படத்துக்குப் படம் புதிய இசையமைப்பாளர்கள் வந்து கொண்டே இருந்தாலும், பாடல்களால் கவனிக்கப்படுபவர் மட்டுமே முன்னிலை பெறுகிறார். அப்படி ‘ஐவர்’ படத்தில் வெளியான பாடல்களில் ‘மல்லிகா’ பாடல் காலர் டியூன்களில் பிரபலமாகி, அதில் இசையமைப்பாளராக அறிமுகமான ‘கவி பெரியதம்பி’யை கவனிக்க வைத்திருக்கிறது. கவி, ஏற்கனவே சூரியன் எப்.எம் ‘சின்னதம்பி பெரியதம்பி’ பிரபலம்தான்.
‘‘ஒருதலை ராகம்’ படத்துக்குப் பிறகு பெண் குரலே பயன்படுத்தாம பாடல்கள் போடப்பட்ட படம் ‘ஐவர்’. அதில மல்லிகா ‘ஹிட் நம்பரா’ அமைஞ்சு போச்சு. அம்மாவோட பிறந்த நாளை நினைவில வச்சுக்காதவன்கூட காதலியோட பிறந்த நாளை நினைவில வச்சிருப்பான். ஏமாத்திட்டுப் போன காதலியோட நினைவுகள்தான் காதல் வலிக்கு ஒத்தடம். பிரிஞ்சுபோன காதலியை நினைச்சு சோகப்பாடல் பாடறது வழக்கமான நிகழ்வு. ஆனா அதையே கொஞ்சம் மாத்தி, இதமான பாடலா இருந்தா எப்படி இருக்கும்ங்கிற முயற்சிதான் ‘மல்லிகா’ பாடல்.
வழக்கமா ஒரு பாடலைக் கம்போஸ் செய்தவுடனே இப்படியான வரிகள் வந்தா நல்லா இருக்கும்னு இசையமைப்பாளரே சில வரிகள் சொல்லுவார். பிறகு அதுக்குக் கவிஞர்கள் உருவம் கொடுப்பாங்க. மல்லிகாவோட காதலுக்காக அவள் காதலன் என்னென்ன செய்தான்னு நினைவுபடுத்திப் பாக்கற கான்செப்ட் அதுங்கிறதால அதுக்கான டம்மி பாடலை நானே எழுதினேன். ‘இதெல்லாம் இன்னும் மாறலை. ஆனா நீ மாறிட்டியே...’ன்னு கேக்கற விதமா அமைஞ்ச அந்தப் பாடலை அப்படியே பயன்படுத்திக்கிட்டார் இயக்குநர். அதனால அந்தப் பாடலை எழுதியவனும் நானானேன்.
இப்ப அந்தப்பாடலைக் கேட்கிறவங்க, ‘யார் அந்த மல்லிகா...’ன்னு என்னைக் கேட்கிறாங்க. ட்யூனுக்குப் பொருத்தமா வந்து அமைஞ்சதைத் தவிர மல்லிகாவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். பலபேர் அந்த மல்லிகாவை மாத்தி தங்கள் காதலி பேரை வச்சு தேவிகா, ராதிகா, நிர்மலான்னு பாடிக்கிட்டிருக்காங்க. அதுதான் அந்தப்பாடலோட வெற்றி.
அதைக்கேட்ட இயக்குநர் ராசு.மதுரவன் சொக்கிப்போய், ‘அந்த மல்லிகா போலவே எனக்கும் வேணும்’னு கேட்டுதான் அவரோட ‘முத்துக்கு முத்தாக’ படத்தில வாய்ப்பு கொடுத்தார். ‘ஒரு சுடிதார் பூ ஒன்று எனைத்தொட்டுப் போனது’ன்னு அதோட கான்செப்டுக்கு வேற பாடல் எழுதி இசையமைச்சது இப்ப ஹிட்டாகியிருக்கு. ரெண்டு படங்களும் அடுத்தடுத்த வாரங்கள்ல ரிலீசானதில பத்து வாய்ப்புகள் வரிசையா நிற்குது. தட்டு நிறைய இனிப்புகளை நீட்டினாலும் அதில ஒண்ணைத்தானே எடுத்துக்க முடியும். அதனால லாரன்ஸ் இயக்கத்தில தெலுங்குப்படம் ஒண்ணை மட்டும் ஒத்துக்கிட்டிருக்கேன்...’’ என்கிறார் கவி.
இந்திய அளவில் சிறந்த நிகழ்ச்சியாக இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட சூரியன் எப்.எம்மின் ‘சின்னதம்பி பெரியதம்பி’யில் பெரியதம்பியான இவரது கற்பனைக் குழந்தைதான் அந்த நிகழ்ச்சி. அதுவே கவிதாஞ்சன் என்கிற இவரது பெயரையும் ‘கவி பெரியதம்பி’யாக்கியது. அந்த அடையாளத்துக்காகவே விளம்பரங்களில் பங்களிப்பு, இசையமைப்புப் பணிகள் எத்தனை இருந்தாலும் எங்கிருந்தும் தினமும் காலையில் ‘சி.த பெ.த’ லைவ் நிகழ்ச்சிக்காக சூரியன் எப்.எம்மில் ஆஜராகிவிடுகிறார் கவி. அதில் ஃபிளைட் பிடித்து வந்த நிகழ்வுகளும் அடக்கம்.
ஜி