நாணயங்கள், ரூபாய் போன்றவற்றை சேகரிப்பதைப் பற்றிய படிப்புக்கு ‘நாணயவியல்’ என்று பெயர். நாணயங்களை உருவாக்கும்போது அச்சுப்பிழை போல சில தவறுகள் ஏற்பட்டுவிடும். அநேகமாக இவை கண்டுபிடிக்கப்பட்டு, மறுபடியும் உருக்கப்பட்டு நாணயங்களாக மாற்றப்படும். சில பிழையுள்ள நாணயங்கள் எப்படியோ தப்பி வெளியில் வந்துவிடும். இவற்றுக்கு நாணயங்களைச் சேகரிப்பவர்கள் மத்தியில் கடும் கிராக்கி. நிற வேறுபாடு, ஓரங்கள் வெட்டுப்பட்டிருப்பது, இடம் மாறிக் கோணலாக வார்க்கப்பட்டிருப்பது போன்றவவை சாதாரணமாக ஏற்படும் பிழைகள். அபூர்வமாக ஒரே வடிவம் நாணயங்களின் இரண்டு புறங்களிலும் வார்க்கப்பட்டு விடுவதும் உண்டு. இவற்றுக்கு ‘லாக்ஹி’ நாணயங்கள் என்று பெயர். ‘ம்யூல்’ நாணயம் என்பது, ஒரே நாணயத்தின் இரு புறங்களிலும் வேறு வேறு நாணயங்களின் அச்சுகள் பதிவது.
எளிதில் பணம் சம்பாதிக்க விரும்பும் குற்றவாளிகள் கள்ள நோட்டு அச்சடிப்பதும் உண்டு. இதில் ‘டபுளிங் மோசடி’ என்பது பிரபலம். அதாவது குறிப்பிட்ட தொகைக்கு நல்ல நோட்டுகள் கொடுத்தால், இரு மடங்கு கள்ளநோட்டுகள் தருவதுதான் டபுளிங். சில பத்தாண்டுகளுக்கு முன் கோயமுத்தூரில் ஜி.கிருஷ்ணன் என்பவர் பெருமளவில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டார். போலீஸ் அலுவலர் ஒருவரே அவரிடம் டிரைவராக மாறுவேடத்தில் வேலை பார்த்து துப்பறிந்து, அவரைக் கைது செய்ய உதவினார் என்று சொல்வார்கள். கள்ள நோட்டுகளை அச்சடிப்பதும் புழக்கத்தில் விடுவதும் இ.பி.கோ. செக்ஷன் 489கி முதல் 489ணி முடிய அபராதம் மற்றும் ஜெயில் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
கள்ள நோட்டுக்களைக் கண்டு பிடிக்கச் சில வழிகள்...
வாட்டர் மார்க் என்று சொல்லப் படும் நீரோட்டம் கள்ள நோட்டுகளில் பொதுவாக இருக்காது.
20, 50, 100, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவமும், ரிசர்வ் பேங்கின் முத்திரையும், உறுதிமொழியும், அசோக ஸ்தூபி சின்னமும், ரிசர்வ் பேங்க் கவர்னரின் கையொப்பமும் இதர பகுதிகளை விட மிகமிக லேசான உயரத்துடன் காணப்படும். கையினால் தடவி இதை உணர முடியும். இம்முறை அச்சடிப்பு மிழிஜிகிலிமிநிளி எனப்படும்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் உள்ள தொகையைக் குறிக்கும் எண்கள் ஒரு சிறப்பு மையினால் அச்சடிக்கப்பட்டிருக்கும். தட்டையாக இந்நோட்டுகளைப் பிடித்துப் பார்க்கும்போது இந்த எண்கள் பச்சை நிறத்திலும் சாய்வாகப் பார்க்கும்போது நீல நிறத்திலும் தோன்றும்.
நோட்டின் சீரியல் நம்பர் ஒளிரக்கூடிய மையினால் அச்சடிக்கப்பட்டிருக்கும். இது புற ஊதா ஒளி தரும் விளக்கு வெளிச்சத்தில் தெரியும்.
