குளுகுளு ஃபலூடா!



எஞ்சினியரிங் படிப்புகளில் அடிப்படைப் படிப்பு, கிளைப்படிப்பு, கணிதத்தின் அவசியம்  என சகலத்தையும் சுருக்கமாக விளக்கிய விதம் அருமை.
- கே.வி.மரகதம் சிவமணி,சென்னை-78.

ஹெச்1பி, எல்1ஏ, எல்1பி எனும் மூன்று வித விசாக்களின் கட்டணத்தை அதிகரித்திருப்பது அமெரிக்காவின் ஏகாதிபத்திய சதியேதான்.
- ம.ராஜா, கோவில்பட்டி.

‘வாசல்களைத் திறந்து வைத்தால்தான் மாநிலம் வளரும் என்பதை காலம்தான் இனவாதிகளுக்கு உணர்த்தவேண்டும்’ என மணிப்பூருக்கு சொன்னது எல்லோருக்கும் பொருந்தும் என்பதை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார் ஜெயமோகன்!
- அ.கணவேல் குமார், திருவண்ணாமலை.

வெயில்கால தீ விபத்துகள் குறித்த கட்டுரை வெயில் காலத்திற்கேற்ற விழிப்புணர்வு அலாரம் என்றால் அது மிகையல்ல!
- எஸ்.ஜி.மணாளன் சுப்பு, சென்னை-4.

தனது வாழ்நாளில் கூட்டு மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டவேண்டும் என விரும்பும் மருத்துவர் சிவராமனின் Download மனசு, ரொம்பவே பெருசு!
- கே.ஜெயச்சந்திரன், திருப்பூர்.

கோடைக்கு இதமான அஞ்சலியின் படங்கள் குளுகுளு ஃபலூடா என்றால், அவரது பேச்சோ யதார்த்தம் அன்லிமிடெட்.
- பி.ஜி.எம்.சீனிவாசன், திருவள்ளூர்.

விபத்துப் பாதுகாப்புக்கான கிராஷ் டெஸ்ட்டில் பாஸாகாத கார்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுத்திருப்பது சீக்கிரமே மக்களை இறைவனடி சேர்க்கத்தானா?
- ஜி.பி.கணேஷ்ராம், கோவை.

பாதுகாப்பு இழை அச்சிடாத 10 கோடி 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது அதிர்ச்சித் தகவல். கள்ளநோட்டு பரவலாக இப்படி அரசே வாய்ப்பளிப்பது நியாயமா...ரே?
- க.பரமேஸ்வரன், வேலூர்.

ஆணாக, பெண்ணாக மாறி மாறி விளையாடுவது முற்போக்குச் சிந்தனையா, மூளையில்லாத விளையாட்டுச் சிந்தனையா என திகைக்க வைத்தது விநோத ரஸ மஞ்சரி!
- கி.ராஜசெல்வன், புதுச்சேரி.

ஆட்சி மாற்றம் வேண்டும் என சமூக ஆர்வலர்களும் துறை சார்ந்த வல்லுநர்களும் சுட்டிக்காட்டும் காரணங்கள் நாம் மறந்துபோன நிஜங்களே!
- ஜி.கே.குமாரராஜு, நாகர்கோவில்.

பெண்மையின் முக்கியத்துவத்தை பார்த்தவுடனே அறிந்துகொள்ளும்படி இருந்தது நியூஸ்வே. யப்பா... முகப்புப் பக்கமே மூச்சு முட்டியது!
- பெ.ராஜமூர்த்தி, தஞ்சாவூர்.

நிதானமாக திட்டமிட்டு கடினமாக உழைத்தால் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் என்பதற்கு சிவில் சர்வீஸ் தேர்வில் ஜெயித்த மாற்றுத்திறனாளி பாலநாகேந்திரன் ஓர் உதாரணம்!
- த.பாஸ்கரன், சென்னை-2