கடக லக்னத்துக்கு சந்திரனும் சனியும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 39

வெயில் கொளுத்தும்போது அபூர்வமாகப் பெய்யும் மழையைப் போல, சில விஷயங்கள் இணைந்திருப்பது இனிய முரண்பாடுகள் கொண்டதாக அமையும். ஜோதிடத்தில் அப்படிப்பட்ட சேர்க்கையே இது! மனோகாரகனாகிய சந்திரனும், மந்தனான சனியும் சேரும்போது மனோவேகம் சற்று குறைகிறது. இது ஒருவிதத்தில் நேர்மறையாகவும், வேறுவிதத்தில் எதிர்மறையாகவும் பலனைத் தரும்.

கடுமையாக உழைப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், தேர்ந்தெடுத்து வேலையை கச்சிதமாகச் செய்யாமல் இழுபறியாகவே ஒரு வேலையை முடிப்பார்கள். மனோவேகத்தை சனியானவர் கொஞ்சம் கட்டுக்குள் வைத்திருப்பார்.

அதனால், மனச்சோர்வு வர வாய்ப்புண்டு. ஒரு காரியத்தை காலதாமதப்படுத்திச் செய்யும் சூழலை இந்த அமைப்பு உருவாக்கும். சந்திரன் சர்வ கலாபிதன் எனில், அதில் ஆழ்ந்த நுட்பத்தையும் ஆழத்தையும் சனி சேர்ப்பார். எனவே, இவர்களின் கலைப் படைப்புகள் காலதாமதப்பட்டாலும் வெகு வருடங்களுக்கு எல்லோராலும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். 

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரனும் சனியும் எந்தெந்த இடங்களில் இணைந்திருந்தால், என்னென்ன மாதிரியான யோகங்களைக் கொடுப்பார்கள் என்பதை இனி வரிசையாகப் பார்க்கலாம்... கடக லக்னத்திலேயே சந்திரனும் சனியும் சேர்ந்து அமர்ந்திருந்தால், கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் பிடிவாதம் பிடிப்பார்கள். கண் கோளாறு வந்து நீங்கும்.

காலதாமதமாகத் திருமணமாகும். ஏழுக்கும், எட்டுக்கும் உரிய சனி, லக்னத்தில் சந்திரனோடு இருப்பதால் வாகனங்களில் செல்லும்போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்குக் கையில் ஆறு விரல் இருக்கும். எப்போதுமே இந்த அமைப்பில் உள்ளவர்கள் கொஞ்சம் எமோஷனலாக இருப்பார்கள். எனவே, பதற்றத்தைக் குறைத்தால் பல காரியங்களைச் செய்யலாம். இதை இவர்கள் தங்களுக்காகவே சொல்லிக்கொள்ள வேண்டும்.

லக்னாதிபதியோடு சனி சிம்மத்தில் சந்திரனோடு சேரும்போது காதல் திருமணத்திற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரம்பக்கல்வி முதலே இவர்களுக்குக் குழப்பம் தொடங்கி விடும். கல்லூரி படிக்கும்போது உச்சமாகும். சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சனி அமர்ந்தால் பாதிப்புகள் அதிகம். இதையே ‘மகத்தில் சனி அமர்ந்ததால் மயங்கினான் ஈழ வேந்தன்’ என்கிற ஜோதிட மொழி சொல்கிறது.

இருதாரத்திற்கான வாய்ப்புகள் உண்டு. அதுவே பூரம் நட்சத்திரத்தில் சனி அமர்ந்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும். பொதுவாக இந்த சேர்க்கையினால் பணம் கொடுத்து ஏமாறுவது, வீண்பழிக்கு ஆளாவது, ஏதோவொரு நோய் இருந்து கொண்டே இருப்பது என்று பல தொந்தரவுகள் இருக்கும்.

