3 பெண்களின் வாழ்க்கையில் சிம்பு!



இயக்குநர் பாண்டிராஜ்

‘‘சார்! இந்தப் படத்துக்கு முதலில் வச்ச தலைப்பு தெரியுமா உங்களுக்கு? இப்ப சொல்றேன், ‘லவ்வுன்னா லவ்வு அப்படியொரு லவ்வு’... எப்படியிருக்கு? அப்புறம்தான் படத்துக்குள்ளே நயன்தாரா வந்தாங்க. எதிர்பார்ப்பு எகிறிச்சு! ‘இது நம்ம ஆளு’னு பெயர் மாத்திட்டோம். 50% காதல், 50% காமெடினு படம் அள்ளிக்கிட்டு வந்திருக்கு. படத்தோட லைன் சொன்னப்ப டி.ஆருக்கு அதிர்ச்சி.

‘என்னங்க, ஒரு ஃபைட் கூட இல்லையே’ன்னார். படத்தில ஃபைட் இல்லையே தவிர, நாங்க செமத்தியா சண்டை போட்டுக்கிட்டோம்!’’ - சிரித்து சிரித்துப் பேசுகிறார் டைரக்டர் பாண்டிராஜ். நயன் - சிம்பு ஜோடிக்காக நாடே எதிர்பார்த்துக் கிடக்கிறது. இதோ ஒரு வழியாக வெள்ளித் திரையில் எட்டிப் பார்க்கிறது ‘இது நம்ம ஆளு’! ‘‘என்னங்க முழுசா காதலில் இறங்கி வந்துட்டீங்களே...’’

 ‘‘பாண்டிராஜ்னா குழந்தைகள், கிராமம், யதார்த்த மனிதர்கள்னு ஒரு லேபிள் நின்னு போச்சு. அதை கொஞ்சம் உடைச்சுப் பார்க்க ஆசைப்பட்டேன். மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. மனம் சும்மா இருந்தாலும் காதல் விடுவதில்லைனு சொல்வாங்க.

அப்படி ஒரு காதலைச் சொல்ல ஆசைப்பட்டேன். ஆனால் அது உன்னதமான, உருகி உருகித் தவிக்கிற, ‘இதயம்’ ரேஞ்ச் காதல் கிடையாது. அப்படி இப்ப எடுத்தால் ‘ஸாரி பிரதர்’னு சொல்லிட்டு நகர்ந்துடு வாங்க.

இப்பல்லாம் நிச்சயம் பண்ண காலத்துக்குள்ளேயே பேசுறது எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு, முதல் இரவுல முகத்தைத் திருப்பிக்கிட்டு நிக்கிறாங்க. அப்படி ஒரு ஐ.டி காதலைப் பத்தி சொல்லணும்னு ஆசை.

நிஜமாகவே அங்கே என்ன நடக்குதுனு ஒரு சின்ன ஆராய்ச்சியைப் போட்டால், அருமையா ஒரு கதை கிடைச்சது. சிம்பு வுக்கு காதல் ஃபெயிலியர் ஆகி, வீட்டுல பார்த்து நயன்தாராவை நிச்சயம் செய்து வைக்கிறாங்க. இடையில் நடக்கிற பல சம்பவங்கள்தான் கதை. காதல் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், பிரச்னைனு போகும்.

ஆனால், அழுது துடிச்சு, கலங்க வைக்காமல் காமெடியில் போகும். படத்தில் 100 தடவை சிரிக்க வைக்க இடம் இருக்கு. கலகலனு கொண்டு போனதுல, ‘இந்தப் பாண்டிராஜ் என்னய்யா சொல்ல வந்தாரு’னு கேக்குற மாதிரி படம் முழுக்க ஸ்பீட்ல பறக்கும்.

எங்கேயோ ஒரு காட்டுக்குள்ள கிடக்குற ஒரு கல், திடீரென ஒரு வீட்டுக்கு முதல் கல்லாவது போல, கோடிப் பூக்கள் கொட்டிக் கிடக்கிற வனத்தில ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கிற மனசு காதலுக்குத்தான் வாய்க்கும். எந்த வரைபடத்துக்குள்ளும் சிக்காத தேசம் காதல். எந்தக் கணிதத்திற்குள்ளும் அடங்காத மனக்கணக்கு காதல்!’’  ‘‘பின்றீங்க பிரதர்... சிம்பு - நயன்தாரா காதல் எப்படி வந்திருக்கு?’’

  ‘‘ஏற்கனவே காதல் நீரோட்டத்தில அவங்க கலந்தவங்கதானே! இப்ப விலகிட்டாங்கன்னா பழைய நினைவும், பேசின வார்த்தையும், பார்த்த பார்வையும் அழிஞ்சா போகும்? அது என்ன வாத்தியார் எழுதி எழுதி அழிக்கிற கரும்பலகையா? எல்லாம் ஆழத்துல கிடக்கும். அதை வெளியே கொண்டு வந்து கொட்டுவது மாதிரி காட்சிகள் வச்சிட்டா எப்படியிருக்கும்! நிறைய காட்சிகள் அவங்க ரெண்டு பேரும் நடிச்ச மாதிரியே தெரியலை.

