குட்டிச்சுவர் சிந்தனைகள்தமிழ் சினிமாக்களுக்கு ‘சிங்கம்’, ‘புலி’, ‘சிறுத்தை’,  ‘மைனா’, ‘குருவி’னு மிருகம், பறவைகள் பேரு வச்சாலும்; பல படங்களில் ஹீரோ ஹீரோயினே மிருகங்களாட்டம் இருந்தாலும், நம்ம தமிழ் சினிமாவுல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் எப்பவுமே தனி இடம் உண்டு. எந்த ஒரு விஷயம் ஆரம்பிச்சாலும் அப்பன் பிள்ளையார கும்பிட்டுட்டுத்தான் ஆரம்பிக்கணும்.

‘நல்ல நேரம்’ எம்.ஜி.ஆர்.ல ஆரம்பிச்சு ‘அன்னை ஓர் ஆலயம்’ ரஜினி, ‘ராம் லட்சுமண்’ கமல் வரை யானையோட கூடி கும்மாளம் போடாத சூப்பர் ஸ்டார்களே கிடையாது.  கண்ணாமூச்சில ஆரம்பிச்சு கிரிக்கெட், ஃபுட்பால், ஹாக்கினு போயி நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல்னு ஒலிம்பிக்ல இருக்கிற விளையாட்டுகள் வரை ஒண்ணு விடாம நம்ம தமிழ் சினிமா யானைகள் விளையாடும்.

கோழிகளை மூடி வைக்கிற கூடை சைஸுல தொப்பி, பஸ் கண்ணாடி மாதிரி ஒரு கூலிங் கிளாஸ், ரெண்டு சாக்கு மூட்டைய ஒட்டு போட்டு ஒரு டவுசர்னு தமிழ் சினிமாவுல யானைகள் போடாத ஆக்சஸரிஸே கிடையாது. கொஞ்சம் விட்டிருந்தா, சுவர் கடிகாரத்த கூட சுடிதார் ஷால்ல கோர்த்து கைக்கடிகாரமா அதுக்குக் கட்டி விட்டிருப்பாங்க.

தமிழ் சினிமாவுல யானைகள் எப்பவுமே ஸ்பெஷல். ஹீரோவுக்கு அண்ணன் தம்பி உறவா சென்டிமென்ட் சீன் கூட ஓட்டும். யானை இருக்கிற படங்களில் எல்லாம் யானையைக் கழுவுற மாதிரி காட்டுறாங்களோ இல்லையோ, யானையை அழுவுற மாதிரி காட்டாம இருக்கமாட்டாங்க. பாதி படத்துல ஹீரோவோட ஊடலாகிப் போனாலும், க்ளைமேக்ஸ்ல வில்லனோட காரைத் துரத்த கண்டிப்பா வந்திடும்.

ஹீரோவுக்காக கொலை பண்ணிட்டு ஒரு எவிடன்ஸ் கூட மிச்சம் வைக்காம போன யானைகளைக் கூட தமிழ் சினிமா பாத்திருக்கு. இந்த யானைகள் நடிக்கிறப்ப பழைய படங்களில் இருக்கும் ஒரே பிரச்னை, பழைய டிப்பர் லாரி சைஸ் ஹீரோயின்களோடு நிக்கிறப்ப, எது யானைன்னு கொஞ்சம் மக்கள் குழப்பம் ஆகுறதுதான்!

நம்ம சினிமாக்களில் தாய்ப் பாசத்துக்குப் பிறகு அதிகம் புழியப்பட்டது நாய்ப் பாசம்தான். நாய் மெயின் ஹீரோவா நடிக்க கரண், ராம்கி, நிழல்கள் ரவினு ஒரு குரூப்பே சைடு ஹீரோவா நடிச்ச காலங்களை எல்லாம் கண்டிருக்கிறது தமிழ் சினிமா.

இந்தக் காலப் படங்களில் வில்லன் வந்து ஹீரோயினையோ, ஹீரோவோட அம்மாவையோ எங்க கடத்திட்டுப் போறான்னு கண்டுபிடிக்க ஜி.பி.எஸ் டெக்னாலஜி இருக்கு, அந்தக் காலத்து ஜி.பி.எஸ் டெக்னாலஜி நாய்தான். கன்னியாகுமரில கடத்தி கொல்கத்தா வரை வில்லன் போனாலும், கொஞ்சமும் சளைக்காம, கொஞ்சங்கூட குழைக்காம, பின்னாலயே ஓடிப் போய் லொகேஷனை லாக் பண்றதுதான் நாயோட வேலை.

இடையிடையே ஹீரோயின் தாவணிய திருடுறது, ஹீரோயின் பாட்டி பல் செட்ட லபக்குறதுனு சேட்டைகளும் நடக்கும். தமிழ் சினிமாவுல வெள்ளைப் புடவை கட்டிக்கிட்டு வராத பேயும் இல்ல, ரெண்டு முன் காலையும் தூக்கிக்கிட்டு நடந்து வராத நாயும் இல்ல. சில படங்களில் நாய் கார் ஓட்டும், தேர் ஓட்டும். கொஞ்சம் விவரமான  நாய், விவசாயம் பண்றேன்னு ஏர் கூட ஓட்டும்.

நாய்க்கு அப்புறம் தமிழ் சினிமாவுல அதிகம் நடிச்ச பெருமைக்கு உரியவர் நம்ம மூதாதையர் monkeyயார். கம்புச் சண்டை முதல் கத்திச் சண்டை வரை குரங்குகள் போடாத சண்டைகளே இல்ல. ஹீரோ எப்படியாவது ஹீரோயினை கரெக்ட் பண்ணினா, ஹீரோயின் ஃப்ரண்டையோ, ஏன்... ஹீரோயின் அம்மாவையோ கரெக்ட் பண்ற குரங்குகள் கூட தமிழ் சினிமாவுல இருந்திருக்கு. 

