எனக்குப் பிரச்னை கொடுப்பது யார்?



எஸ்.வி.சேகர் திகுதிகு

‘மணல் கயிறு’ உருவான கதையே ஒரு மினி வரலாறு. என்னோட ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ நாடகத்தின் நூறாவது ஷோவுக்கு வந்திருந்தார் கே.பாலசந்தர். ‘என்னடா டிராமா போடுறீங்க? சேகர் வெறுமனே உட்கார்ந்திருக்கான். எல்லாரும் சுத்தி நின்னு பேசிட்டிருக்கீங்க! இது என்ன கதாகாலட்ஷேபமா? டிராமாவா?’னு பாலசந்தர் கேட்டார். அப்போ விசுவும் அங்கே இருந்தார்.

எங்க குழுவில் இருந்த ஒருத்தர், ‘விசுவால இந்த மாதிரி நகைச்சுவையா டிராமா போட முடியுமா?’னு சவால்விட்டார். விசு உடனே ‘மோடி மஸ்தான்’னு தலைப்பையும் வச்சுட்டு டிராமாவையும் ரெடிபண்ணிட்டார். ‘மோடி மஸ்தான்’ ஹிட் ஆக, அதுவே ‘மணல் கயிறு’னு பெயர் வச்சு, சினிமாவாகவும் வந்தது. அதை தயாரிச்சவரும் பாலசந்தர்தான்.’’ வெளிப்படையாகப் பேசுகிறார் எஸ்.வி.சேகர்.

‘‘ ‘மணல் கயிறு 2’ அதே கதைதானா? படம் எப்படி வந்திருக்கு?’’
‘‘இது என்னோட அடுத்த தலைமுறை கதை. அந்தப் படத்துல நான் போட்ட எட்டு கண்டிஷன் ரொம்ப ஃபேமஸ். இதுல என் பொண்ணு பூர்ணா கண்டிஷன் போடுறாங்க. நான், விசு, குரியகோஸ் ரங்கா, ஜெயஸ்ரீ தவிர மீதி எல்லாரும் யங்ஸ்டர்ஸ். அறிமுக இயக்குநர் மதன்குமார் இயக்கியிருக்கார். அதே கிட்டுமணியா நானும், அதே நாரதர் நாயுடுவா விசுவும் நடிச்சிருக்கோம். சாந்திகிருஷ்ணா நடிச்ச கேரக்டரை ‘தென்றலே என்னைத் தொடு’ ஜெய பண்ணியிருக்காங்க.

2008ல ‘மணல் கயிறை’ ரீமேக் பண்ணலாம்னு நினைச்சோம். என் மகன் அஷ்வினை நடிக்க வைக்க விரும்பினேன். ‘மொதல்ல சீரியஸா ஒரு படம் பண்றேன்ப்பா’னு அவன் சொல்லிட்டான். ‘நினைவில் நின்றவன்’ பண்ணினான். அந்தப் படம் நல்ல கதைதான். ஏனோ போகலை. அடுத்து ‘வேகம்’ பண்ணினான். அதுவும் சரியா போகலை. எனக்கு சரியான முறையில மார்க்கெட் பண்ணத் தெரியலை. ஆனா அந்தப் படங்கள் சன் டி.வி.யில் வந்தபோது பெரிய வரவேற்பு இருந்துச்சு. கரெக்ட்டான தயாரிப்பாளர் அமைந்தால்தான் உன் படத்தை நல்லவிதமா கொண்டு வருவாங்கன்னு அவன்கிட்ட சொன்னேன்.

சமீபத்துல தேனாண்டாள் முரளியைப் பார்த்த அஷ்வின், ‘உங்க அப்பா ராமநாராயணன் சார் டைரக்‌ஷன்ல எங்க அப்பா 29 படங்கள் நடிச்சிருக்கார். நீங்க ஏன் என்னை வச்சு ஒரு படம் கூட எடுக்க மாட்டேன்ங்குறீங்க?’னு விளையாட்டா கேட்டிருக்கான். அவரும் சிரிச்சுகிட்டே, ‘நீங்களே ஒரு நல்ல ஸ்கிரிப்ட் சொல்லுங்க’ன்னு கேட்க, ‘அப்பா நடிச்ச ‘மணல் கயிறு 2’ பண்ணலாம்’னு சொல்லியிருக்கான். அப்படி ஆரம்பிச்சதுதான் இது.

