பிரிவினை



-கீதா சீனிவாசன்

இளையவன் கதிரின் திருமணம் நடந்து ஆறு மாதத்திற்குள் அந்தப் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. கதிரும், அணணன் ராமுவும் அப்பா அம்மாவிடம் ஒன்றாகச் சொன்னார்கள். ‘‘அப்பா.. நானும் இவனும் சிட்டில ஃப்ளாட் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்.... வேற வழியில்ல... இந்த வீட்ட வித்து பணத்தை பிரிச்சுக் கொடுங்க... அப்புறம் உங்க ரெண்டு பேரையும் நாங்களே ஆறு ஆறு மாசம்னு வெச்சுக்கறோம். இனிமேலும் கூட்டுக் குடும்பம் சாத்தியமில்ல.’’

அப்பா யோசித்தார். ‘‘உங்க விருப்பப்படியே வீட்ட வித்துரலாம். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி ஆறு ஆறு மாதங்கற திட்டம் வேண்டாம்.  நானும் உங்கம்மாவும் ஆளுக்கொரு மகனோட இருந்திடறோம். அப்பறம் தேவைப்பட்டா இடம் மாறிக்கறோம். இதுக்கு நீங்க ஒத்துக்கணும்!’’ மகன்கள் யோசித்தனர். பிறகு சரி என்றனர். அன்றிரவு அப்பாவிடம் அம்மா கேட்டாள்... ‘‘ஏங்க இந்த முடிவு?’’

‘‘இல்லம்மா... அவங்க விரும்பாட்டி கூட அவங்களை ஒரு ஆறு மாசம் நம்ம கண்காணிப்புலேந்து விடக்கூடாது. கூடவே இருந்து நல்லது கெட்டதுல பங்கெடுத்துக்கணும். ஊர்ல.. ‘பரவால்ல பசங்க.. பெத்தவங்களை கூட வெச்சுக்கறாங்க’ன்னு பேர் வாங்கணும். அதனால யாராவது ஒருத்தர் அவங்க கூடவே இருக்கணும். நம்ம பிரிவு பெரிய விஷயமில்ைல. போன் இருக்கு பேசிக்கலாம். அப்பப்ப நான் வந்து பாத்துட்டு போறேன்..’’ பிராக்டிக்கலாக யோசித்து தன் முடிவை விளக்கினார் அப்பா!