இதைப்போலவே வாட்டர் மார்க்கின் இடது புறத்தில் கறுப்பு வண்ணத்தில் மிகச்சிறிய மேடிட்ட வடிவங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 20 ரூபாய் நோட்டில் நீள வாக்கில் செவ்வகமும், 50 ரூபாய் நோட்டில் சதுரமும், 100 ரூபாய் நோட்டில் முக்கோணமும் 500 ரூபாய் நோட்டில் வட்டமும் 1000 ரூபாய் நோட்டில் வைரமும் அச்சடிக்கப்பட்டிருக்கும். பார்வை அற்றவர்களும் கையினால் தடவி ரூபாய் நோட்டின் மதிப்பை அறியவும் இது பயன்படுகிறது. இவற்றைக் கூர்ந்து கவனித்தால் கள்ள நோட்டுகளை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
திருமணம், காது குத்து போன்ற விசேஷங்களுக்குத் தங்க நாணயங்களை அன்பளிப்பாக அளிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் நாணயங்களை எண்ணுவதற்கு, பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்கிறார்கள். நாணயங்களைப் போட்டு போன் பேசுதல், குளிர்பானங்கள் பெறுதல் என்பதன் பரிணாம வளர்ச்சியாக, நாணயங்களை உள்வாங்கி ஆணுறைகளை வெளித்தள்ளும் இயந்திரங்கள் இப்போது வந்து விட்டன.
செக், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகளின் பயன்பாடுகளும் கணிப்பொறி மூலம் பணப் பரிவர்த்தனைகளும் பெருகி வருவதால் ரூபாய்களின் புழக்கம் நாளடைவில் குறையலாம்.
‘நாய் விற்ற காசு குரைக்காது’, ‘பணம் பாதாளம் வரை பாயும்’ போன்ற பல பழமொழிகள் பணம் பற்றி இருக்கின்றன.
நோய்களைப் பரப்புவதில் ரூபாய் நோட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கராச்சி பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்கள். பலசரக்குக் கடைகள், உணவகங்கள், இறைச்சி மற்றும் மீன் விற்கும் இடங்கள், பேருந்துகள், ஆஸ்பத்திரிகள், மருந்துக்கடைகள் போன்ற இடங்களில் இருந்து ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் 450 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுசெய்தபோது, அனைத்து சாம்பிள்களிலும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைக் காளான்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் மிக அதிக அளவில் தொற்றுநோய்க் கிருமிகளைக் கொண்டிருந்தன.
இறைச்சி மற்றும் மீன் கடைகளிலிருந்தும், பஸ் நடத்துனர்களிடம் இருந்தும் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளில் மிக அதிக தொற்றுக்கிருமிகள் இருந்தன. இவை வயிற்றுப்போக்கு, சிறுநீர்த்தொற்று, தோல் நோய்கள், ரத்தத்தில் விஷத் தன்மை கலந்துவிடுவது போன்றவற்றை ஏற்படுத்தும். இதில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய இன்னொரு விஷயம், ரூபாய் நோட்டுகளில் உள்ள கிருமிகள் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஆன்டி பாக்டீரியல் மருந்துகளால் எளிதில் அழிக்க இயலாத அளவு எதிர்ப்பு சக்தி உடையனவாக இருப்பதுதான்.
பொதுவாகவே எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணுகிறவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நாணயங்களில் கிருமிகள் அவ்வளவாக இல்லை. இதற்குக் காரணம் நாணயங்களில் உள்ள உலோகங்கள் இயல்பாகவே நுண்ணுயிர்கள் வளருவதற்கு அனுமதிப்பதில்லை.
அமெரிக்காவின் மேற்கு ஓஹியோவில் மேற்கொண்ட ஆய்வின்படி 94% நோட்டுகளில் தொற்றுக் கிருமிகள் இருப்பதும், இதில் ஒரு டாலர் நோட்டில் அதிக அளவில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்து போனவர்களின் நெற்றியில் நாணயம் ஒன்றை ஒட்ட வைப்பது இன்றும் பல சமூகங்களில் நடக்கிறது. வட இந்திய ஆலயங்களில் திருக்குளங்களில் நாணயங்களைப் போடுவது பக்தர் வழக்கம். நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகச் சிலர் நாணயங்களை மஞ்சள் துணியில் முடிந்து வைப்பார்கள்.
ரூபாய் நோட்டுகளை எண்ணுவதையே தொழிலாகக் கொண்டவர்களும், வங்கி போன்றவற்றில் பணி புரியும் காசாளர்களும் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஆம், இவர்களுக்கு ‘கை சுத்தம்’ தேவை!
(அடுத்து...)
லதானந்த்