இப்போ குடும்ப கட்டமைப்பு குறைஞ்சுகிட்டே வருது. விவாகரத்துகளும் அதிகரிச்சிக்கிட்டிருக்கு. இதையெல்லாம் மனசுல வச்சு இந்தப் படத்தை பண்ணியிருக்கோம். இந்தப் படத்துல பூர்ணா போடும் கண்டிஷன்கள் என்ன? என்பதை ஒரு போட்டியா வைக்கப்போறேன். நீங்க எழுதுற கண்டிஷன்களும், பூர்ணா போட்டிருக்கற கண்டிஷன்களும் ஒண்ணா இருந்தா அவங்களுக்கு தங்கக்காசு பரிசு கொடுக்கப்போறேன்.’’

‘‘அஷ்வின் உங்களை மாதிரி பெயரெடுக்கலைன்னு வருத்தமிருக்குதா?’’
‘‘இந்த நவம்பர்ல இருந்துதான் அஷ்வினுக்கு சினிமாவில் நல்ல நேரம் தொடங்குதுனு ஜோதிடத்திலேயே சொல்லியிருக்கு. அதை நானும் நம்புறேன். அவனோட ஏழு வயசிலேயே ‘வண்ணக்கோலங்கள்’ டி.வி.சீரியல்ல நடிச்சிருக்கான். அப்பவே எவ்வளவு நீளமான வசனம்னாலும் கேட்டதும் அதை திருப்பிச் சொல்லுவான். அவன் ஒன் டேக் ஆக்டர். இந்தப் படத்துக்காக 24 கிலோ எடையைக் குறைச்சு ஸ்மார்ட்டா ஆகிட்டான்.’’

‘‘நாடகங்களுக்கான வரவேற்பு இப்போ எப்படி இருக்குது?’’
‘‘எனக்கு சினிமாவில 40 வருஷ அனுபவம்னா.. நாடகத்துல 50 வருஷ அனுபவம் இருக்கு. இதுவரை 24 நாடகங்கள், 6200 ஷோக்கள் பண்ணியிருக்கேன். இப்ப ஐ.டி. இளைஞர்கள் நாடகங்களை விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. ரெண்டாயிரம் ரூபாய் டிக்கெட் விலை வச்சாலும் சந்தோஷமா வந்து பார்த்து ரசிக்கறாங்க.’’

‘‘உங்க படம் சென்ஸார் செய்யப் போன இடத்துல ‘கபாலி’ பத்தி பேசியிருக்கீங்க...’’
‘‘வம்பு பண்ணல. ‘மணல் கயிறு 2’ பட சென்ஸாருக்கு போனபோது நான் மத்திய தணிக்கைக் குழு சென்ஸார் மெம்பராக போகலை. இந்தப் படத்தோட எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகத்தான் போனேன். ‘க்ளீன் யூ’ சர்ட்டிபிகேட் கொடுக்கவேண்டிய என் படத்துக்கு ‘யூ/ஏ’ கொடுக்கறேன்னாங்க. உடனே நான் சென்ஸார் அதிகாரிகிட்ட, ‘நீங்க யூ சான்றிதழ் கொடுக்கலைன்னா நான் இதை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப மாட்டேன். நீதிமன்றத்துல முறையிட்டு இதுக்கான நியாயத்தைக் கேட்பேன்.

‘கபாலி’ படத்திற்கு எந்த அடிப்படையில் ‘யூ’ சான்றிதழ் கொடுத்தீங்க? என்பதையும் கேட்பேன். தரமான குடும்பப் படமான ‘மணல் கயிறு’க்கு ‘யூ’ கொடுக்காத சென்ஸார்... வன்முறை, போதைப் பொருள், அண்டர்கிரவுண்ட் தாதா கதையான ‘கபாலி’க்கு மட்டும் எப்படி ‘யூ’ கொடுத்தாங்க?னு என் தரப்பு நியாயத்தைத் தான் கோர்ட்டுல கேட்கப் போறேன். நானும் சென்ஸார்ல தானே இருக்கேன்.

தணிக்கை சட்டம் பத்தி ஒரு புத்தகமே எழுதியிருக்கேன். எந்த படத்துக்கு எப்படி சான்றிதழ் கொடுக்கணும்னு எனக்கும் தெரியும். இதைத்தான் நான் அவங்ககிட்ட கேட்டேன். வேற எதோ காரணத்தை வச்சு யாரோ எனக்கு பிரச்னை கொடுக்க முயற்சி பண்ணியிருப்பாங்களோன்னுதான் இப்ப எனக்குத் தோணுது. பிரச்னை கொடுக்கக் கூடிய எந்த விஷயமும் இதுல கிடையாது.’’

-மை.பாரதிராஜா