டிகிரி... ஐ.ஏ.எஸ்...அப்புறம் பிரதமர்! +2 மாணவியின் லட்சிய ரூட்சத்ரியா கவின்... +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்திருக்கும் சென்னைப் பொண்ணு! வழக்கமாக முதலிடம் பிடிப்பவர்கள், ‘‘டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்வதே லட்சியம்’’ என்ற டெம்ப்ளேட் பேட்டியால் போரடிப்பார்கள். ஆனால், சத்ரியா கவின் ‘‘பிரதமராகி நாட்டிற்காகப் பணியாற்றவே விரும்புகிறேன்’’ என்று சொல்ல, தமிழகமே Feeling surprised!

‘‘சின்ன வயசு கனவே இதுதான். முதல்ல, டிகிரி முடிக்கணும். அடுத்து, ஐ.ஏ.எஸ் ஆகணும். அப்புறம், அரசியலுக்கு வந்து பிரதமர் ஆகணும்!’’ - தொடர்ந்து வரும் வாழ்த்துகளுக்கிடையில் பேசுகிறார் சத்ரியா. அவர் படித்தது, சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள குட் ஷெப்பர்டு பள்ளியில்! மொழிப் பாடத்தில் முதன்மையாக பிரெஞ்சு எடுத்து படித்தவர்.

காமர்ஸ், அக்கவுன்டன்சி, பிசினஸ் மேத்ஸ், எகனாமிக்ஸ் என நான்கு பாடத்திலும் 200க்கு 200 மார்க்குகள். ஆங்கிலத்தில் 196, பிரெஞ்சில் 199 என மொத்தம் 1,195 மதிப்பெண்கள்!

‘‘அப்பா ஜெகந்நாதன் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இப்போ, மியூசியங்களின் டைரக்டரா இருக்காங்க. அம்மா தீபா மாலா இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐல வேலை பார்க்குறாங்க. ரெண்டு பேருமே பொலிடிக்கல் சயின்ஸ்ல டாக்டர் பட்டம் வாங்கினவங்க. அப்பா, ஐ.ஏ.எஸ்ங்கிறதால நிறைய விஷயங்களைப் பத்தி அடிக்கடி விவாதிப்பாங்க.

 அம்மாவும் அதே மாதிரி பேசுவாங்க. அப்பாவோட நேர்மையும், அம்மாவோட துணிச்சலும்தான் எனக்கு உற்சாக டானிக்! நாட்டுக்கு சேவை பண்ணணும்னு எனக்குள்ள விதை விதைச்சவங்க அவங்கதான்!’’ என்கிற சத்ரியாவை தொடர்கிறார் அம்மா தீபா மாலா.

‘‘எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தவ அபூர்வா கவின் இப்போ டெல்லி பல்கலைக்கழகத்துல பி.ஏ. எகனாமிக்ஸ் படிக்கிறா. அங்க மாணவர் சங்கத் தலைவராவும் இருக்கா. இவங்க ரெண்டு பேருமே  படிப்பு மட்டுமில்லாம கராத்தேல பிளாக் பெல்ட்டும் வாங்கியிருக்காங்க. சத்ரியா, அதுக்கும் மேல போய் பேச்சுப் போட்டி, க்விஸ், பேட்மின்டன்னு நிறைய பரிசு குவிச்சிருக்கா.  பத்தாம் வகுப்புல 495 மார்க் வாங்கி ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தா. சென்னை அளவுல அது மூணாவது இடம்.

அதுவரை தமிழ்தான் அவளோட முதல் பாடமா இருந்துச்சு. நாங்கதான், வேறு மொழி கத்துக்கட்டும்னு +2வுல பிரெஞ்சு எடுக்கச் சொன்னோம். ஆனா, மாநில அளவுல முதலிடம் பிடிப்பாள்னு நினைக்கலை. அவளுக்கு அந்த நம்பிக்கை அதிகமா இருந்துச்சு. அதுக்காகவே கடுமையா படிச்சா. இதே மாதிரி தன்னோட கனவுகள் எல்லாத்தையும் அவ கடும் உழைப்பால சாதிச்சுக் காட்டணும். காட்டுவா!’’ என்கிறார் அவர் நம்பிக்கையாக!

- பேராச்சி கண்ணன்
படம்: யுவராஜ்