நடிப்பு
-மா.சரவணன்
கையில் பெட்டியுடன் வந்த தன் மகள் ஆர்த்தியைப் பார்த்து துணுக்குற்றாள் பிரபல நடிகை மதுமதி. ‘‘அம்மா, அந்தாள்கூட இனி நான் வாழ மாட்டேன். என்னை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டார். மாடு மாதிரி என்னை வீட்டு வேலை செய்யச் சொல்றார்’’ என்று புலம்பினாள் ஆர்த்தி. மதுமதியின் கண்கள் சிவந்தன.
‘‘என்னது உன்னைப்போய் சமைக்கச் சொல்றானா! என்ன திமிர் அவனுக்கு! ப்ளடி ராஸ்கல்! நான் அப்பவே சொன்னேன், இந்த காதலெல்லாம் உனக்கு வேண்டாம்னு! கேட்டியா! நீ பேசாம இரு. அவனை உடனே விவாகரத்து செய்ய ஏற்பாடு செய்யறேன். அப்புறம் வீட்டோட மாப்பிள்ளையா எவனையாவது பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்!’’
இடையில் போன் ஒலிக்க, எடுத்தாள். மறுமுனையில் அவளின் மேனேஜர் உற்சாகமாக, ‘‘மேடம், உங்களுக்கு நேஷனல் அவார்டு அறிவிச்சிருக்காங்க. போன படத்தில புருஷனை விட்டுப் பிரிஞ்சு வர்ற பெண்ணிடம், குடும்பம் நடத்துற விதத்தை எடுத்துச் சொல்லி அவ புருஷனோட சேர்த்து வைக்கிற இடத்துல உங்க நடிப்பைப் பார்த்து பிரமிச்சுப்போய் இந்த விருதை உங்களுக்கு தர்றாங்க...’’ மேற்கொண்டு அவர் பேசிக்கொண்டே போக, மதுமதி எதுவும் கூறாமல் போனை வைத்தாள்!
|