நினைவோ பறவை



‘பா’ for பார்த்தசாரதி

  ‘‘இப்பவும்
  அங்கேயேதான் இருக்கிறீர்களா?’’
  என்றார்.
  ‘‘எப்பவும்
  அங்கேயேதான் இருப்பேன்!’’
  என்றேன்.
  - கவிஞர் நகுலன்

முப்பது நாட்களுக்கான தூக்கம் என் கண்களில் அடைகாத்துக் கொண்டிருந்தது. நீண்ட நாள் பயணம் என்பதால் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ததில் கண்கள் சிவந்து, வீங்கிப் போய் நெருப்புத் துண்டங்களாக மாறியிருந்தன.

முதல்முறை அமெரிக்கா செல்வதால் எடுத்து வைத்த ஆவணங்களை சரி பார்க்கக் கூட நேரமின்றி விமான நிலையம் விரைந்தேன். சென்னையிலிருந்து மும்பை சென்று, மும்பையிலிருந்து நியூயார்க் எனக் கிட்டத்தட்ட இருபது மணி நேர விமானப் பயணம்.

என் அமெரிக்கப் பயணம் அறிந்து, நண்பர்கள் ஆளாளுக்கு அறிவுரை என்ற பெயரில் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருந்தார்கள். அமெரிக்கத் தூதரகத்தில் விசா அதிகாரியிடம் எப்படிப் பேச வேண்டும், அமெரிக்கா சென்றதும் இமிக்ரேஷன் அதிகாரியிடம் எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எடுத்த பாடத்தை நான் கடைசி பெஞ்ச் மாணவனாகக் குழம்பியபடி கேட்டுக் கொண்டிருந்தேன்.

‘‘வெளிநாட்டு ஏர்போர்ட்ல ரொம்ப கவனமா இருக்கணும். நமக்கே தெரியாம யாராவது நம்ம பேக்ல போதை மருந்து போட்டுட்டாங்கன்னா நாமதான் மாட்டுவோம்!’’‘‘ஸ்வீட்ஸ் எதுவும் கொண்டு போகாதீங்க! போன தடவை நான் மைசூர் பாகு கொண்டு போனேன். கஸ்டம்ஸ்ல மடக்கிட்டாங்க. ஒரு கிலோ மைசூர் பாகையும் சாப்பிடச் சொல்லி, அஞ்சு மணி நேரம் உட்கார வச்சி அப்புறம்தான் அனுப்பினாங்க!’’

‘‘மாத்திரை, மருந்து எடுத்துட்டுப் போனீங்கன்னா டாக்டர்கிட்ட ப்ரிஸ்கிரிப்ஷன் வாங்கிக்குங்க. இல்லைன்னா கஷ்டம்!’’  வெவ்வேறு திசைகளிலிருந்து வெவ்வேறு வழிகாட்டுதல்கள். நான் அறிவுரைகளின் திசையில் வழி தப்பிய குழந்தையானேன்.

ஆனால், அவர்கள் பயமுறுத்தியபடி எதுவும் நடக்கவில்லை. அமெரிக்கத் தூதரக நூலகத்தில் நான் உறுப்பினர் என்பதாலும், வாரா வாரம் புதன் மாலை அங்கு திரையிடப்படும் ஆங்கிலப் படங்களை பல வருடங்களாகப் பார்த்து வந்தவன் என்பதாலும் தூதரக கட்டிடத்திற்குள் நுழைந்தபோது படபடப்பில்லாமல் இருந்தேன்.

 எனக்கு முன் நேர்காணலுக்குச் சென்றிருந்த நான்கைந்து பின்னணிப் பாடகர்கள் ‘தங்களுக்கு விசா கிடைக்கவில்லை’ என்று தெரிவித்துவிட்டு, ‘‘கவனமா பதில் சொல்லுங்க. கண்ணைப் பார்த்துப் பேசுங்க!’’ என்றனர். ‘அனுமதித்தால் அவர்கள் நாட்டிற்கு செல்லப் போகிறேன், இல்லையெனில் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை’ என்னும் மனநிலையில் நான் எனக்கான வரிசையில் காத்திருந்தேன்.

தமிழில் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருந்ததால், ஐம்பது வயது மதிக்கத்தக்க வெள்ளைக்காரப் பெண்மணி என்னிடம் செந்தமிழில் கேள்வி கேட்டார்.
‘‘என்ன வேலை செய்கிறீர்கள்?’’‘‘என்ன விஷயமாகச் செல்கிறீர்கள்?’’‘‘எத்தனை நாள் பயணம்?’’‘‘நீங்கள் இந்தியாவிற்குத் திரும்பி வருவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’’நான் சொன்னேன்... ‘‘நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் அமெரிக்காவில் தங்கமாட்டேன். என் வேலையும் வாழ்வும் இந்தியாவில்தான்!’’அந்தப் பெண்மணி புன்னகைத்தபடி, ‘‘உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள்!’’ என்றார்.