ரிகர்சல் பார்த்த மாதிரியும் தெரியலை. அந்தச் சிரிப்புக்கும், காதலுக்கும் பார்வைக்கும், செல்லக் கோபத்திற்கும், வேற முன்மாதிரியும் இல்ைல. எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும் சார் படம்!’’‘‘இது அவங்களோட நிஜக் காதல் கதையா என்ன?’’

‘‘இதுல உங்க கதை, அவங்க கதை, என் கதை, ஊர்க்கதை எல்லாம் இருக்கு. சிம்புகிட்ட சொன்னப்போ அவர் ரசிச்சு, ‘என்னவோ இந்தக் கதை என்னோட சம்மந்தப்பட்ட மாதிரியே இருக்கு. பண்ணலாம்’னு சொன்னார். இதுல, சிம்புவும் நயனும் காதலை ஆரம்பிக்கிறதுக்கு இன்ட்ரோ சீனெல்லாம் பெருசா வைக்கலை. ஏன்னா, அவங்க ரெண்டு பேரும் திரையில் வந்துட்டாங்கனு சொன்னாலே, அவங்க காதலிக்கத்தான் செய்வாங்கனு ஜனங்க நம்பிடுவாங்க. அதான் எனக்கு இந்தப் படத்தோட ஆதாரம்.

அதுக்காகவே இந்த சிம்பு - நயன் கூட்டணி! அவங்க ரெண்டு பேரும் காதல் பத்திப் பேசிக்கிற மாதிரியும், ஃபீல் பண்ணுற மாதிரியும் நான் டயலாக் எழுதிக் கொடுத்தா, அவங்க சிரிக்கிறாங்க. அவங்களே இந்த டயலாக்கை பேசிப் பார்த்திருப்பாங்க போல.

அதான் அந்தச் சிரிப்பு. ‘ப்ரோ, நான் அவளைக் காதலிக்கப் போறேன்’னு சூரிகிட்ட சிம்பு சொன்னால், அவர் ‘எத்தனை நாளைக்கு பிரதர்?’னு திருப்பிக் கேட்பார். இப்படியே படம் முழுக்க பட்டாசு கிளப்பும். ஒரு நல்ல அனுபவிப்பா, ஜாலியா, கடிச்சு வைக்காம ஒரு படம்னு வாங்களேன். ஏமாத்தவே ஏமாத்தாது ‘இது நம்ம ஆளு’!’’  ‘‘சிம்பு - சந்தானம்தான் எப்பவும் காமெடியில் இருப்பாங்க. இதில சூரி...’’

 ‘‘சிம்புவே சந்தேகப்பட்டது அதுதான். ஆனால், வந்த ஜோர்ல பின்னி எடுத்தார் சூரி. ‘ஆமாம் ஜீ, நீங்க சொன்னது சரிஜீ’னு சிம்புவே சர்ட்டிபிகேட் கொடுத்துட்டார். இதில் மூணு சீனில் சந்தானமும் வர்றார். அந்த இடங்கள் எல்லாம் சிரிப்பு கரை புரண்டு ஓடும்.

பல கெட்டப்களில் வருகிறார் சிம்பு. மூணு பெண்கள், காதல்கள்னு சூடு பறக்கும். காதல் அப்படித்தான். அளவு கடந்த உற்சாகம் வரும். அந்த உற்சாகத்திற்கு காரணம் தெரியாது. தாள முடியாத துயரம் மனசைக் கவ்வும். அந்த வேதனை ஏன்னு புரியாது. காதல் அப்படித்தான். அதையும் கலகலன்னு சொல்ல முடியும். சொல்லியிருக்கேன்!’’

  ‘‘ஏன் இவ்வளவு லேட்?’’  ‘‘மூன்றரை வருஷம் ஆச்சுன்னதும் ஏதோ ‘பாகுபலி’ ரேஞ்சுக்கு வெயிட் பண்ணி எடுத்துருக்காங்கனு வந்துடாதீங்க. ஆனால், வருஷம் தெரியாமல், அப்படியே ஃப்ரெஷ்ஷா வந்திருக்கு. குறளரசன் கொஞ்சம் இசைக்கு டைம் எடுத்துக்கிட்டாரு. முதல் அறிமுகம் பளிச்னு இருக்கணும்ல. அதுக்கு அந்த நேரம் சரிதான்!’’
  ‘‘நிறைய மீம்ஸ் வந்ததே...’’

  ‘‘ஒரு கலைஞனா வருத்தம்தான். அதை நகைச்சுவையா எடுத்துக்கிட்டா விழுந்து விழுந்து சிரிக்கலாம். படம் எடுத்தது மட்டும்தான் நான். அதைக் கொண்டு போய் சமயத்தில் சேர்க்கிறது புரொடியூசர்தான். என் வேலையில நான் பக்கா. ரொம்ப டீப்பா காதல் கதை சொல்லலாம். முடியாதது இல்லை. ஆனால், அதை ‘ஏ’ சென்டர் மட்டும்தான் பார்க்க வரும். நான் ஆல் கிளாஸ் ஃபெல்லோ. எனக்கு எல்லோரும் வேணும்!’’

  - நா.கதிர்வேலன்