கனவைத் திறக்கும் சாவியை உங்கள் கைகளில் அளிப்பது மட்டுமல்ல... வருமான வரி சேமிப்பு என்கிற மிகப்பெரிய சலுகையையும் வீட்டுவசதிக் கடன் நமக்கு அளிக்கிறது. நாம் கட்டுகிற மாதத் தவணையில் அசல், வட்டி என இரண்டும் கலந்திருக்கும். வட்டிக்கு மட்டுமல்ல... நாம் செலுத்துகிற அசலுக்கும் 1961&ம் ஆண்டு வருமான வரி சட்டத்தின்படி சலுகை உண்டு. ஆனால், தனித்தனியாக!
* வீடு வாங்குவதற்காக, கட்டுவதற்காக, பழுது பார்ப்பதற்காக, சீரமைப்புக்காக, மறுகட்டுமானத்துக்காக வாங்கிய வீட்டுவசதிக் கடன் வட்டிக்கு வருமான வரி சட்டம் பிரிவு 24 விலக்கு அளிக்கிறது. ரூ.1.5 லட்சம் வரை செலுத்திய வட்டிக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.50,490 வரை வரி செலுத்தாமல், சேமிக்க முடியும்.
பிரிவு 80சி யில் ரூ.1 லட்சம் வரை செலுத்திய அசல் தொகைக்கு சலுகை பெறலாம். இதன் மூலம் ரூ.33,660 வரை வரித்தொகை சேமிக்க முடியும். (பிரிவு 80சி&யில் வீட்டுவசதிக்கடனுக்குச் செலுத்திய அசல் தொகைக்கு மட்டுமல்ல... பி.எஃப், வரிச் சேமிப்பு பரஸ்பர நிதி, ஆயுள் காப்பீடு பிரீமியம், என்.எஸ்.சி. சர்ட்டிஃபிகேட், கிசான் விகாஸ் பத்திரம், வரி சேமிப்பு டெபாசிட் ஆகிய அனைத்துக்கும் சேர்த்தே ரூ.1 லட்சம் வரை வரிவிலக்கு என்பதை நினைவில் கொள்க!)
கணவன்-மனைவி இருவருமே வருமான வரி சலுகை பெற முடியுமா?முடியும். கண்டிஷன் உண்டு... இருவரும் இணைந்து வீடு வாங்கியிருக்க வேண்டும். வீட்டுவசதிக்கடனும் இருவர் பெயரிலும் பெறப்பட்டிருக்க வேண்டும். செலுத்திய அசல், வட்டியில் ஆளுக்குப் பாதியாகப் பிரித்து வருமான வரி சலுகை பெற முடியும். மொத்தமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வட்டி கட்டியிருந்தால், கணவனுக்கு ரூ.75 ஆயிரமும், மனைவிக்கு ரூ.75 ஆயிரமும் வரிச்சலுகை கிடைக்கும். இதே போல அசலிலும்...
கணவன்-மனைவி மட்டுமல்ல... பெற்றோருடனோ, உடன் பிறந்தவருடனோ, பிறருடனோ இணைந்து வீடும் வீட்டுவசதிக் கடனும் வாங்கியிருந்தாலும் சலுகை பெற முடியும். சொத்தில் அவர்களின் பங்கு அடிப்படையில் வரிச்சலுகையைப் பிரித்துக் கொள்ளலாம்.
இன்னொரு குடும்ப உறுப்பினர் பெயரில் வீடும் வீட்டுவசதிக்கடனும் இருக்கிறது. அவருக்கு வருமான வரிச் சலுகை அவசியப்படவில்லை. அந்தச் சலுகையை நாம் பெற முடியுமா?
முடியாது! வீட்டின் உரிமையாளராகவும், வீட்டுவசதிக்கடன் வாங்கியவராகவும் இருப்பவர் மட்டுமே வருமானவரிச் சலுகை பெற முடியும்.
வீடு மதுரையில் வாங்கப்பட்டிருக்கிறது. வேலை காரணமாக சென்னையில் வாடகை வீட்டில் வாழ்க்கை. ஏற்கனவே வருமான வரியில் வீட்டுவாடகைப்படிக்குச் சலுகை பெறும் நிலையில், வீட்டுக்கடன் தவணைக்கும் சலுகை பெற முடியுமா?முடியும்!
ஏற்கனவே வீட்டுவசதிக் கடனுக்கு வருமானவரிச் சலுகை பெறுபவர், இன்னொரு வீட்டை வீட்டுவசதிக்கடன் மூலம் வாங்கி, சலுகை பெற முடியுமா?
இரண்டு வீட்டுக்கும் வீட்டு வசதிக் கடன் இருந்தால் வருமான வரி விலக்கு பெற முடியும்.
ஒரு வீட்டை சொந்தப் பயன்பாட்டுக்கும், இன்னொரு வீட்டை வாடகைக்கும் விடும்போது, சொந்தப் பயன்பாட்டுக்கான வீட்டுக்கு 1.5 லட்சம் வரை வட்டிக்கு வரிவிலக்கு பெறலாம். வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டுக்கு அதன் வருமானத்தைக் காட்டி, மொத்த வட்டிக்கும் வரிவிலக்கு பெற முடியும்.
ஒரு வீட்டில் நாம் குடியிருக்கிறோம்... இன்னொரு வீட்டையும் நாமே பயன்படுத்துகிறோம்... இப்படி இருந்தால் Deemed to be let out எனக் குறிப்பிடுவார்கள். இச்சூழலில், குடியிருக்கும் வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வட்டிக்கு வரிவிலக்கும், நாம் பயன்படுத்துவதாகக் காட்டும் இன்னொரு வீட்டுக்கு வருமானம் வருவதாகக் காட்டி, மொத்த வட்டிக்கும் வரிவிலக்கு பெற முடியும்.
இரண்டு வீட்டையும் வாடகைக்கு விடுவதாக வைத்துக்கொள்வோம். அப்படியும் வாய்ப்பு இருக்கிறது. வாடகை வருமானத்தைக் காட்டி, பிறகு அதிலிருந்து வீட்டுவசதிக் கடனுக்கான மொத்த வட்டிக்கும் வரி விலக்குப் பெற முடியும்.
பழுது பார்ப்பதற்காக, சீரமைப்புக்காக, மறுகட்டுமானத்துக்காக, விரிவாக்கத்துக்காகக்கூட ஹோம் லோன் வாங்க முடியுமா? அது எப்படி? அடுத்த வாரம்...
(கட்டுவோம்!)
தாஸ்