எட்டுக்குரிய சனி, லக்னாதிபதியான சந்திரனோடு மூன்றாம் இடமான கன்னியில் சென்று மறைகிறார். இது சாதகமான அம்சம்தான். தொழிலாளியாக இருப்பவர்களை அப்படியே முதலாளியாக உயர்த்தும் அமைப்பு இது.

சொத்துச் சேர்க்கை, வாகனம் வாங்குதல் என்று எல்லாம் தடையில்லாது இருக்கும். இளைய சகோதரர் மிகவும் ஆதரவாக இருப்பார். பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை என்று பல்வேறு திறமைகளோடு செயல்படுவார்கள்.

எந்தத் துறையில் இறங்கினாலும், எதிலும் அவசரப்படாமல் நின்று நிதானமாக முயற்சியைக் கைவிடாது முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. தொந்தரவு கொடுக்காத நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். இவர்கள் போகத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பார்கள்.

எட்டுக்குரிய சனி, நான்காம் இடமான துலாம் ராசியில் சந்திரனோடு சேரும்போது தாயாரின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படுத்தும். இவர்கள் எப்போதுமே வாகனங்களில் செல்லும்போது கவனத்தோடு செயல்பட வேண்டும். தாய்வழி உறவினர்களுடன் சுமுகமாக இருக்க முடியாமல் போகும். இவர்கள் எல்லா விஷயத்திற்கும் எப்படி எதிர்வினை புரிவார்கள் என்று புரிந்துகொள்ள முடியாத புதிராக செயல்படுவார்கள்.

இங்கு சனி உச்சமாகிறது. இவர்கள் தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை என்றாலும், மாபெரும் தலைவருக்கு ஆலோசகராக செயல்படுவார்கள். அதேபோல சொந்தமாகத் தொழில் செய்வார்கள். ஏனெனில், வியாபாரச் சின்னமாக துலாம் வருவதால், நிச்சயம் சொந்தத் தொழில் செய்தே தீருவார்கள்.

விருச்சிகத்தில் சனியும் சந்திரனும் வலுவிழந்து விடுகின்றனர். இதனால் உறவினர்களிடையே பகை உருவாகும். குழந்தை பாக்கியத்தில் தாமதம் ஏற்படும். கர்ப்ப காலத்தில் இந்த அமைப்புள்ள பெண்கள் மிக எச்சரிக்கையோடு இருப்பது அவசியம். மருத்துவர் சொல்வதைத் தவிர வேறெந்த ஆலோசனையையும் ஏற்கக் கூடாது.

இவர்களில் சிலரின் குழந்தைகளுக்கு பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூர்வீகச் சொத்துகள் எதுவுமே சரியாக வராது. பூர்வீகத்தை விட்டு விலகி தென்கிழக்கு திசைக்குச் சென்றால் இவர்கள் வெற்றி பெறலாம். இவர்கள் உறவுகளில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக ரத்த பந்த சொந்தங்களில் திருமணம் கூடாது. தியானம், யோகா போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பார்கள்.

தனுசு ராசியில் எட்டாம் அதிபதியான சனி ஆறாம் இடமாக மறைகிறார். இதுவும் ஒரு நல்ல அம்சம்தான். நோய் குறித்து எந்த அச்சமும் தர மாட்டார். உள்ளத்தளவில் நோயை சற்றுத் தள்ளியே வைப்பார். எதிரிகளை எங்கு நிறுத்த வேண்டுமோ, அங்கு நிறுத்தி வைப்பார். இவர்கள் பாட்டுக்கு இவர்கள் வேலையைச் செய்துகொண்டே இருப்பார்கள். உழைப்பால் மேலே மேலே சென்றுகொண்டே இருப்பார்கள்.

கடன் வாங்குவதே இவர்களுக்குப் பிடிக்காது. எப்படியாவது அதை அடைத்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். ஏழுக்குரிய சனி பகவான் தனக்கு பன்னிரெண்டாம் இடமான தனுசு ராசியில் மறைவதால் வாழ்க்கைத் துணைவர் செலவாளியாக இருப்பார். காதல் திருமணத்திற்கே பெரும்பாலும் வாய்ப்பு உள்ளது. கர்ப்பப்பை கோளாறு வந்து நீங்கும்.

