வாசகர் கவிதைகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

சமாதானம்

பக்கத்து வீட்டுக்காரருடன்
தீராத சண்டை...
சமாதானம் பேச,
வேலி தாண்டிப் போய்
பூத்திருக்கிறது
ரோஜாப்பூ!
 எஸ்.பழனிவேல்,
திருமாளம்.

கடற்கரை

யார் குழந்தையாக
இருந்தால் என்ன?
அறிமுகப் புன்னகை
செய்துகொண்டு
அழைத்தால்,
அருகில் வருவதும்
தூரச் செல்வதுமாய்
போக்கு காட்டி
ஏனோ சிரித்தபடியே
திரும்பிச் செல்கிறது
இந்த
அலைகளைப் போலவே!
 ச.புகழேந்தி,
அய்யாறு.

குறை

இருபத்தைந்து வருஷங்கள்
சந்தோஷமாக வாழ்ந்த வீட்டில்
இந்த ஒரு வாரமாய்
கவலையும் கலக்கமுமாக
இருக்கிறது...
யதேச்சையாக வந்த
ஜோதிடர் ஒருவர்,
‘வீட்டில் வாஸ்து
குறை இருக்கு’
என்றதிலிருந்து!
 கே.தண்டபாணி,
பொள்ளாச்சி.

பயம்


அப்பாவின் கோபத்துக்கு
குடும்பமே பயப்படும்.
ஆனாலும்,
அப்பாவே
பயத்தோடுதான் போகிறார்
சித்தி வீட்டுக்கு!
 வைகை.ஆறுமுகம்,
வழுதூர்.

தாலாட்டு

இப்போதும்கூட
குழந்தைகளுக்கு
தாலாட்டு பாடித்தான்
தூங்கிப் போகிறார்கள்
கிராமத்து பாட்டிகள்!
 கா.கதிர்வேல்,
தர்மபுரி.

நிறுத்தம்

பேருந்து முழுவதும்
தொங்கும் பயணிகள்.
ஏற வழியில்லாது
நிறுத்தத்திலேயே
நின்று கொண்டது
காற்று!
 பா.விஜயராமன்,
வடபாதிமங்கலம்.