கோலிவுட்ல கோவணம் முதல் கோட்டு சூட்டு வரை குரங்குகள் போடாத காஸ்ட்யூம்ஸே இல்ல. புகை பிடிக்கிற குரங்கு, ஃபுல் அடிக்கிற குரங்குனு குரங்குகள் பண்றதா காட்டுற சேட்டைகள் மட்டும் பல ஆயிரம். க்ளைமேக்ஸ்ல ஹீரோ, ஹீரோயினோடு குரங்கைக் கூட கட்டிப் போட்டு வைக்கும் அளவுக்கு குரங்கு படா பேஜாரான பேர்வழி.

அப்படி கட்டிப் போடாமல் விட்ட குரங்கு, தன் கையால ஹீரோ, ஹீரோயின் கட்டுகளை அவிழ்த்து விடுவதும் மாறாத ஒன்று. பாடல் காட்சிகளில் பூவைத் தூக்கிப் போடுறது, சண்டைக் காட்சிகளில் துப்பாக்கியைத் தூக்கிப் போடுறது, காமெடிக் காட்சிகளில் மாவை தூக்கி எவன் தலையிலயாவது போடுறதுனு எனிடைம் பிசியான ஆள் நம்ம குரங்கார்.

தமிழ் சினிமாவுல ஹீரோ, ஹீரோயின், வில்லன்களுக்கு தீம் மியூசிக் வர்றதுக்கு முன்னாடியே தனக்கென ஒரு தீம் மியூசிக் வைத்திருந்த ஒரே ஆளு, பாம்புதான். ஹீரோயினுக்கு ஹீரோ தர்ற லெட்டர கொண்டு போய் கொடுக்கிறதுல இருந்து, பால்ல இருந்து butterரை பிரிக்கிற வேலை வரை நம்ம பாம்பு செய்யும். காதே இல்லாட்டி கூட கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர்ற ஒரே ஜீவன், தமிழ் சினிமாவுல பாம்பு மட்டும்தான். ஹீரோயின் கெஞ்சிக் கேட்கிறப்ப மஞ்சள் அப்புன புத்துல இருந்து கொஞ்சமாய் எட்டிப் பார்க்கிற இன்ட்ரொடக்‌ஷன் சீன் கூட பாம்புகளுக்கு அமையும்.

தமிழ் சினிமாவுல ரஜினிகாந்த் ஊர்க்காவலன், விஜயகாந்த் பூந்தோட்டக் காவல்காரன்னா, பாம்புகள்தான் என்னைக்கும் தொட்டில் குழந்தைகளைக் காக்கும் தொட்டில் காவல்காரன். முதல்ல பச்சை முட்டை மட்டும் சாப்பிட்டுக்கிட்டு இருந்த பாம்புகள், காலப்போக்கில் ஆம்லெட், ஹாஃப் பாயில், முட்டை பொரியல் என சாப்பிடும் அளவுக்கு பணிச் சுமைகள் அதிகமாகின என்றால், அது மிகையாகாது. பாம்புகள் படம் எடுக்கிறதை படமா எடுத்தே கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் பல பேரு இருக்காங்க.

மனுஷன் கதாநாயகனா நடிக்கிற படங்களில் பாம்புகள்  கேரக்டர் ரோல்கள் பண்ணினா, சில படங்களில் பாம்புகளே ஹீரோ, ஹீரோயின் என இச்சாதாரி கேரக்டர்களா பண்ணுங்க.  ஆயிரம் வருஷத்துக்கு முன்னால ஒரு நாள் தெரியாம ஒரு பாம்ப மிதிச்சுட்டா கூட, அது அனுஷ்கா காலத்துலயும் நம்மள ஞாபகம் வச்சு வந்து கொத்துற அளவுக்கு தமிழ் சினிமா பாம்புகள் வல்லாரைக் கீரையை வயிறு நிறைய சாப்பிட்டு மெமரி பவர இன்க்ரீஸ் பண்ணியிருக்குமாம்.

யானை, நாய், பாம்பு, குரங்குகளைத் தவிர்த்துப் பார்த்தா, அடுத்து ஆடுகள், கோழிகள், மயில்கள், கிளிகள்னு பல மிருகங்களும் பறவைகளும் தமிழ் சினிமாவுல தலை காட்டி தனி ஆவர்த்தனம் பண்ணியிருக்கின்றன.சொல்லி வச்ச மாதிரி, தமிழ் சினிமாவுக்கே ஒரு சென்டிமென்ட் உண்டு. யானைன்னா பேரு கணேஷ்; நாய்ன்னா பேரு ராஜா, மணி; குரங்குன்னா பேரு ராமு; பாம்புன்னா பேரு நாகராஜா; இதைத் தவிர எந்தப் பேரும் பெரும்பாலும் வைக்க மாட்டாங்க.

இதுல எம்.ஜி.ஆர் ரொம்ப தெளிவு, அவருக்கு எந்த மிருகமா இருந்தாலும், பேரு ‘ராமு’ என்கிற ‘நாமு’தான். ஆனாலும் ஒரு விஷயத்தை ஒத்துக்கிட்டே ஆகணும்... பல நடிகர், நடிகைகள் செய்யற நடிப்பு என்னும் கொடூரத்துக்கு இந்த மிருகங்களின் நடிப்பே பரவாயில்லனுதான் சொல்லணும். அன்னைக்கு குரங்குகள் play பண்றதை ரசிச்ச குழந்தைகள் இன்னைக்கு கூகுள் playல கேம்ஸ் டவுன்லோட் பண்ணி விளையாடிக்கிட்டு இருப்பதுதான் பெரும் முரண்.