இவ்வாறாக பத்து வருட விசா கிடைத்து நான் மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோது அங்கு விதி வேறுவிதமாக விளையாடியது என்று எழுதி இந்த இடத்தில் ‘தொடரும்’ போட வேண்டும். ஆனால், குங்குமத்திற்கான பக்க அளவு குறைவாக இருப்பதால் ‘தொடரும்’ தொடர்கிறது.
மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் இறங்கியபோது நான் ‘டிரான்ஸிட்’ பகுதிக்குச் சென்று விமான நிலையத்தின் வாகனத்திலேயே பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்றிருக்க வேண்டும். முதன்முறை ‘டிரான்ஸிட்’டில் செல்வதால் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்துவிட்டேன். சென்னையைப் போல் அல்லாமல் மும்பை உள்நாட்டு விமான நிலையத்துக்கும் பன்னாட்டு விமான நிலையத்துக்கும் அரை மணி நேரப் பயண தூரம் எனக்காகக் காத்திருந்தது.

நேரம் குறைவாக இருந்ததால் ஒரு டாக்ஸியைப் பிடித்து ‘‘பன்னாட்டு விமான நிலையம்’’ என்றேன். ஆரம்பத்தில் சிரித்துப் பேசிக்கொண்டே வந்த அந்த டாக்ஸி டிரைவர், பாதி வழியில் ஒரு பாலத்திற்கடியில் இருட்டில் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு அட்டையைக் கையில் கொடுத்தான். அதில், ‘A/c ரூ. 5000 Non A/c ரூ. 4000’ என்று எழுதியிருந்தது.  

‘‘அரை மணி நேர தூரத்திற்கு ஐயாயிரமா?’’ என்று நான் கோபப்பட்டதும், ‘‘வேண்டுமானால் இங்கே இறங்கிக் கொள். ஆனால், இதுவரை வந்ததற்கு இரண்டாயிரம் ரூபாய் கொடு!’’ என்றான்.விவாதத்தில் இறங்கினால் விமானத்தைத் தவறவிடும் வாய்ப்பிருந்ததால், வேறு வழியின்றி ஐயாயிரம் கொடுத்து பயணித்தேன். ‘நம் இந்தியர்கள் எவ்வளவு திறமையானவர்கள்! எப்படி எல்லாம் நூதனமாக ஏமாற்றுகிறார்கள்!’ என்று வியந்தபடி இமிக்ரேஷனுக்குள் நுழைந்தபோது மீண்டும் கேள்வி மேல் கேள்விகள்.

‘‘நான் ஒரு கவிஞன், திரைப்படப் பாடல் ஆசிரியன்!’’ என்றதும், என்னை மேலும் கீழும் பார்த்தார்கள். கண்கள் சிவந்து, சட்டை கசங்கி, இருபது நாள் தாடியுடன் என் தோற்றத்தைப் பார்த்தால் அவர்கள் மட்டுமல்ல... என் மனைவிகூட என்னை அமெரிக்கா அல்ல, அடுப்படிக்கு செல்லக்கூட அனுமதிக்கமாட்டாள்.‘‘அப்படி என்றால் ஜாவீத் அக்தரைப் போல நீங்களும் பாட்டு எழுதுபவரா?’’ என்று கேட்க, ‘‘ஆமாம்!’’ என்றேன்.

மீண்டும் மேலும் கீழும் பார்த்து அரை சந்தேகத்துடன் அனுமதித்தார்கள். ஒரு வழியாக ‘ஏர் இந்தியா’ விமானத்திற்குள் நுழைந்து முதிர் இளம் பனிப்பெண்களின் வழிகாட்டுதலில் இருக்கை தேடி அமர்ந்தபோது என் பக்கத்தில் அமர்ந்திருந்த பார்த்தசாரதியிடம் சிக்கிக் கொண்டேன். இந்த இடத்திலும் ‘தொடரும்’ போடலாம். ஆனால், இன்னும் இரண்டு பக்கங்கள் தேவைப்படுகின்றன.

பார்த்தசாரதி, முதல் பார்வையிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்டார். பல வருடங்களாக பசித்திருந்த புலி போல என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க ஆரம்பித்தார்.பார்த்தசாரதிக்கு பூர்வீகம் தஞ்சாவூர். முப்பது வருடங்களுக்கு முன்பே மும்பை வந்து, ஒரே பையனைப் பெற்று, மனைவியை ஹார்ட் அட்டாக்கிற்கு பறிகொடுத்து, சொந்தத் தொழிலை மேம்படுத்தி, இப்போது பிள்ளையும் மருமகளும் நியூஜெர்சியில் வாசம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்கா போய் வருகிறார். பேரக் குழந்தையுடன் விளையாடலாம் என்றால் அவனுக்குத் தமிழ் தெரியாது.

