ஏழை மாணவர்களுக்கு உதவி! வாட்ஸ்அப் தகவல் வதந்தியா?‘‘பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி விண்ணப்பப் படிவம் வாங்கக் கூட முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் எவரேனும் உங்களுக்குத் ெதரிந்தால் தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.

பொறியியல் கல்லூரியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க முழுச் செலவும் செய்யப்படும். தங்கும் விடுதி செலவு உள்பட. தொடர்புக்கு...’’ - பெயரும் தொலைபேசி எண்ணும் சேர்த்து, இப்படியொரு தகவல்தான் இப்போது வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் கொடி கட்டிப் பறக்கிறது.

‘என்ன ஒரு நல்ல மனசு’ என பலரும் இதை ஃபார்வேர்டு ஷேரிங் செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறோம். ஆனால், ‘‘இதெல்லாம் பொய்யான செய்தி!’’ என்கிறார்கள் விசாரித்துப் பார்க்கும் மாணவர்கள். என்னதான் உண்மை? ‘‘இதுமாதிரி வாட்ஸ்அப்ல வந்த ஐந்து போன்  நம்பர்களுக்கு நானும் போன் பண்ணிருக்கேன்.

இதுல, டாக்டர் வெங்கடேஷ்,  சுந்தர்னு ரெண்டு நம்பர் மட்டும் சுவிட்ச் ஆஃப்னு வரும். மற்ற எண்கள்ல  பேசினப்போ எஞ்சினியரிங் காலேஜுக்கு கன்சல்டிங் பண்றதை சொன்னாங்க!’’ என்கிறார் ‘ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக். நிஜமாகவே ஏழை மாணவர்களின் கல்விக்காக பல்வேறு  உதவிகள் செய்து வருகிற அமைப்பு இது.

அது என்ன எஞ்சினியரிங் காலேஜுக்கு கன்சல்டிங்? ‘‘அதாவது, இன்னைக்கு எஞ்சினியரிங் சேர்க்கை ரொம்ப கம்மியா இருக்கு. முதல் நிலையில இருக்குற ஒரு நூற்றி அம்பது கல்லூரிகள்லதான் மாணவர்கள் சேர்க்கை நிறையுது. மற்ற கல்லூரிகள் சும்மாதான் இருக்கு. இவங்களோட டார்கெட், ஓரளவு நல்ல மார்க் எடுத்த ஏழை மாணவர்கள்தான்.

இவங்களுக்கு இந்தக் கல்லூரிகளின் சலுகைகளையும் அரசு தர்ற சலுகைகளையும் வாங்கிக் கொடுத்து, கல்விக் கடனுக்கும் ஏற்பாடு பண்ணி கல்லூரியில சேர்த்து விடுறதுதான் கன்சல்டிங் வேலை. ஒரு அட்மிஷன் போட்டா குறிப்பிட்ட தொகை அவங்களுக்குக் கிடைக்கும். சில கல்லூரிகளில் படிச்ச முன்னாள் மாணவர்களும், கல்லூரியில் படிச்சு வேலையில்லாத சிலரும், இதுதவிர இன்னும் பலரும் கூட இதை ஒரு வேலையா பண்ணிட்டு இருக்காங்க.

இதை கன்சல்டிங்னு விளம்பரம் செய்ய செலவாகும் இல்லையா? அதனால இப்படி ‘உதவி’ முகமூடி போட்டுக்கறாங்க! இப்போ, சமூக வலைத்தளங்கள் வளர்ந்துட்டதால அதுல தங்கள் நம்பரையும் பெயரையும் போட்டு விளம்பரப்படுத்துறாங்க. ஒட்டுமொத்தமா இதைப் பொய்னு சொல்ல முடியாது. ஆனா, கல்லூரிகள் முழுச் செலவையும் ஏத்துப்பாங்கனு சொல்றதை நம்ப முடியலை. அவங்க ஹாஸ்டல் ஃபீஸ்லயோ அல்லது டியூஷன் ஃபீஸ்லயோ வேணா சில சலுகைகள் கொடுக்கலாம். அப்படி சில கல்லூரிகள் பண்றாங்க.

ஆனா, ‘முழுக்கவே இலவசம்’னு நம்பிப் போற மாணவர்களைப் பொறுத்தவரை இது ஏமாற்றமாதான் இருக்கும். எந்த காலேஜில் சேர்ந்தாலும் அரசின் சலுகைகள் எல்லாருக்கும் பொதுதான். ஆக, இப்படிப்பட்ட தகவல்களை நம்பி குறிப்பிட்ட கல்லூரிகள்தான் நமக்குனு மாணவர்கள் சிக்கிக்க வேண்டிய அவசியம் இல்லை.

தெளிவா ஆராய்ந்து பார்த்து நல்ல தரமான கல்லூரிகளை அவங்க தேர்ந்தெடுக்கணும். ஏன்னா, இது மாணவர்களோட எதிர்கால வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம்!’’ என்கிறவர், ‘‘இப்படிப்பட்ட தகவல்களை கண்மூடித்தனமாகப் பகிர வேண்டாம்’’ என்றும் வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘எனக்குத் தெரிந்து குறிப்பிட்ட ஒரு நபருக்கு ரத்தம் தேவைனு ஒரு மெசேஜ் ஒன்றரை வருஷமா உலா வந்திட்டு இருக்கு. அப்புறம், குழந்தைக்கு ஆபரேஷன், ‘இந்தக் குழந்தையைக் காணவில்லை... கண்டுபிடிச்சா இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்’னு ஏகப்பட்ட செய்திகள். ஒண்ணு தவறா இருக்கும். அல்லது காலம் தப்பி வந்ததா இருக்கும். எந்தத் தகவலையும் கால் செய்து உறுதி செய்துக்கிட்டு பகிரணும். எல்லா தகவலிலும் இந்தத் தேதியில் வந்ததுனு ஒரு குறிப்போட பகிரணும். அப்படிச் செய்தால் இந்த மாதிரி குழப்பங்களைத் தவிர்க்கலாம்!’’ என்கிறார் அவர் நிறைவாக!

முழுக்கவே இலவசம்’னு நம்பிப் போற பொறுத்தவரை இது ஏமாற்றமாதான் இருக்கும். எந்த காலேஜில்  சேர்ந்தாலும் அரசின் சலுகைகள் எல்லாருக்கும் பொதுதான்.

- பேராச்சி கண்ணன்