எங்கள் வீட்டில் ஒன்றுக்கு இரண்டு கார்கள் சும்மாவே நிற்கின்றன. எப்போதாவது அவசரத்துக்கு வெளியே போக மட்டும் கால் டிரைவர் போட்டுச் செல்வோம். வீட்டோடு டிரைவர் வைத்துக்கொள்ளும் அளவுக்குத் தேவையும் இல்லை. வெளிநாட்டில் இருக்கிற பிள்ளைகள் வருடம் ஒரு முறை வரும்போது தேவைப்படும் என்பதால் விற்கவும் மனசில்லை. கால் டாக்சி கம்பெனிக்கு வாடகைக்கு விடலாம் எனக் கேள்விப்பட்டோம். விவரம் தேவை.சி.சந்திரா, சென்னை-11.
பதில் சொல்கிறார் ‘ஃப்ரெண்ட்ஸ் டிராக் கால் டாக்சி’ உரிமையாளர் பாலகிருஷ்ணன்வெள்ளை நிற நம்பர் பிளேட் போட்ட வண்டிகளை டிராவல்ஸுக்கோ, பொது வாகனமாகவோ ஓட்ட முடியாது. மஞ்சள் நிற போர்டு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். வெள்ளை போர்டு வண்டியை மஞ்சள் போர்டாக மாற்றலாம். குறைந்தபட்சம் 3 வருடங்களுக்கு அந்த வண்டி வெள்ளை போர்டுடன் இருந்திருக்க வேண்டும். பிறகு அருகிலுள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்தால், மாற்றிக் கொடுக்க ஆவன செய்வார்கள். இதற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். 15 & 20 நாட்களுக்குள் கிடைக்கும்.
மாருதி ஆம்னி, இண்டிகா, ஐகான், இன்னோவா, டவேரா உள்ளிட்ட சில வண்டிகளை கால் டாக்சி கம்பெனிகளுக்கு விடலாம். உங்கள் வண்டிகளை கால் டாக்சிக்கு விடுவது என முடிவு செய்து விட்டால், இரண்டு விதமாக யோசிக்கலாம். முதல் வேலையாக ஏதேனும் ஒரு கால் டாக்சி கம்பெனிக்குச் சென்று உங்கள் வண்டிக்கு மீட்டர் பொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது, டெபாசிட் கட்டுவது போன்றவற்றை முடித்து, அட்டாச்மென்ட் செய்ய வேண்டும். இதற்கு 14 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இதை முடித்துவிட்டு, வண்டியை நீங்களே வீட்டுக்கு எடுத்துச் சென்று, டிரைவர் வைத்து கால் டாக்சியாக இயக்கலாம். டிரைவருக்கான சம்பளம், வாகனப் பராமரிப்பு, எரிபொருள் செலவு எல்லாம் உங்களுடையது. அட்டாச்மென்ட் செய்துள்ள கால் டாக்சி கம்பெனி மூலம் உங்களுக்கு சவாரி வரும். இதில் நீங்கள் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 700 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
டிரைவர் வைத்து வேலை வாங்குவதோ, பராமரிப்போ முடியாது என்பவர்கள், கால் டாக்சி கம்பெனியின் பொறுப்பிலேயே வண்டியை ஒப்படைத்து விடலாம். எல்லா செலவுகளையும் அவர்களே பார்த்துக் கொண்டு, வண்டி ஓடினாலும், ஓடாவிட்டாலும், மாதம் ஒரு தொகையை உங்களுக்குத் தருவார்கள். வண்டியைப் பொறுத்து அது 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வேறுபடலாம். எப்போதாவது பர்சனல் தேவைக்கு வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் வண்டியை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் உங்களுடைய மாத வருமானத்தில் பிடித்துக் கொள்ளப்படும்.
நான் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். ஆனால், அது சலிப்பாக இருக்கிறது. ஜிம்முக்கு போகவும் விருப்பமில்லை. எப்படி சரிசெய்வது? ஆர்.ரமணி, சிதம்பரம்.
பதில் சொல்கிறார் உடற்பயிற்சி ஆலோசகர் ரா.சீனிவாசன் ஒரே உடற்பயிற்சியையே தொடர்ந்து செய்யாமல் மாற்றி மாற்றி செய்யலாம். வாக்கிங், ஜாக்கிங் மட்டுமல்ல... வீட்டு வேலைகளைச் செய்வது, லிஃப்ட்டுக்கு பதிலாக படியேறுதல், நாயோடு விளையாடுதல் போன்றவையும் செலவே இல்லாத உடற்பயிற்சிகளே...
ஸ்கிப்பிங் செய்வது இன்னொரு எளிய உடற்பயிற்சி.
ஒரு மணி நேரம் நடனப்பயிற்சி செய்வதுகூட, 250 கலோரிகளை இழக்க உதவும் உடற்பயிற்சியே.
மோட்டார் சைக்கிளுக்கு மாற்றாக சைக்கிள் பயன்படுத்துவது நல்ல உடற்
பயிற்சி.
மாதம் ஒருமுறை ட்ரெக்கிங் செல்வது புதிய அனுபவத்தைத் தருவதோடு, உடற்பயிற்சியாகவும் அமையும்.
நீச்சல் பயிற்சி உங்களை ரிலாக்ஸ் செய்வதோடு, எடை குறைக்கவும் உதவும்.
இப்படி செலவு குறைவான பல உடற்பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்தாலே சலிப்பையும் அலுப்பையும் விரட்டலாம்!