அழிந்து வரும் தமிழர் இசைக் கருவிகள் திமிரி நாதஸ்வரம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         பூர்வமாகக் கிடைக்கும் உன்னதப் பொருட்களை எல்லாம் இறைவனுக்கு படைத்து வழிபடுவது தொல்தமிழர் மரபு. இசையைப் படைத்து வழிபடுவதும் அந்தப் பண்பாட்டின் நீட்சிதான். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு இசைக்கருவியைப் படைத்து, அக்கருவியோடு அந்த தெய்வத்தின் கதையை இலக்கியச் சங்கிலியால் பிணைத்தவர்கள் தமிழர்கள். அந்த தொன்மம்தான் இன்றைக்கும் கோயில்களுக்குள் இசையாக ஒலிக்கிறது.

பொதுவாக எல்லா கோயில்களிலுமே இசைக்கென தனி ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கடந்த ஒரு தலைமுறையிலேயே பல கோயில்கள் அந்த ஆகமத்தை கைவிட்டுவிட்டன. பக்தர்களோ, நிர்வாகமோ இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பல கோயில்களில் சரித்திரமும் விஞ்ஞானத்தன்மையும் கொண்ட பல இசைக்கருவிகள் இசைப்பார் இல்லாமல் உருக்குலைந்து கிடக்கின்றன.

திருவான்மியூர் தியாகராஜரின் பல்லக்கு நடனத்துக்கு வாசிக்கப்பட்ட கனக தப்பட்டை போன இடம் தெரியவில்லை. கல்மூங்கிலால் ஆன வட்ட சட்டத்தில் தோல் வார்க்கப்பட்ட இசைக்கருவி இது. ஸ்ரீவைகுண்டத்தில் திமிலை, பாணி போன்ற பழம் இசைக்கருவிகள் கொள்வார் இல்லாமல் சிதைந்து கிடக்கின்றன. ஸ்ரீரங்கத்தில் தீர்த்தவாரி நேரத்தில் வாசிக்கப்பட்ட சக்கர வாத்தியம், வைத்தீஸ்வரன்கோவிலில் தேவாரம் பாடும்போது இசைக்கப்பட்ட சுரமண்டலி, கின்னரி, கரடிகை, கவண மத்தளம் போன்ற இசைக்கருவிகளும் சென்ற இடம் தெரியவில்லை. அருங்காட்சியகங்களில்கூட இவற்றின் மிச்சங்கள் இல்லாதது தமிழர்கள் எதிர்கொள்ளும் பெருந்துயரம்.

இந்தப் பட்டியலில் இணையத் தக்க ஒரு பழமையான இசைக்கருவிதான் திமிரி நாதஸ்வரம். தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் ‘வாங்கியம்’ என்ற ஊதுகருவியின் பிற்கால வடிவம் இது. சுமார் இரண்டேகால் அடி நீளம் கொண்ட இந்த நாதஸ்வரம், முகவீணையின் தொடர்ச்சியாக வந்த ஊதுகருவி.

குழல் கருவிகளைப் பொறுத்தவரை நீளம் கூடக்கூட சத்தம் குறையும். மின்சார ஒலிபெருக்கிகள் கண்டறியப்படாத அக்காலத்தில், சுவாமி வீதிப் புறப்பாடு போன்ற நிகழ்வுகளை அறிவிக்க முகவீணை போன்ற உயரம் குறைந்த ஊதுகருவிகள் துணைசெய்தன. தொலைதூரத்தில் இருப்பவர்கள்கூட இதன்வழி நிகழ்வை அறிந்து கொண்டார்கள். வழிபாட்டுச் சடங்குகளைத் தாண்டி, இல்ல
விழாக்கள், கொண்டாட்டங்களில், தனித்த இசை ரசனைக்குரிய அம்சமாக மாறிய பிறகு, பல ஆதிகருவிகள் அரங்க வடிவத்துக்கு ஏற்ப சிற்சில மாற்றத்துக்கு உள்ளாகின. முகவீணையும் அப்படியான மாற்றத்துக்கு உள்ளாகியது. அதன் வடிவத்தை நீளமாக்கி, ‘வீச்’ ஒலியின் விகாரத்தைக் குறைத்து, ஒலியை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்படி உருவாக்கப்பட்ட கருவியின் பெயர்தான் திமிரி நாதஸ்வரம். சம சுதி கொண்ட இந்த நாதஸ்வரத்தை இசைப்பதற்கு உடல்வலு மட்டுமின்றி, உயிர்வலுவும் தேவை. இக்கருவியை உயிர்ப்பிக்க, நாபியிலிருந்து காற்றைத் திரட்டிக் கொண்டுவர வேண்டும்.

