பட்டனை அழுத்தினா பஞ்சாயத்து!



செய்தி: 2017 ஜனவரி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எல்லா மொபைல் போன்களிலும் அவசர கால உதவிக்கு பயன்படும் வகையில் ‘பேனிக்’ பட்டன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணை.

அவசர கால உதவி பட்டன் என்பது ஓகே... ஆனால், எது எதுவெல்லாம் அவசர காலம்? அதற்கு உதவி எப்படியெல்லாம் கிடைக்க வேண்டும் என நம்  கற்பனையில் உதித்த ஐடியாக்கள்...

பட்டனை அழுத்தினால் பணம்!

அவசர கைமாத்தாக ‘ஒரு பத்தாயிரம் வேணும்’ எனக் கேட்டால், பத்து வருஷம் பழகினவன் கூட காது கேட்காதவன் மாதிரி தலை தெறிக்க ஓட ஆரம்பிப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும். அப்படி நாலு பேரிடம் கேட்டும் நி(நீ)தி கிடைக்கவில்லை எனில், அந்தச் சம்பவம் அவசர நிலையாகக் கருதப்பட்டு, பாதிக்கப்பட்டவர்  பட்டனை அழுத்தலாம். ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்ற பாடல் டியூனையே அலாரமாகக் கேட்கும் அருகிலுள்ள வங்கி மேலாளர் பணத்துடன் வந்து பாதிக்கப்பட்டவரை ஒரு மாபெரும்  சமூக அநீதியிலிருந்து காப்பாற்றி ஆறுதல் சொல்லலாம்.

பயங்கரவாத பலகாரம்!

டி.வி சமையல் நிகழ்ச்சிகளிலிருந்து குறிப்பெடுத்த ரெஸிபிகளை பல மணி நேரங்கள் கஷ்டப்பட்டு முயன்று பார்த்தும், அதில் காட்டப்பட்டது போன்ற பலகாரம் உருப்பெறாதபோது, படைப்பாளியான மனைவிக்கு ஆத்திரம் பொங்கி வருவதில் தவறில்லை. ஆனால், பலகாரம் என்ற போர்வையில் தயாரான பலவித வண்ணக் கட்டிகள் துளியும் வேஸ்ட் ஆகக்கூடாது என்ற அக்கறை கொஞ்சம் விபரீதம்.

நாய், பூனை கூட முகர விரும்பாததை வாயில்லா ஜீவனாகிய கணவன் மட்டும் டேஸ்ட் செய்ய வற்புறுத்தும் மனைவியின் மனிதாபிமானமற்ற அட்ராஸிட்டியை அவசர நிலையாகக் கருத வேண்டும். அச்சமயம் கணவர் வாய் திறக்காமல் பேனிக் பட்டனை அழுத்தலாம். ‘அடியே அடியே இவளே...’ என்ற டியூனுடன் கூக்குரலைக் கேட்கும் மனித உரிமை அமைப்பினர் விரைந்து வந்து அவரை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றலாம்.

பஞ்சாயத்து பட்டன்!

செல்போனில் கட்டியவள் முதல், காதலி வரையிலான முக்கிய பிரமுகர்களிடம்  பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று தொண்டை கட்டியதுபோல் மறுமுனை குரல் கரகரத்து, வால்யூம் தானாகவே குறைந்து, ‘ஹலோ... ஹலோ...’ என்று கத்த வைக்கும். தொடர்பை நாம் வேண்டுமென்றே துண்டித்து விட்டதுபோல் நினைத்து, உறவிலும், நட்பிலும் சேதாரம் ஏற்பட்டு, விரோதம் வளர்கிறது.

‘கால் டிராப்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த மாதிரி டெர்ரர் சம்பவங்களின் போது, பட்டனை அழுத்தினால், ‘என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா’ காலர் ட்யூனுடன் கூடிய அலாரம்  சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தில் அலற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட விரிசலைப் போக்க தேவையான நேரடி பஞ்சாயத்துகளை நடத்த கம்பெனி நிர்வாகிகள் ஓடி வரவேண்டும்!

வெறி  வெறி Important!

வீட்டில் மாமியார் - மருமகள் தகராறு, வாக்குவாதத்தில் ஆரம்பித்து, சில சமயம் கைகலப்பு வரை நீளும். அதையும் மீறி, ஒருவர் மீது ஒருவர் அண்டா, குண்டாக்களை வீசிக்கொள்ளும் ஆயுதப் போராக அது உருவெடுத்தால், அந்த வன்முறைக் காட்சிகளின் சத்த டெஸிபல்களின் அடிப்படையில் அவசர காலப் போர் பிரகடனத்தைச் செய்யும் ஒருவித வன்முறை ஆப் பெண்களின் போன்களில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அவை ‘வெறி வெறி வெறி... வெறி’ சத்தத்தை அலாரமாக கணவனுக்கு அனுப்பி வைத்தால், நிலைமையின் உக்கிரத்தைப் புரிந்துகொண்டு,   தலையில் ஹெல்மெட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு சாதனங்களுடன்  வீட்டிற்குள் நுழைய உதவிகரமாக இருக்கும்.

அதிர்ச்சிக்கு ஆம்புலன்ஸ்

மனைவியின் ஆணைப்படி, குழந்தைக்கு  எல்.கே.ஜி அட்மிஷன் விண்ணப்பம் வாங்க முந்தைய நாள் இரவு முதல் கண்விழித்து க்யூவில் நிற்போம். காலை பத்து மணிக்கு காட்சி அளிக்கும் வாட்ச்மேன், ‘இந்த வருஷத்துக்கான அட்மிஷன் போன வருஷமே முடிஞ்சுடுச்சு... அடுத்த வருஷத்துக்கான விண்ணப்பத்துக்கு ரெண்டு வருஷங்களுக்கு முன்பே ரிஜிஸ்டர் செய்திருக்கணும்’ என்று  அறிவிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள, எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

அது பலருக்கு இல்லை என்பதால், இந்த சம்பவம் அவசர நிலையாக அங்கீகரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் பட்டனை  அழுத்தலாம். ‘சட்டி சுட்டதடா...’ என்ற காலர் ட்யூனுடன் ஒலிக்கும் சங்கின் சத்தம் மூலம் ஸ்பாட்டில் மூர்ச்சை அடையும் பலரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸை விரையலாம்.

எஸ்.ராமன் ஓவியங்கள்: ஹரன்