நடுத்தர வர்க்கத்து இளைஞனின் இயல்பான வாழ்க்கைக் கதையை அலட்டிக்கொள்ளாமல், அதிர்ந்து சொல்லாமல் மெல்லிய நீரோடையாக 'சிவா மனசில சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படங்களில் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி வெற்றியடைந்த இயக்குநர் ராஜேஷ்.எம். அவரது ஹேட்ரிக் முயற்சியாக அமைகிறது ரெட் ஜெயன்ட்டின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’. சுருங்கச் சொன்னால் ‘ஓகே ஓகே’.
‘‘தலைப்பைப் பார்த்தாலே தெரிஞ்சிடும் இதுவும் ஒரு காதல் கதைன்னு. ஆனா கல்லையும், கண்ணாடியையும் பார்த்துட்டு ஒரு முரட்டு வாலிபனுக்கும், மென்மையான பெண்ணுக்கும் வர்ற காதல்னு எல்லாம் நீங்களா கற்பனை பண்ணிக்க வேண்டாம். இலக்கிய அழகுக்காகவும், என் படத்திலயே வந்த பாடல் வரியானதாலும் இந்தத் தலைப்பு. மத்தபடி இதுவும் ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையையும், அதில வர்ற காதலையும் சொல்ற படம்தான். இதில இருக்கிற கூடுதல் சுவாரஸ்யம், என்னோட ஹீரோ...’’ என்கிறார் ராஜேஷ்.
அவர் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. கடந்த படங்களில் ஜீவா, ஆர்யா என்று முகம் தெரிந்த நடிகர்களை ஹீரோவாக்கிய அவர், இந்தப்படத்தில் நன்கு அறிந்த... ஆனால் ஒரு புதுமுகத்தை ஹீரோவாக்குகிறார். அவர் உதயநிதி ஸ்டாலின். முதல்வரின் பேரன், துணை முதல்வரின் மகன், ரெட் ஜெயன்ட்டின் தயாரிப்பாளர் என்றெல்லாம் நமக்கு அறிமுகமான முகங்களிலிருந்து முற்றிலும் விலகி ஹீரோவாகிறார் உதயநிதி. அவரை ஹீரோவாக்கும் வாய்ப்பு ராஜேஷுக்குக் கிடைத்திருப்பது திரையுலகில் தனி கவனம் பெற்றிருக்கிறது.
‘‘இது எனக்கு மூணாவது படம்னாலும், இதுக்கான முதல் விதை எஸ்.எம்.எஸ் படம் வந்த உடனேயே போடப்பட்டது. அந்தப்படத்தைப் பார்த்த உதயநிதி, என்னைப் பார்க்கணும்னு தேடியிருக்கார். ஆனா அவரோட சந்திப்பு எனக்கு ‘பாஸ்’ படத்தோட போஸ்ட் புரொடக்ஷன் சமயத்திலதான் கிடைச்சது...’’ என்ற ராஜேஷ் தொடர்ந்தார்.
‘‘என் படத்தின் மேலிருக்க நம்பிக்கைலதான் ‘பாஸ்’ படத்தையும் அவரே வாங்கி ரிலீஸ் செய்தார். அது பெரிய வெற்றிப்படமான காரணங்கள்ல அதுவும் ஒண்ணு. சினிமாவை நேசிச்சுதான் அவர் தயாரிப்பாளர் ஆனார். ஆனா அதைத் தாண்டி அவர் நடிக்கவும் ஆசைப்பட்டதை சினிமா மேல அவருக்கிருந்த காதல்னு சொல்லலாம். ‘ஆதவன்’ல கடைசி ஒரே ஒரு சீன்ல காமெடியா வருவார். ஆனா அதுதான் நடிப்பின் மேல அவருக்கிருந்த விருப்பத்துக்கான அடையாளம். அவருக்குள்ளிருந்த ஹீரோ ஆசைக்கு என்னை டைரக்டரா தேர்ந்தெடுத்ததும் அவரேதான். அவர் ஹீரோவா நடிக்கப்போறார்னு கேள்விப்பட்டதும் கே.எஸ்.ரவிக்குமார் சார்கூட ‘ஆதவன்’ அனுபவத்தை என்கிட்ட சொல்லி, ‘அவரால முடியும்’னு சொன்னார்.
பிறகுதான் இந்தப்படத்தோட லைன் சொன்னேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. வேலைகள் ஆரம்பமாச்சு. அவருக்கு நடிப்பு ஆர்வம் இருந்தாலும், எந்த முன் அனுபவமும் எனக்குத் தெரிஞ்சு இல்லை. அதனால போட்டோ செஷனுக்கும் முன்னால ஒரு ‘டெஸ்ட் ஷூட்’ பண்ணலாம்னு நினைச்சேன். அதில நான் எதிர்பார்த்ததுக்கும் மேலயே அற்புதமா நடிச்சார். வசன உச்சரிப்புகள் தெளிவா இருந்தது. புதுசா நடிக்க வர்றவங்ககிட்ட இருக்கற தயக்கம் அவர்கிட்ட இல்லை. அவருக்கான ஹீரோயின் தேடல்ல ஹன்ஷிகா வந்து பொருத்தமா உக்காந்தாங்க. நடுத்தர வர்க்க இளைஞன் கேரக்டருக்கு உதயநிதி எப்படிக் கச்சிதமா பொருந்தினாரோ, அவருக்குப் பொருந்தி வந்தாங்க ஹன்ஷிகா. ரெண்டுபேரும் சின்னப்புன்னகை பூத்து நின்ன ஸ்டில்களை எடுத்ததுமே எதிர்பார்த்த இடத்துக்குப் படம் போய்ச் சேர்ந்துடும்னு நம்பிக்கை வந்துடுச்சு.
இந்தப்படத்தில என்கூட ஹாரிஸ் ஜெயராஜ் புதுசா கைகோர்க்கிறார். அவருக்கும், ரெட் ஜெயன்ட்டுக்கும் இருந்த அக்ரிமென்டுக்கு என் படம் சரியா வந்து சேர்ந்தது. அவருக்கும் என்கூட வேலை செய்ய ஆர்வம் இருந்தது. என்னோட ரெண்டு படங்கள்ல தோள்ல கைபோட்டு வந்த நண்பன் யுவன்கிட்ட போய், ‘இந்தப்படம் ஹாரிஸ் கூட பண்ணிட்டு வந்துடறேன்’னு சொல்லிட்டு வந்தேன். எங்க அண்டர்ஸ்டேண்டிங் அப்படிப்பட்டது. ஒளிப்பதிவுக்கு பாலசுப்ரமணியெம் இருக்கார்.
ஹாரிஸ் கூட கம்போஸிங்குக்கு சிங்கப்பூர் போய்வந்த கையோட படத்தை ஆரம்பிச்சுட்டோம். சந்தானம் இந்தப்படத்திலும் எனக்கு மிஸ்ஸாகலை. சிரிக்கவும், ரசிக்கவும் புருவம் தூக்க வைக்காத காதலோட, குடும்ப மேன்மையை தூக்கிச் சொல்ற படமானதால, ஃபைட் மாஸ்டருக்கு இதில வேலை கொடுக்கப்போறதில்லை. சென்சார் வரும்போதே ‘யு’ சர்டிஃபிகேட் எழுதி வச்சுக்கிட்டு வந்து படத்தை மதிப்பிட ஆரம்பிக்கலாம்ங்கிற அளவில நீட்டான படமா வரும் ‘ஓகே ஓகே’..!’’
ஓகே...ஓகே..!
வேணுஜி