இவருக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. ஆங்கில ஆசிரியர் ரங்காச்சாரியின் வகுப்பைப் புறக்கணித்ததின் வலியை இப்போது உணருகிறார்.
பார்த்தசாரதி தன் எஃப்.எம்.மை நிறுத்தி வைத்த நேரத்தில் நான் கழிவறை சென்று வந்தேன். பேச்சு இப்போது தமிழ் இலக்கியத்தின் பக்கம் திரும்பியது. எல்லாப் பயணங்களிலும் எனக்கு மட்டுமே இப்படி நடக்கும். ஐந்தே ஐந்து புத்தகங்கள் மட்டுமே தன் வாழ்நாளில் படித்த அறிவுஜீவிகளிடம் மாட்டிக்கொள்வேன்.

‘‘சார், நீங்க ஜெயகாந்தன் எழுதின ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் படிக்கணும், என்னமா எழுதியிருக்காரு!’’ என்று பார்த்தசாரதி சொல்லிக் ெகாண்டிருக்கையில் தூக்கம் என் கண்களை தழுவிக் கொண்டிருந்தது.‘‘இப்படித்தான் ஒரு முறை காலேஜ் ஆண்டுமலர்ல நான்
எழுதுன கவிதையைப் படிச்சுட்டு...’’ என்று பார்த்தசாரதியின் ‘FM’ தொடர்ந்து ஒலிக்க, நான் தூங்கி விழுந்து கொண்டிருந்தேன்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பார்த்தசாரதி என்னை எழுப்பி, ‘‘வாங்க சார்! ஃப்ளைட்டுக்குள்ள ஒரு வாக்கிங் போய்விட்டு வருவோம் இப்படியே உட்கார்ந்திட்டிருந்தா கால் ஜாமாயிடும்’’ என்றார். நான் மறுத்தால் என்னை இடுப்பில் தூக்கிச் செல்லும் உத்வேகத்தில் அவர் இருந்ததால், நான் தூக்கக் கலக்கத்துடன் பலியாடு போல் அவர் பின்னால் நடந்தேன்.

திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்ததும், பார்த்தசாரதி எனக்கு பாடல் எழுதுவதற்கான பாடத்தை ஆரம்பித்தார். எப்படி எளிமையாக எழுதுவது என்றெல்லாம் அவர் விளக்கிக் கொண்டிருக்கையில் என்னை அறியாமல் எனக்குள் இருந்த அந்நியன் வெளிப்பட்டான்.‘‘மிஸ்டர் பார்த்தசாரதி! என் வேலையை நான் பார்த்துக்குறேன். உங்க வேலையை நீங்க பாருங்க.

உங்க பக்கத்துல ஒரு டாக்டர் இருந்தா அவருக்கு எப்படி ஆபரேஷன் பண்றதுனு சொல்லித் தருவீங்களா? அப்புறம் கவிஞர்கள் மேல மட்டும் ஏன் இந்தக் கொல வெறி?’’ என்று வெடித்ததும் பார்த்தசாரதி தன் பண்பலையை மூடிக் கொண்டு, ‘‘உங்களுக்கு தூக்கம் வருதுனு நெனைக்கிறேன்’’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

நண்பர்கள் பயமுறுத்தியபடி நியூயார்க் இமிக்ரேஷனிலும் எதுவும் நடக்கவில்லை. ‘‘நான் கவிஞன், பாடலாசிரியன்!’’ என்றதும் விழி விரிந்து, ‘‘அமெரிக்காவைப் பற்றி நல்ல பாடலை எதிர்பார்க்கிறோம்!’’ என்றார்கள். வெளியே வந்து தூரத்தில் லக்கேஜிற்காக காத்திருந்த பார்த்தசாரதியைப் பார்த்து புன்னைகைத்தேன். அவர் திருப்பிய முகத்தைத் திருப்பாமல் இருந்தார்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் இந்த அத்தியாயத்திற்கு ‘தொடரும்’ போட வேண்டிய பக்க அளவு நெருங்கி விட்டதால், சென்ற அத்தியாயத்தில் கேட்ட அதே கேள்வியை நண்பன் சுதாகர் கேட்டான்... ‘‘மச்சி! நாளைக்கு நயாகரா போலாமா?’’‘‘நயாகரா எல்லாம் அப்புறம் பார்க்கலாம். முதல்ல நான் தூங்கணும்.

அதுவும் ரெண்டு,  மூணு நாளைக்கு!’’ என்றேன்.வெவ்வேறு திசைகளிலிருந்து வெவ்வேறு வழிகாட்டுதல்கள். நான் அறிவுரைகளின் திசையில் வழி தப்பிய குழந்தையானேன்.உங்க பக்கத்துல ஒரு  டாக்டர் இருந்தா அவருக்கு எப்படி  ஆபரேஷன் பண்றதுனு சொல்லித் தருவீங்களா? அப்புறம் கவிஞர்கள் மேல மட்டும் ஏன் இந்தக் கொலவெறி?

வேறு வழியின்றி ஐயாயிரம் கொடுத்து பயணித்தேன். ‘நம் இந்தியர்கள் எவ்வளவு திறமையானவர்கள்! எப்படி எல்லாம் நூதனமாக ஏமாற்றுகிறார்கள்!’ .

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்