கொத்தத் தயாராகும் கோபப் பறவைகள்!



குட்டீஸைப் பொறுத்தவரை இதுதான் ‘கபாலி’. பின்னே, ஸ்மார்ட் போன் யுகத்தின் தலைசிறந்த விளையாட்டான ‘ஆங்கிரி பேர்ட்ஸ்’, திரைப்படமாகிறதென்றால் அது திருவிழாதானே. இப்போ அப்போவென போக்குக் காட்டி ஐரோப்பா, அமெரிக்கா எனப் படிப்படியாக ரிலீஸான ‘தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி’ இந்தியாவில் ரிலீஸுக்கு ரெடி. அதுவும் தமிழில் 3டி அனுபவத்தைத் தரத் தயாராக!

சமீப காலமாக ஹாலிவுட் படங்களின் முக்கியமான மார்க்கெட்டாக இந்தியாவைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், ‘தி ஜங்கிள் புக்’ பெற்ற இமாலய வெற்றி. இந்தியாவில் மட்டும் சுமார் 247 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய வரலாறு படைத்திருக்கிறது அந்தப் படம். இது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கின் ‘ஃபேன்’ பட வசூலை விட அதிகம். இந்தியத் திரைப்பட வரலாற்றில் தனிப்பெரும் சாதனையான ‘பாகுபலி’ வசூலில் இது கிட்டத்தட்ட பாதி.

இப்படியொரு வெற்றியைத்தான் ‘ஆங்கிரி பேர்ட்ஸ்’ படமும் குறி வைத்திருக்கிறது. ‘ஜங்கிள் புக்’, ‘கேப்டன் அமெரிக்கா’ படங்களோடு போட்டி போடக் கூடாது என்பதற்காகவே இங்கே காத்திருந்து களமிறங்குகிறது. முட்டையைத் திருடும் பன்றிகள், அதைத் தாக்கி அழிக்கும் பறவைகள் என்றிருந்த விளையாட்டு ஒன்லைனை சினிமாவாக்க முடியாதே! அதனால் அதில் உலகப் பொது மசாலாக்கள் தூவி விரித்து எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜான் விட்டி.

கோபத்தைக் குறைக்க வகுப்புகளுக்குப் போகும் அளவுக்கு சிடுசிடு சிறு பறவைகளைக் கொண்ட ஒரு தீவு. அங்கே திடீரென கப்பலில் வந்திறங்குகின்றன பன்றிகள். ‘நாங்கள் உங்கள் நண்பர்கள்’ எனக் கபட நாடகமாடி பறவைகளுக்கு கேளிக்கை காட்டிக்கொண்டே, இன்னொரு பக்கம் முட்டைகளைத் திருடுகின்றன பன்றிகள். ரெட், சக், பாம் என்ற மூன்று முக்கிய கதாபாத்திரங்களும் இதை எப்படி முறியடிக்கின்றன என்பதுதான் கதை. வெறும் கார்ட்டூன், காமெடி என்பதைத் தாண்டி இதில் மண்ணின் மைந்தர்கள் Vs வந்தேறிகள் என்ற அரசியலும் பேசப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சர்வ வல்லமை படைத்த பறவையாக இதில் காட்டப்படும் சோம்பேறிக் கழுகு, அமெரிக்காவைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள் விமர்சகர்கள். எப்படியோ பொழுதுபோக்கையும் உலக அரசியலையும் சுமந்துகொண்டு நம்மூர் சுட்டிகளின் மனதைக் கொத்தத் தயாராகிவிட்டன இந்த கோபப் பறவைகள்!

- நவநீதன்