என்சினியரிங் எங்கே படிப்பது? என்ன படிப்பது?



எஞ்சினியரிங் படிப்புகளைப் பொறுத்தவரை, ‘என்ன படிக்கிறோம்’ என்பதை விடவும் ‘எங்கே படிக்கிறோம்’ என்பதுதான் முக்கியம். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 571 கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.

டயர்-1 என்று பகுக்கப்படும் முதல் 10 கல்லூரிகளில் எந்தப் பிரிவை எடுத்துப் படித்தாலும் வளாகத் தேர்வுகளிலேயே வேலை உறுதி. அடுத்தகட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் சுய முனைப்பிலேயே தங்களுக்கான பாதையைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
 
உலகெங்கும் அடுத்த 20 ஆண்டுகளை இலக்கு வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதிலும் பொறியியல், தொழில்நுட்பங்களில் எல்லாம் அவர்கள் மிகுந்த தொலைநோக்கோடு மாணவர்களைத் தயாரிக்கிறார்கள்.

நாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களையே அவ்வப்போது செறிவூட்டி மாணவர்களுக்கு வழங்குகிறோம். அதனால்தான், ஏரோநாட்டிக்கல் போன்ற படிப்புகளை முடித்துவிட்டு வெளிநாடு செல்லும் நம் மாணவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள், அல்லது தொடக்கநிலைப் பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

இருக்கும் பழைய பாடத்திட்டத்தைக் கூட மாணவர்களுக்கு உரியமுறையில் வழங்க தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பல கல்லூரிகளில் இல்லை என்பது சோகம். எம்.இ அல்லது எம்.டெக் முடித்த கையோடு ஆசிரியர்களாக்கி விடுகிறார்கள். தொழில்நுட்பங்களைப் போதிக்க தனித்திறன்கள் வேண்டும். அந்த தொழில்நுட்பத்தில் தேர்ச்சியும், அனுபவமும் வேண்டும். ஆனால் பெரும்பாலான கல்லூரிகளில் ‘கத்துக்குட்டிகள்’தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிஇடி), ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை பேராசிரியர்கள் இருக்க வேண்டும், என்னென்ன தகுதிகள் தேவை என்று விதிமுறை வகுத்திருக்கிறது.

ஆனால் பெரும்பாலான கல்லூரிகளில் அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அண்மையில் ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒரே பேராசிரியரின் பெயர் பல கல்லூரிகளின் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
நம் பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்புமே இல்லை.

தான் படிக்கும் துறை சார்ந்த தொழிற்சாலைக்குள் நுழைந்து பார்க்காமலே ஒரு மாணவன் நான்காண்டு காலப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்து விடுகிறான். இன்டர்ன்ஷிப், செயல்முறைப் பயிற்சிகள், தொழிற்சாலை விசிட் போன்ற எந்த ஏற்பாடுகளும் இல்லை. ப்ராஜெக்ட்டைக்கூட பெரும்பாலான மாணவர்கள் ‘ஓசி’ வாங்கித்தான் செய்கிறார்கள். 

பல கல்லூரிகளில் போதுமான ஆய்வகங்கள் இல்லை. வெளிநாடுகளில் ஒரு கல்வி நிறுவனம் எத்தனை ஆய்வகங்களை வைத்திருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதனை தர மதிப்பீடே செய்வார்கள். பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளை தரமான ஆய்வகங்கள் இருந்தால் மட்டுமே முழுமையாக உள்வாங்க முடியும்.

ஆய்வகமே இல்லாத கல்லூரியில் இப்படிப்புகளை படிப்பது வீண். பல கல்லூரிகள், வெறும் பாடப் புத்தகங்களுக்குள் மாணவர்களை மூழ்கடித்து விடுகின்றன. மொழிவளம், ஆளுமைத்தன்மை, தன்னம்பிக்கை போன்ற தனித்திறன்களை வளர்ப்பதேயில்லை. உயர்கல்வி என்பது இவற்றையும் உள்ளடக்கியதுதான்.

தகுதியான ஆசிரியர்கள், போதிய ஆய்வகங்கள், இன்டர்ன்ஷிப், பிராக்டிக்கல் பயிற்சி வகுப்புகள், போதிய அளவுக்கு உள்கட்டுமானம், படிப்போடு சேர்த்து பிற திறன்களையும் வளர்த்தல், வளாகத் தேர்வைக் கொண்டிருத்தல் போன்ற தகுதிகளைக் கொண்ட கல்லூரியே நல்ல கல்லூரி. இதுமாதிரி கல்லூரிகளில் இடம் கிடைத்தால் எஞ்சினியரிங் படிக்கலாம். இல்லாவிட்டால், வேறு பாதையை நாடலாம்.