மகர ராசியில் சொந்த இடத்திலேயே சனியும், லக்னாதிபதியான சந்திரனும் இருப்பதால் திருமணத்திற்குப் பிறகு நல்ல முன்னேற்றம் இருக்கும். சந்திரனோடு மனைவிக்குரிய ஸ்தானாதிபதியான சனி சேர்வதால், ‘யார் புத்திசாலி, யார் மிகுந்த திறமைசாலி’ என்பதில் வாழ்க்கைத்துணையோடு போட்டி அதிகம் இருக்கும்.

ஆனால், இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஆணாக இருந்தால் நிச்சயமாக மனைவியின் ஆலோசனையைக் கேட்காமல் முக்கிய காரியங்கள் எதையும் செய்யக் கூடாது. இதில் மட்டும் ஈகோ பார்த்துக் கொண்டிருந்தால், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிடும். மற்றபடி அடிப்படை வசதி, வாகனங்கள் போன்றவற்றில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

கும்ப ராசியின் அதிபதியான எட்டாம் இடத்திற்குரியவரான சனி, தன்னுடைய சொந்த ராசியில் அமர்ந்து உடன் சந்திரனும் அமர்கிற அம்சம் இது. அதாவது எட்டுக்குரியவர் எட்டாம் இடத்தில் இருந்தால் சூட்சும புத்தி அதிகமாக இருக்கும். ஆழ்நிலை தியானம், யோகா, காடுகளிலும் மலைகளிலும் சஞ்சாரம் செய்தல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பார்கள்.

இவர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டக் குறைவானவர் என்று சொல்லி விடலாம். இவர்கள் தலைமைப் பதவியில் அமர முடியாது. ஆனால், இன்னொருவரை அமர வைத்துவிட முடியும். பெரிய பதவிகளெல்லாம் நூலிழையில் பறிபோகும்.

ஆனால் பெரிய பதவியில் அமர்ந்திருப்பவர்களின் அந்தரங்க ஆலோசகராக இருப்பார்கள். வெளி மாநிலம், வெளிநாட்டில் வேலை என்றிருந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இவர்கள் பேசும்போது வெகுளியாக இருப்பதுபோல இருக்கும். இவர்கள் சுயமாக வாகனத்தை ஓட்டாது டிரைவர் வைத்துக்கொள்வது நல்லது.

மீன ராசியான ஒன்பதாம் இடத்தில், குருவின் வீட்டில் சனியும் சந்திரனும் அமர்வது எல்லாவிதத்திலேயும் நேர்மறைப் பலன்களையே அளிக்கும். எப்போதும் தந்தையை விட தனித்துத் தெரிய வேண்டுமென்று போராடுவார்கள். தன்னால் தந்தை புகழ்பெற வேண்டுமென நினைப்பார்களே தவிர, தந்தையால் தன் புகழை மேம்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள். சில காலம் தந்தையைப் பிரிந்திருக்கும் சூழல் வரும்.

ஒருவிதத்தில் அதுவும் நன்மையில்தான் முடியும். குரு வீட்டில் சனி இருப்பதால், அந்தச் சனியே மனைவியின் ஸ்தானத்திற்குரியவராகவும் இருப்பதால், வாழ்க்கைத்துணை மெத்தப் படித்தவராக அமைவார். இவர்கள் சொந்த ஊர், குலதெய்வ வழிபாடு போன்றவற்றிலெல்லாம் மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள்.

மேஷத்தில் சனியும் சந்திரனும் இணைந்திருப்பது அவ்வளவு நல்லது இல்லைதான். ஏனெனில், செவ்வாய் வீட்டில் சனி இருக்கிறார். இதனால் பத்தாம் இடமான வேலை ஸ்தானம் கொஞ்சம் பிரச்னைக்குரிய விஷயமாகத்தான் இருக்கும். வேலையில் ஒரு நிரந்தரத்திற்காக போராடிக்கொண்டே இருப்பார்கள். இந்த அமைப்பு இவர்களை எதிலும் நிலையாக இருக்க விடாது.