திருமருகல் நடேசன் பிள்ளை, கும்பகோணம் பக்கிரியா பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை, திருமெஞ்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை என பல இசைவேந்தர்கள் இந்த திமிரி நாதஸ்வரத்தை இசைத்து பெரும்புகழ் பெற்றார்கள்.

இந்த நாதஸ்வரம் உளவு, அணைசு, கெண்டை, சீவாளி என 4 பாகங்களைக் கொண்டது. வைரம் பாய்ந்த ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது இதன் உளவு. ஒலிபெருக்கியாகச் செயல்படும் அணைசு, கருங்காலி மரத்தில் செய்யப்படுகிறது. காவிரிக் கரையோரம் விளையும் ஒருவகை நாணலில் சீவாளி செய்யப்படுகிறது. சீவாளி பொருத்தப்படும் கெண்டைப்பகுதி செம்பால் செய்யப்படுகிறது. இந்த நாதஸ்வரம் 12 துளைகள் கொண்டது. கும்பகோணத்தை அடுத்துள்ள நரசிங்கம்பேட்டை பகுதியில் இக்கருவி உருவாக்கப்பட்டது.

மின்சார ஒலிபெருக்கிகள் வந்த பிறகு, உயிர்கொடுத்து ஏன் ஊதவேண்டும் என்ற எண்ணம் சில கலைஞர்களுக்கு வந்த காலகட்டத்தில்தான் திமிரியின் பயன்பாடு குறையத் தொடங்கியது.
நாதஸ்வர இசையை மென்மையாக்கி, இசைக்க இலகுவாக்கும் முயற்சிகளை சிலர் மேற்கொண்டனர். அதில் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினத்தின் முயற்சி வென்றது. அவரது ஆலோசனையில், நரசிங்கம்பேட்டையை சேர்ந்த பாரம்பரிய நாதஸ்வர உற்பத்தியாளரான ரங்கநாத ஆசாரி

திமிரியை விடவும் நீளமான, மத்திம சுதி கொண்ட ஒரு நாதஸ்வரத்தை உருவாக்கினார். அதுவே பாரி நாதஸ்வரம். இளம் கலைஞர்கள் மட்டுமின்றி, பழம்பெரும் கலைஞர்களும் பாரியைக் கொண்டாடத் தொடங்கினார்கள்.

சுத்தமத்திமம் பேசும் பாரி நாதஸ்வரம் இரண்டே முக்கால் அடி நீளம் கொண்டது. உற்பத்தி முறை ஒன்றே ஆயினும் இசைக்கும் முறையில், திமிரிக்கும் பாரிக்கும் சில வேறுபாடுகள் உண்டு. திமிரி அளவுக்கு பாரிக்கு வலு தேவையில்லை. திமிரி ஒலிப்பிரளயம் நிகழ்த்தும் என்றால், பாரியில் ராகங்கள் வசப்படும்.

இப்போது  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் தவிர வேறெங்கும் திமிரி நாதஸ்வரம் இசைக்கப்படுவதில்லை. அங்கு கேசவன் என்பவர் இசைக் கிறார். பிற கோவில் களில் பாரியே முதன்மையாக இருக்கிறது. ஒருசில நாதஸ்வரப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்க திமிரியைப் பயன்படுத்துகிறார்கள்.

‘‘திமிரி வாசிக்கிறது சாதாரண காரியமில்லே... வாசிக்கிறது போலவே செய்றதும் சிரமமான வேலை. வாகா குடைஞ்சு ராவணும். ரொம்ப கவனமா செஞ்சாத்தான் சத்தம் பிசிறடிக்காம வரும். திமிரி நாதஸ்வர இசை ஏழெட்டு கிலோமீட்டர் தாண்டியும் கேட்கும். பாரி கண்டுபிடிச்ச பிறகு யாரும் திமிரியைச் சீண்டுறதில்லே...’’ என்கிறார் நரசிங்கம்பேட்டை நாதஸ்வர உற்பத்தியாளர் செல்வராசு. பாரி நாதஸ்வரத்தை உருவாக்கிய ரெங்கநாத ஆசாரியின் மகன் இவர். இவ்வூரில் இவரும், இவரது பங்காளி குடும்பத்தினருமே நாதஸ்வரம் செய்வதை விடாமல் தொடர்கிறார்கள்.
வெ.நீலகண்டன்
படங்கள்: கே.எம் சந்திரசேகரன்,
சி.எஸ்.ஆறுமுகம்