பர்மா பஜாரில் உருவாகும் சைனா



வித்தியாசம் காட்டினால்தான் வெற்றி!

எனக்கு எப்பவும் பெரிய கூட்டத்தோடு கலந்து நிற்கிற மாதிரி படங்கள் பண்ணணும்னு ஆசை. எங்க டைரக்டர் செய்த ‘துப்பாக்கி’ படத்தில் கூட அப்படியான காட்சிகள் நிறைய வரும். பர்மா பஜாரில் நாலுக்கு நாலு அடி இடத்தில் மொபைல் கடை வச்சிருக்கிறவன்தான் நம்ம ஹீரோ. சாமான்ய மனுஷன்.

அவனுக்கு வருகிற ஒரு பிரச்னை, அதிலிருந்து அவன் விடுபடுகிற இடங்கள்னு போகும். 20 நாட்கள் நிஜ பர்மா பஜார்லயே ஷூட் பண்ணினோம். அலை அலையா மக்கள் வந்துட்டுப் போற இடம். யாருக்கும் தெரியாம கேமராவை புழங்க வச்சு எடுத்த படம். ‘சைனா’னு பெயர் சூட்டியிருக்கோம். இது ஒரு ட்ரெண்ட் செட்டரா இருக்கும்னு சொல்றதில் பெருமை அடைகிறேன்!’’

- தீர்மானமாகப் ேபசுகிறார் புதுமுக இயக்குநர் ஹர்ஷவர்தன். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் பிரதான சீடர்.‘‘அது என்ன ‘சைனா’... பேரே வித்தியாசமா இருக்கு..?’’‘‘நிறைய வித்தியாசங்கள் படத்துலயே இருக்கு. ஆசைங்கிறது பொதுவானது. நல்லவனுக்கும் ஆசை வரும். கெட்டவனுக்கும் ஆசை வரும். அந்த ஆசை இந்த ரெண்டு தரப்பிலும் வித்தியாசப்படும்.

அந்த ஆசை அளவு மீறி பேராசைங்கிற கட்டத்திற்கு போகும்போது அவனுக்கு வருகிற பிரச்னைகள். இதை ஆக்‌ஷன் த்ரில்லர்னு சொல்லலாம். ஆனால், அதற்கும் மீறிய விஷயங்கள் இருக்கு. நாம் அன்றாடம் எதிர்கொள்கிற சம்பவங்கள். அதுவே பிரச்னைக்குரியதா மாறிடுற சூழ்நிலையையும் இதில் தெளிவா காட்டுறேன்.

செட்டே போடாமல் பர்மா பஜாருக்குப் போய் படம் எடுக்கிறது சாதாரண வேலையில்லை. என்னதான் கேமராவை மறைச்சு வச்சு எடுத்தாலும், நம்ம நடவடிக்கைகள் காட்டிக் கொடுத்துடும். பர்மா பஜாரில் வியாபாரிகள், ‘என்னங்க, எங்களைப் பத்தி மோசமா காட்டப் போறீங்களா?’னு பயந்திருந்தாங்க. ஸ்கிரிப்ட் காட்டி அமைதியா எடுத்துச் சொல்லி புரிய வைச்சதும் அவங்களே அருமையா ஒத்துழைப்பு கொடுத்தாங்க.

அதுக்கும் மேல ஷூட்டிங் சௌகார்பேட்டையில வச்சிருந்தோம். ராத்திரியில 1 மணியிலிருந்து 3 மணி வரைக்கும்தான் அங்கே லாரிகள் போக்குவரத்து இல்லாமல் நிற்கும். அதுக்குள்ள ஷூட்டிங் செய்தாகணும். காலுக்குக் கீழே ஏதோ ‘வழுவழு’னு தட்டுப்படும். பார்த்தால் பெருச்சாளிகள் குதிச்சுக்கிட்டு ஓடும். அங்கேயும் மக்கள் வாழ்ந்துக்கிட்டுத்தான் இருங்காங்க!’’‘‘கலையரசன் முழு ஹீரோவா களமிறங்கியிருக்காரே..!’’

