இளைஞர்களிடம் மேடை நாடகத்தைக் கொண்டு சேர்க்கணும்!



மதுரை கண்ணன்... மெல்ல அழிந்து வரும் மேடை நாடகங்களுக்குத் தொடர்ந்து உயிர் கொடுத்து வரும் அற்புதக் கலைஞர்!

ராஜா-ராணி காஸ்ட்யூமோ அல்லது அரண்மனை செட்டப்போ... எதுவாகிலும் ‘கூப்பிடுங்கள் கண்ணனை’ என அழைக்கிறார்கள் நாடகக்காரர்கள். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் நாடகங்களுக்குசெட் அமைத்திருக்கும் கண்ணன், சமீபமாக நாடகத் தயாரிப்பிலும் கலக்குகிறார். சுமார், நாற்பதாண்டு கால நாடக வாழ்க்கை... அவர் நம்மிடம் பேசுகையில் அனுபவமும் பேசுகிறது!

சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கிறது மதுரை கண்ணனின் காஸ்ட்யூம் கடை. குறத்தி வளையல் தொடங்கி மணிமாலை, ஆரம், மிருகங்களின் உடை, காந்தி வாட்ச், அனார்கலி செட், ருத்ராட்ச மாலை, காமராஜர் உடை, பெரியார் விக், இங்கிலீஷ் கிரீடம், ராஜா - ராணி உடைகள், ராணுவ உடைகள், போலீஸ் டிரஸ் வரை சகலமும் பளபளவென மின்னுகின்றன.

‘‘இதெல்லாம் இருபத்தைஞ்சு வருஷமா நானே கலெக்ட் பண்ணினது சார்... இதுபோக செட் பொருட்கள் தனியா ஒரு குடோன்ல இருக்கு. என்னைப் பத்தி சொல்லிக்க பெரிசா ஒண்ணுமில்ல. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாடகம்... நாடகம்... நாடகம் மட்டும்தான்...’’ - மெல்லிய குரலில் பேசுகிறார் கண்ணன்.

‘‘எனக்கு சொந்த ஊர் சிவகாசி பக்கத்துல வெத்திலையூரணி கிராமம். சின்ன வயசுல அம்மா இறந்துட்டதால மதுரையில சித்தப்பா வீட்டுல வளர வேண்டிய நிலை! அங்கதான் நாடகங்கள் பார்க்க ஆரம்பிச்சேன். ‘வள்ளி திருமணம்’ ஆரம்பிச்சு எந்த நாடகத்தையும் விட்டதில்ல. ஒரு கட்டத்துல நாடக ட்ரூப் கூடவே ஐக்கியமாயிட்டேன். பதினோரு வயசுல யார்கிட்டயும் சொல்லிக்காம சென்னைக்கு ரயிலேறிட்டேன். நடிக்கிற ஆசை. சான்ஸ் கேட்டு சுத்தினேன். பசி வயித்தைக் கிள்ள, ஹோட்டல் வேலைக்குச் சேர்ந்தேன்.

அப்போ நாடக நடிகர்கள் எல்லாரும் சொந்தக் காசு போட்டுதான் நாடகம் பண்ணுவாங்க. நானும் அப்படி காசு ெகாடுத்து நாடகம் நடிக்க ஆரம்பிச்சேன். 1972ல, மாரியூர் குமரேசன் என்பவர் ‘நீர்கோலங்கள்’ நாடகத்துல எனக்கு சான்ஸ் கொடுத்தார். அதில் என் நடிப்பை நிறைய பேர் பாராட்டினாங்க. அப்புறம், நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் மருமகன் மனோகரன் சார் போட்ட நாடகங்கள்ல நடிச்சேன். அந்த அனுபவம் பதினேழு வயசுலயே என்னை தனியாக நாடகம் போட வச்சது. தயாரிப்பு, செட்டெல்லாம் நான்தான்.

அதுக்குப் பிறகு எஸ்.வி.சகஸ்ரநாமம் அய்யாகிட்ட போய்ச் சேர்ந்தேன். அவர்தான் ‘நீ செட் துறையிலயே போயிடுப்பா. வாழ்க்கை நல்லாயிருக்கும்’னு அறிவுரை சொன்னார். ஆனா, மனசு முழுக்க நடிக்கணும்னு வெறி! சினிமாவில் சான்ஸ் கேட்டு அலைஞ்சு, எதுவும் செட்டாகாம செட் பக்கமே வந்துட்டேன். அதனாலதான், நம்மைப் பத்தி பேச வைக்கணும்னு மனசுல வைராக்கியம் உருவாச்சு. ‘சேவா ஸ்டேஜ்’ ராதா என்பவர்கிட்ட செட் வேலைகளை நாலு வருஷம் கத்துக்கிட்டேன். பிறகு,  தனியா என் மனைவி பெயர்ல ‘பத்மா ஸ்டேஜ்’னு நானே செட் போட ஆரம்பிச்சேன்.

எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டி.கே.சி. பிரதர்ஸ்னு நிறைய பேருக்கு நாடகம் பண்ணினேன்!’’ என்கிற கண்ணன், காஸ்ட்யூம் பக்கமும் தாவியது தனிக்கதை! ‘‘1991ம் வருஷம்தான் காஸ்ட்யூம் பக்கம் போனேன். பழைய காஸ்ட்யூம் கலைஞர்கள் இந்தத் துறையை விட்டு போயிட்டு இருந்த நேரம். அவங்ககிட்ட பல காஸ்ட்யூம் பொருட்களை சேகரிச்சேன். அடுத்து, ஒரு கதாபாத்திரத்துக்குத் தேவையான உடை எதுவோ அதை நானே உருவாக்கினேன். சிலதை வெளியூர்ல இருந்து ஆர்டர் பண்ணி வாங்குவேன்.

உதாரணத்துக்கு, டெல்லியிலதான் நிஜ வாள், கத்தி எல்லாம் கிடைக்கும். துணிகள் எல்லாம் சூரத் நகர்ல வாங்கிட்டு வந்து தைப்போம். விக், மேக்கப் அயிட்டங்களுக்கு ஃபேமஸ் கொல்கத்தா. வளையல்கள் ராஜஸ்தான்ல இருந்தும், லைட் அயிட்டங்கள் மும்பையிலிருந்தும் வரும். இந்த செட்களை வெளிநாடுகளுக்கும் ரெடி பண்ணி கொடுத்திருக்கேன்.

இது தவிர, தமிழ்நாடு, ஆந்திராவுல ஆயிரத்து நூறு பள்ளிகளின் ஆண்டு விழாக்களுக்கு நாங்கதான் செட் அமைச்சுக் கொடுக்குறோம். இப்போ, ‘ராஜயோகம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘ஜெகஜாலக் கில்லாடி’, ‘ஜேம்ஸ்பாண்ட் 007’னு 20 நாடகங்கள் தயாரிச்சாச்சு. அடுத்து, சாண்டில்யனின் ‘கடற்புறா’வும், கல்கியின் ‘பொன்னியின் செல்வ’னும் என்னோட செட், காஸ்ட்யூம்ல வரப் போகுது.

என்னோட ஆசை எல்லாம் ஒண்ணுதான். இன்னைக்கு மேடை நாடகங்கள் அழிஞ்சிட்டு வருது. இளைய தலைமுறை நாடகம்னா சீரியல்னுதான் புரிஞ்சுக்கறாங்க. அவங்ககிட்ட இந்த மேடை நாடகக் கலையைக் கொண்டு சேர்க்கணும்!’’ - நெகிழ்ச்சி கூட்டி முடிக்கிறார் மதுரை கண்ணன்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்