிரில் இருக்கும் புதரை நோக்கி நடந்தான். காற்றைத் தவிர சாலையில் யாரும் இல்லை.

நின்றபடியே பூட்ஸைக் கழற்றினான். மூன்றடிக்குப் பின் புதருக்குள் ஊடுருவினான். முழங்காலிட்டு அந்த இடத்தை முத்தமிட்டான். ‘ஆசீர்வதியுங்கள்... உங்கள் பணியை நாங்கள் நிறைவேற்றுகிறோம்...’ எழுந்தவன் திரும்பிப் பார்க்காமல் தன் பைக்கை அடைந்தான். ஹெல்மெட்டை பெட்ரோல் டாங்க் மீது வைத்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். திருவான்மியூர் சாலையை அடைந்தான். பாலத்துக்குக் கீழே காமாட்சி மருத்துவமனையை நோக்கி. இடம் தெரியும். மூன்று முறை வந்திருக்கிறான்.

ஏரியின் மீது பூச்சிகள் அந்த இருட்டிலும் பறந்து கொண்டிருந்தன. சைட் ஸ்டாண்ட் போட்டுவிட்டு இறங்கினான். ஏரிக்கரையில் இருந்த அந்த இடத்தை அடைந்ததும் பூட்ஸைக் கழற்றினான். பவ்யமாக கைகளைக் கட்டியபடி குனிந்த தலையுடன் முன்னோக்கி நடந்தான். குறிப்பிட்ட எல்லையைத் தொட்டதும் - உச்சி முதல் பாதம் வரை தரையில் பட நமஸ்கரித்தான். எழுந்திருக்கும்போது அவன் கண்கள் கலங்கியிருந்தன. முதுகைக் காட்டாமல் பின்னோக்கி நகர்ந்தவன் சட்டென்று நின்றான். பக்கவாட்டில் ஒரு முட்டை தெரிந்தது. எடுத்தான். பார்த்தான்.

கண்கள் விரிந்தன. இருட்டிலும் அதன் மீது எழுதப்பட்டிருந்த சொல் ஒளிர்ந்தது. ‘Mrs.V’. தன் ஜெர்கின் பாக்கெட்டுக்குள் அதை பத்திரப்படுத்தினான். பின்னோக்கி நடந்தபடி பைக்கை அடைந்தான். இடுப்புக்குக் கீழே அதிர்ந்தது. பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்தான். மெசேஜ். விரலால் தொட்டுத் திறந்தான். ‘எண்: 14, F/5, ஸ்கூல் தெரு, ராதா நகர்...’ மனம் லேசானது. காம்பவுண்ட் எண் 14. கூட்டினால் ஐந்து. அதற்குள் ப்ளாட் நம்பர் F/5. கடைசியாக கார்க்கோடகன் அந்த வீட்டாருக்குத்தான் முட்டை கொடுத்திருக்கிறார். அதுவும் சரியாக ஐந்து.

ஐந்து தலை! ஹெல்மெட்டை தலையில் மாட்டும்போது கை ஒளிர்ந்தது. அழைப்பு. தலைக்கவசத்தை எடுத்து விட்டு செல்லைப் பார்த்தான். UNKNOWN NUMBER. திரையை வலது பக்கம் தள்ளினான். ‘‘இடம்?’’ ‘‘தெரிஞ்சுடுச்சு. அட்ரஸ் இப்பதான் வந்தது...’’ பவ்யமாக பதில் சொன்னான். ‘‘ஸ்ரீரங்கம் ப்ளூ ப்ரிண்ட் வேணும்...’’ ‘‘ஒரு மணி நேரத்துல உங்க கைல இருக்கும்...’’ ‘‘வேறொரு செய்தியும் சொல்லியிருக்கார். அதுவும் தேவை...’’ ஒளி அணையும் வரை காத்திருந்தவன் கைபேசியை பின்பக்க பாக்கெட்டில் சொருகினான். கவசம் தலைக்குள் பொருந்தியது. அரை வட்டமாக பைக்கை திருப்பி ஆக்சிலரேட்டரை முறுக்கினான்.

ராதா நகருக்குள் நுழைந்தான். ராமர் கோயிலுக்கு பின்பக்கம். அம்பு போன்ற  ஃப்ளோரசன்ட் போர்டு, ‘ஸ்கூல் தெரு’வை சுட்டிக்காட்டியது. ஸ்கூல்... ஆசான்... ஆச்சாரியார்... சத்தம் வராமல் இருப்பதற்காக மெல்ல பைக்கை அந்த சாலைக்குள் உருட்டினான். அக்கம்பக்கம் பார்த்தபடியே வந்தான். சரியாக தண்ணீர் தொட்டிக்கு முந்தைய அபார்ட்மென்ட்டில் வண்டியை நிறுத்தினான். எண்: 14. தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து கனமான ஒரு பொருளை எடுத்தான்.

அது செப்புத் தகடு. ஒரு கிலோ எடை கொண்டது. உள்ளங்கை அளவுக்கு இருந்த அந்தத் தகட்டில் ஐந்து வட்டங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு வட்டத்துக்குள்ளும் மனித உருவங்கள் நெளிந்தபடி காட்சி தந்தன. அனைத்துக்கும் நடுவில் 7 எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. மரியாதையுடன் அதை கண்களில் ஒற்றிக்கொண்டு கேட்டைத் திறந்தான். F/5 எங்கிருக்கிறது என்று தேடி முதல் மாடியை அடைந்தான்.

க்ரில்லுக்கு அப்பால் மரக்கதவு காட்சியளித்தது. இரண்டும் உள்பக்கமாகப் பூட்டியிருந்தன. கையில் இருந்த தகட்டை இறுக்கிப் பிடித்தான். அந்தத் தகட்டை வைத்துதான் இதற்கு முன் நான்கு கொலைகளைச் செய்திருக்கிறான். எல்லாம் அந்த UNKNOWN NUMBERக்காக. இப்போது ஐந்தாவது கொலை... பெருமூச்சுடன் தகட்டை தன் கண் முன்னால் கொண்டு வந்தான். அதன் நடுவில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளை முத்தமிட்டான். அந்த ஏழு எழுத்துகள் - ‘KVQJUFS’.

(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்