எது தன்னுடைய இடம் என்பதில் எப்போதும் குழப்பம் இருந்தபடியே இருக்கும். ஆனாலும், சனியின் உதவியால் மெரைன் எஞ்சினியர், பைலட், பியூட்டி பார்லர், கோழிப் பண்ணை வைத்தல், வி.ஏ.ஓ., ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்றெல்லாம் சில துறைகள் அமையும்.

நல்ல வேலை கிடைத்தால் அதிலேயே செல்ல வேண்டுமே தவிர குழப்பத்திற்கு ஆளாகக் கூடாது. வேலை செய்யும் அலுவலகத்தில் வேலையில் கவனம் வேண்டுமே தவிர, அலுவலக அரசியல் விவகாரங்களில் அளவுக்கு அதிகமான தலையீட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

ரிஷப ராசியான பதினொன்றாம் இடத்தில் சனி அமர்வது நல்லதுதான். இந்த அமைப்பானது தீர்க்காயுள் யோகத்தைத் தரும். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள். மூத்த சகோதர, சகோதரி வகையில் மிகுந்த உதவி செய்பவர்களாகவும் அனுகூலமாகவும் இருப்பார்கள். ஷேர் மார்க்கெட், ஏஜென்சி எடுத்தல், வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்தல் என்று முன்னேறிக்கொண்டே இருப்பார்கள்.

ஏழுக்கும், எட்டுக்கும் உரிய சனி பகவான், மிதுன ராசியில்  தனக்கு ஆறில் சென்றும், லக்னாதிபதியான சந்திரனோடு சேர்ந்து பன்னிரெண்டிலும் மறைகிறார். இது முக்கியமாக தாமதத் திருமணத்தை அளிக்கும்.

இருமுறை திருமணமாகும் வாய்ப்பும் உண்டு. இந்த அமைப்பில் பிறந்தவர்கள் மாற்றுத் திறனாளிகளை மணமுடிப்பது நல்லது. நிச்சயதார்த்தத்தோடு நின்று போனவர்களையோ அல்லது இளம் வயதிலேயே வாழ்க்கைத் துணைவரை இழந்தவரையோ மணம் புரிந்து கொண்டால் நேர்மறையாக வாழ்க்கை செல்லும். இந்த அமைப்பிற்கு அதுவொரு பரிகாரமும் கூட!  

சந்திரனும் சனியும் சேருவது பெரும் நன்மையைத் தராமல் இருந்தாலும், எதிர்மறைப் பலன்கள் குறைவாகவே இருக்கும். ஒரு விஷயத்தைத் தொடங்குவதற்கு முன்பு பெருங்குழப்பம் இவர்களை அலைக்கழிக்கும். இதனால் தொடக்கச் சிரமம் இருந்துகொண்டே இருக்கும். இம்மாதிரியான நேரங்களில் சரியான முடிவெடுக்கவும், ஊக்கமோடு செயலாற்றவும் இவர்கள் செல்ல வேண்டிய தலமே திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலாகும்.

பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட தோஷம் நீங்க, ஈசன் இத்தல பெருமாளை வேண்டினார். கண்டியூர் வந்து பத்ம தீர்த்தத்தில் நீராடி, இங்கே எழுந்தருளியுள்ள பெருமாளையும் கமலவல்லி நாச்சியாரையும் வழிபட்டார்.

ஈசனின் தோஷமும் நீங்கியது. இவ்வாறு ஹரனுக்கு ஏற்பட்ட சாபத்தை ஹரி தீர்த்ததால் ஹரசாப விமோசனப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். திருக்கண்டியூர் எனும் இத்தலம் தஞ்சாவூர் - திருவையாறு பாதையில், தஞ்சாவூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா
கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்