‘‘பத்தடி தூரம்கூட நடக்க முடியாது. உட்கார்ந்தா மூச்சு முட்டும். அடிக்கடி மயக்கம் வரும். டாக்டர்கிட்டே போனா இதயத்துல பிரச்னைனு சொன்னாங்க. எத்தனையோ ஆஸ்பத்திரிகளுக்கு அலைஞ்சும் குணமாகல. ‘இனி வாழ்க்கையே அவ்வளவுதான்’னு கலங்கிக் கிடந்த என் உசுர ரோபோ காப்பாத்திருச்சு. இது எனக்கு இரண்டாவது ஜென்மம்’’ என நன்றிப்பெருக்கை விழிகளில் கோர்க்கும் கண்ணீரால் வெளிப்படுத்துகிறார் விஜயகாந்த்.
மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோ இப்போது மனிதனுக்கே அறுவைசிகிச்சை செய்வது மருத்துவ உலகின் ஹைடெக் சாதனை. கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சைகளுக்கு ரோபோவை பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இதயத்தில் இரட்டை வால்வுகளை ரோபோ மூலம் மாற்றுவது உலகிலேயே இதுதான் முதல் முறை. இந்தச் சாதனையை சாத்தியப்படுத்தியிருக்கிறார் சென்னை செட்டிநாடு ஹெல்த் சிட்டி இதய சிகிச்சை நிலைய இயக்குநர் டாக்டர் ரவிக்குமார்.
‘‘ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்வது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் வளர்ந்து வருகிறது. இது மிகத்துல்லியமாக இருப்பதும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இதுவரை நெஞ்சுப்பையில் செல்லும் ஒற்றை வால்வு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ரோபோ உதவியுடன் நிகழ்ந்திருக்கிறது. இதயத்தில் இரட்டை வால்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை.
திருவண்ணாமலையைச் சேர்ந்த டிரைவர் விஜயகாந்த். 23 வயதுடைய இந்த இளைஞருக்கு இதயத்தில் பிரச்னை. எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்தோம். இதயம் வீக்கமடைந்து பெரிதாக இருந்தது. நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வரவேண்டிய ரத்தம் நுரையீரலிலேயே தங்கி இருந்தது. இரண்டு வால்வுகள் பழுதானதோடு ரத்தக்கசிவு இருந்ததையும் கண்டுபிடித்தோம். மிகவும் பலவீனமாக இருந்தது அவரது நிலைமை. அவருக்கு ஒரே நேரத்தில் இரட்டை வால்வு தேவைப்பட்டது. மிகச் சிரமமான சிகிச்சை என்பதால் ரோபோ உதவியை நாடினோம்.
இதற்கான உயர்தொழில்நுட்பம் கொண்ட 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோபோ வாங்கினோம். பைபாஸ் இயந்திர உதவியுடன் இதயத்துடிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம். பிறகு இந்த ரோபோ உதவியுடன் இரட்டை வால்வுகளும் அகற்றி, புதிய வால்வுகளை பொருத்தினோம்.
இதயத்தில் ஓட்டை, ஆட்ரியல் செப்டல் குறைபாடு சரி பார்ப்பு என 7 வகை இதய நோய்களுக்கு ரோபோவை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும். ரோபோ கைகள் மூலம் அறுவைசிகிச்சை செய்யும்போது டாக்டர்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக ‘எந்திரன்’ படத்தில் வரும் ரோபோ போல மனித உருவில் இது இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாம். இந்தக்கருவியில் இரண்டு கைகளும் ஒரு கேமராவும் இருக்கும். இந்த ரோபோ இதயத்தில் வெட்டுவது, ஒட்டுவது, தைப்பது என பல வேலைகளை மிகத்துல்லியமாகச் செய்யும். இதயம் மிகவும் சிக்கலான பகுதி என்பதால் ஓப்பன் சர்ஜரி ஸ்பெஷலிஸ்ட்களால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியும். ஆனால், இன்னும் பல மடங்கு சிறப்பாக இதைச் செய்ய இந்த ரோபோ உதவும்.
சாதாரணமாக ஆபரேஷன் செய்வதற்கு நெஞ்சுப்பகுதியில் 22 சென்டிமீட்டர் நீளத்துக்கு கத்தியால் வெட்ட வேண்டியிருக்கும். ரோபோ மூலம் சிகிச்சை அளிக்க 6 செ.மீ. வெட்டினால் போதும். விரைவில் காயம் குணமாவதுடன் ரத்த இழப்பும் வலியும் குறைவாகவே இருக்கும்.
இப்போது புது வாழ்வு பெற்றிருக்கிறார் விஜயகாந்த். இது இதய அறுவை சிகிச்சையில் புதிய சாதனை மட்டுமல்ல... ரோபோட்டிக் துறையில் புதிய புரட்சியும் கூட’’ என மலர்ச்சியாகப் பேசுகிறார் டாக்டர் ரவிக்குமார்.
ஆர்.எம்.திரவியராஜ்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்