‘‘என்னோட க்ளாஸ்ேமட். அந்தக் காலத்தில் எங்க தாத்தா ஜே.ஜி.விஜயம்தான் ‘மந்திரிகுமாரி’, ‘ஆனந்தஜோதி’, ‘கலையரசி’ மாதிரியான படங்களுக்கு கேமராமேன். எல்லீஸ் ஆர்.டங்கன்கிட்டே வேலை பார்த்தவர். எனக்கு படிக்கிற காலத்திலிருந்தே சினிமாதான் முழுக் கனவு. ‘இப்படிச் செய்யணும்... அப்படிச் செய்யணும்’னு கலையரசன்கிட்ட பேசிக்கிட்டே இருப்பேன்.

‘கண்டிப்பா செய்வோம் பிரதர்’னு சொல்வார். பார்த்தால் ‘மெட்ராஸ்’ல நண்பன், அரசியல்வாதியா பேசப்பட்டுட்டார். அவரது வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. கடுமையான உழைப்பு. இதிலும் கலையரசன் ராத்திரி பகல் பார்க்காமல் அவ்வளவு ஈடுபட்டு நடிச்சார். உடனே அவர் ‘கபாலி’ படத்தில் நடிக்கறதும் எங்களுக்குப் பெரிய சந்தோஷம். இப்ப இருக்கிற இளம் நடிகர்களில் அவர் இன்னும் வேகமா முன்னுக்கு வருவார். அதற்கான உத்வேகமும், திறமையும் அவர்கிட்ட நிறையவே இருக்கு.

எங்க ஹீரோயின் ரித்து வர்மா. தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார். நம்ம மொழியில் அவ்வளவு பரிச்சயம் இல்லைன்னாலும் சடசடன்னு எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டு நடிச்சார். ஒரு தமிழ் நடிகைக்குரிய அத்தனை ஈடுபாட்டோடும் நடித்துக் கொடுத்தார். இதுல  செளகரியமான படப்பிடிப்பு
கிடையாது.

நிறையப் பேர் முன்னிலையில் நடிக்க வேண்டிய கதாபாத்திரம். ஆனாலும் மிகுந்த தெளிவோடு கேரக்டரை செய்தாங்க. இப்போது தமிழ் சினிமாவில் தொழில்முறை நடிகர்கள் நிறைய பேர் வந்தாச்சு. அவங்க சரியான நேரத்துக்கு வந்து உண்மையான உழைப்பைக் கொட்டிக் கொடுத்துட்டு போயிடுறாங்க. இங்கே வித்தியாசமான சினிமா தந்தால் தவிர, ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பது சாத்தியமே இல்லை!’’
‘‘பாடல்கள்...’’

‘‘வேத்சங்கர், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’, ‘மதுபானக் கடை’னு பளிச்னு வெளியே வந்தார். இதில் நல்ல மெட்டுகள். படத்திற்கு அவசியப்பட்டால் தவிர, சும்மா பாடல்களை வைக்கலை. அபிநந்தன் ராமானுஜன் இன்னைக்கு மலையாளம், தமிழ்னு பேசப்படுகிற ஒளிப்பதிவாளர். மலையாளத்துல ‘ஆமென்’ படம் அவர் ஒளிப்பதிவுக்காகவே பாராட்டப்பட்டது. அபிநந்தன் ஸ்டைல்னே ஒண்ணு ஆரம்பிச்சிட்டாங்க. அவரே இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர்.

அவர் இல்லாட்டி இவ்வளவு நெருக்கடியான பர்மா பஜார் ஷூட்டிங் சாத்தியப்பட்டிருக்காது. அவர் திறமையைப் பார்த்துட்டு கே.வி.ஆனந்த் அடுத்த படத்திற்கு அவரை புக் பண்ணியிருக்கிறார். புகழ்பெற்ற ரெட் கேமராவின் இந்தியப் பிரிவு தலைவர்தான் இந்தப் படத்தையே தயாரிக்கிறார். நான் மும்பை போய் கதை சொன்னதும், ‘உடனே வேலையை ஆரம்பிங்க’னு அனுப்பி வச்சது அவர்தான்!’’

- நா.கதிர்வேலன்