படிப்புகளைப் பொறுத்தவரை ‘இந்தப் படிப்புக்குத்தான் வாய்ப்பு’ என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லா படிப்புகளுக்கும் தேவை இருக்கிறது. ஆனால், நன்கு கற்றுணர்ந்து, உரிய தகுதிகளோடு வருபவர்களுக்குத்தான் வாழ்க்கை. ஏதோ நாமும் கல்லூரிக்குப் போனோம், படித்து பட்டம் வாங்கினோம் என்றெல்லாம் படித்தால் பத்தோடு பதினொன்றாக நேர்காணல் வரிசையில் நிற்க வேண்டியதுதான்.

பெரும்பாலான மாணவர்கள், ‘படிப்பு முடிந்ததும் ஒரு வேலை’ என்ற இலக்குடன்தான் படிக்கிறார்கள். படிப்பு என்பது அடித்தளம். அது வேலை பெற்றுத்தரும் கருவி மட்டுமல்ல. அதைக் கொண்டு நீங்களும் பலருக்கு வேலை தரலாம். “நாமா? நிறுவனம் தொடங்குவதா?

பணத்துக்கு எங்கே போவது?” என்று மலைக்காதீர்கள். நிபுணத்துவம் பொருந்திய திறமையான இளைஞர்களுக்காக பணத்தைக் கையில் (angel fund) வைத்துக் கொண்டு நிறைய பேர் காத்திருக்கிறார்கள். திட்டம் மட்டும் போதும்... மத்திய, மாநில அரசுகளிடம் கூட ஸ்டார்ட்-அப் தொடங்குவதற்கு ஏராளமான நிதி உண்டு. ஆனால் நூறில் ஒரு தமிழக இளைஞர் கூட அதைப் பயன்படுத்துவதில்லை.

படிப்புகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் சிவில் எஞ்சினியரிங் படிப்பு எக்காலமும் எவர்கிரீன். பொறியியல் படிப்புகளில் முதன்முதலில் உருவான படிப்பு இதுதான். இந்தியா மாதிரி வளர்ந்து வரும் ஒரு நாட்டில் மொத்த நிர்மாணப் பணிகளும் சிவில் எஞ்சினியர்களை நம்பித்தான் இருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் பல ஆயிரம் சிவில் எஞ்சினியர்கள் நாட்டுக்குத் தேவைப்படுவார்கள். தவிர, அரபு நாடுகள், ஆப்ரிக்க நாடுகளிலும் இந்திய சிவில் எஞ்சினியர்களுக்கு நிறைய மரியாதை கிடைக்கிறது. ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் சுயமாகத் தொழில் செய்யலாம். ஐ.டி.கம்பெனிகளுக்கும் கூட நிறைய சிவில் எஞ்சினியர்கள் தேவைப்படுகிறார்கள்.

Geo Informatics, Environmental Engineering, Agricultural Engineering, Architecture, Town and Country Planning, Soil Technology, Ocean and Coastal Engineering போன்ற படிப்புகள் சிவில் எஞ்சினியரிங் படிப்பில் இருந்து உருவான கிளைப் படிப்புகள். எல்லாமே சிறந்த எதிர்காலம் தரும் படிப்புகள்தான். இவற்றில் Architecture படிப்பு மட்டும் தனித்துவமானது.

இந்த 5 ஆண்டு காலப் படிப்பை முடித்தவர்களுக்கு உலகெங்கும் ஏக தேவையிருக்கிறது. கட்டுமானக் கலையில் ஆர்வமும், கற்பனைத் திறனும் இருப்பவர்கள் இப்படிப்புக்கு முயற்சி செய்யலாம். இப்படிப்பில் சேர NATA என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வை எழுத 18.8.2016 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அமைப்பு ஒருங்கிணைக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு: www.nata.in/2016/

கெமிக்கல் எஞ்சினியரிங் பெஸ்ட்!

வேதியியலில் நிறைய மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யோசிக்காமல் கெமிக்கல் எஞ்சினியரிங்  படிப்பைத் தேர்வு செய்யலாம். அண்மைக்காலமாக, வேதிப் பொறியாளர்களின்  பங்களிப்பு இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைவாய்ப்புகளின் எல்லை விரிவடைந்து வருகிறது. நல்ல ஆய்வக வசதிகள் கொண்ட  கல்லூரிகளைத் தேர்வு செய்யவேண்டும்.

வேதிப் பொறியியலில் இருந்து கிளைத்த  தனிப்படிப்புகள் ஏராளம் உண்டு. Polymer Technology, Plastic/Rubber  Technology, Chemical and Electrochemical Engineering, Petroleum Engineering, Petrochemical Engineering, Ceramic Engineering, Textile  Technology, Fashion Technology, Textile Chemistry, Carpet and Textile  Technology, Metallurgical Engineering, Metallurgical & Materials  Engineering, Pulp and Paper Technology, Biochemical Engineering, Medical  Technology, Food Technology, Leather Technology போன்ற படிப்புகளை,  ‘வேதிப் பொறியியலின் குழந்தைகள்’ என்று சொல்லலாம். இவை குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்புகள். வேலைவாய்ப்புகளுக்குக் குறைவில்லை.   

வேலைவாய்ப்பு மிகுந்த பிற எஞ்சினியரிங் படிப்புகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்... 

- வெ.நீலகண்டன்