மாற்றம்
-எஸ். இராமன்
‘‘உங்க அம்மா, அவங்களால் முடிஞ்ச சின்னச் சின்ன உதவியைக்கூட செய்யாமல், என்னை தினமும் கடுப்பேத்தறாங்க. நான் கஷ்டப்படணும்ங்கற ஒரே நோக்கத்தில், அவங்க எதையும் கண்டுக்காமல், மாமியார்ங்கற மமதையில், அக்கம்பக்கத்து வீடுகளில் வம்பளந்துக்கிட்டும், டி.வி. சீரியல் பார்த்துக்கிட்டும் காலத்தைக் கழிக்கிறாங்க. இதில், புதுசா குடி வந்திருக்கும் எதிர்த்த வீட்டு மாமியார் பொம்பளை, வம்பளப்பில் இன்னும் என்ன புதுசா சொல்லிக்கொடுக்கப்போகிறாளோ... தெரியலையே!’’ என்று கணவன் நந்தகுமாரிடம் நொந்து கொண்டாள் நந்திதா.
ஒரு மாதம் கழித்து... காலையில் கண்விழித்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியம்! ‘‘மாமியார் சமையல் அறையில் பிஸியாக இருந்தாள். இடைப்பட்ட வேளையில், பேத்தியை குளிக்கச்செய்தாள். மாலை, நந்திதா வீடு திரும்புவதற்குள் இரவுச் சாப்பாடு ரெடியாக இருந்தது. தற்காலிக சம்பவமாக இல்லாமல், பல நாட்கள் மாமியாரின் இனிய சேவையைக் கண்டு நந்திதா காரணம் புரியாமல் ஆச்சர்யத்தில் தவித்தாள்.
‘‘மாமியார்ங்கற மமதையைப் புறந்தள்ளிவிட்டு, வேலைக்குப் போற மருமகளுக்கு எந்தவிதங்களில் உதவியா இருக்கலாம் என்பதை உங்களைப் பார்த்துத்தான் கத்துக்கிட்டேன். இதுவரை நான் நடந்துக்கிட்ட விதத்தை நினைச்சால் எனக்கே வெட்கமா இருக்கு!’’ தன் மாமியார் பக்கத்து வீட்டு மாமியாருடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அக்கம்பக்கத்து பழக்கத்தினால் நல்ல மாற்றங்களும் வரலாம் என்பதை நந்திதா உணர்ந்தாள்.
|