உயிரமுது



தமிழர் உணவுகளின் உன்னத சுவை

ராஜமுருகன் - 5

‘என் பையன் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட மறுக்கிறான். பள்ளிக்கூடத்தில் பாடத்தையே கவனிப்பதில்லை என்று டீச்சர் சொல்கிறார். நண்பர்களுடன் அடிக்கடி சண்டை போடுகிறான். வீட்ல யார் கூடவும் பேசாமல் தனியாகப் போய் உட்கார்ந்துகொள்கிறான். கைக்கு கிடைக்கும் பொருளை எல்லாம் தூக்கி வீசுகிறான். மூணு வயது வரைக்கும் அவன் இப்படி இல்லையே! இப்போது மட்டும் என்ன ஆச்சு? என் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ’ என டாக்டர்களிடம் புலம்பும் பல தாய்மார்களைப் பார்த்திருப்போம்.

முதலில் உங்கள் குழந்தைகளை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்கள் தனித்துவமானவர்கள். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதால் உங்களின் நிம்மதியும் குழந்தையின் வாழ்க்கையும்தான் பாதிப்படைகிறது. உங்கள் குழந்தைக்கு  ‘ஆட்டிஸம்’ இருக்கலாம். இது ஒரு நோய் கிடையாது. மூளையில் நிகழும் வேதியியல் மாற்றங்கள் சரிவர சுரக்காததுதான் இதற்குக் காரணம். பெற்றோர்களின் உணவுப் பழக்கம், வாழ்வியல் சரியாக இருந்திருந்தால் குழந்தைக்கு இந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை.

இம்மாதிரியான சுரப்பு குறைவாக உள்ள குழந்தைகள், தங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களிடம் தனித்திறமை அளவுக்கு அதிகமாக இருக்கும். அதை நாம் கண்டுபிடித்து அவர்களுக்கு  உகந்த உலகத்தை உருவாக்கித் தரவேண்டும். முக்கியமாக உணவுமுறையில் மிகுந்த கவனம் தேவை. சுரப்பி மாறி மாறி சுரப்பதால் மலச்சிக்கல் உண்டாகும். ஆட்டிஸம் உள்ள குழந்தைகளின் ஜீரண உறுப்பு பலவீனமாக இருப்பதால் கடினமான உணவுகளைத் தவிர்த்து, இலகுவான உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

பிஸ்கட், கேக், எண்ணெய் பலகாரம், சீஸ், பன்னீர், அகத்திக் கீரை முதலிய உணவுகளை முக்கியமாகத் தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த சிறுதானிய உணவுகள், எள்ளுருண்டை, பொட்டுக்கடலை உருண்டை, கொழுக்கட்டை, இடியாப்பம், ஆப்பம் போன்ற எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய சத்து மிகுந்த உணவுகளைத் தரலாம். பாரம்பரிய நெல்லரிசி வகைகள், ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் நல்ல முன்னேற்றம் தரும்.

சூரிய ஒளி குழந்தையின் மீது படும்படியாக நடக்க வைக்க வேண்டும். தூய்மையான காற்றைச் சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டும். இது அவர்களின் சுரப்பிகளைச் சீராக்கும். குளிக்கும் முறையில் கவனமாக இருக்க வேண்டும். முதலில் தண்ணீரை முழங்காலுக்குக் கீழும், பின் இடுப்புக்குக் கீழும் ஊற்ற வேண்டும். பிறகு தொப்புள் மட்டும் நனையும்படி கையை வைத்து தொப்புளுக்கு தண்ணீரை ஊற்றவும்.

பின் தலையை உடம்பிலிருந்து சற்று தள்ளி வைத்து தலைக்கு மட்டும் ஊற்றவும். பின் தலையுடன் உடல் முழுக்க நனையும்படி தண்ணீரை ஊற்றவும். பின் எப்பவும் போல உங்கள் விருப்பம் போல் குளித்து குதூகலிக்கலாம். இந்த முறை குளியல் உள்உறுப்புகளை உறுதியாக்கும். உடல் சூட்டை குறைக்கும்.

தாய் கருவுற்று இருக்கும் போது நார்ச்சத்து நிறைந்த உணவு, பழங்கள், கொடி பசலிக்கீரை என சத்தான உணவுகளை உண்டு குழந்தையின் நரம்பு மண்டலத்தை உறுதியாக்கலாம். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறுமாதம் தாய்ப்பாலை மட்டும் தர வேண்டும். தாய்ப்பால் மட்டுமே மிகச் சிறந்த நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். இது குழந்தையின் சுரப்பிகளைச் சீராக்கும்; குறைபாடும் குறையும். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

(பருகுவோம்...)

படங்கள்: ஆ. வின்சென்ட் பால்,சுப்பிரமணி

கோவை இலை துவையல்

தேவையான பொருட்கள்

கோவை இலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 15 எண்ணிக்கை
சீரகம் - 3 சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - 2 சிட்டிகை
நல்லெண்ணை - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை, எண்ணை - தேவையான அளவு.

செய்முறை:

நல்லெண்ணையைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். நல்லெண்ணையை சூடாக்கி அரைத்த விழுதைப் போட்டு நன்கு கைவிடாமல் கிளறி விடவும். எண்ணை பிரிந்து, பச்சை வாசனை போகும் வரை கிளறவும். பின் கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்து சேர்த்துக் கிளறவும். மிகச் சிறு கசப்புடன் உடல் சூட்டைக் குறைக்கும்.