வணிகம் வளர்க்கும் வாட்ஸ்அப்!



‘‘நாங்க எல்லோருமே கிராமப்புறங்கள்ல பிறந்து நகரத்துக்கு வந்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள். தட்டுத்தடுமாறி ஆளுக்கொரு துறையில ஓரளவு வளர்ச்சியைத் தொட்டிருக்கோம். இதுக்கும் மேலயும் இலக்கு இருக்கு. ஆனா எங்களை மாதிரி கனவோட வந்த எல்லோருக்கும் அது சாத்தியப்படலே.

பல பிரச்னைகள்... தடைகள்... நிறைய பேருக்கு ஆலோசனையும், வழிகாட்டுதலும் அவசியமா இருக்கு. அவங்க மனசு விட்டுப் பேச, சந்தேகங்கள் கேட்க, உதவி வேண்டத்தான் இந்த ‘வணிகம்’ வாட்ஸ்அப் குரூப்.

எல்லா நேரமும் நம்ம கூட அம்பது பேர் சேர்ந்திருக்கிற தைரியம்... எப்பவும் யாரையும் தொடர்புகொள்ள முடியும்ங்கிற நம்பிக்கை... அது மட்டுமில்லாம, ஒருத்தருக்காக மற்ற எல்லோரும் இணைந்து பிசினஸ் பண்ற வாய்ப்பு... தொழில்ரீதியா, மனரீதியா பெரிய மாற்றத்தையும், வளர்ச்சியையும், நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கோம்!’’ - உற்சாகமாகப் பேசுகிறார் டெக்னாலஜி டிரெயினிங் எக்ஸ்பர்ட்டான கார்த்திக். ‘வணிகம்’ வாட்ஸ்அப் குரூப்பின் அட்மின் இவர்தான்.

அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்து, சுய முனைப்பில் முன்னேறி, இன்று தொழிலதிபர்களாகவும், பெரும் நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிற 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ‘வணிகம்’ குரூப்பில் இருக்கிறார்கள். தொழில் பகிர்வு, கருத்துப் பகிர்வு,  தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு பயிற்சிகள், பிரச்னைகளுக்குத் தீர்வு என ஒவ்வொரு நிமிடமும் ஆக்கபூர்வமாக இயங்குகிறது இந்த வாட்ஸ்-அப் குரூப்.

‘‘படிக்கும்போதும் சரி, தொழில் தொடங்கும்போதும் சரி, பெரிசா எந்த வழிகாட்டுதலும் கிடைக்காம எல்லோருமே சுயமா அனுபவங்களை சேகரிச்சுக்கிட்டு வளர்ந்தவங்கதான். நாங்க பட்ட கஷ்டத்தை அடுத்த தலைமுறை படக்கூடாதுங்கிற எண்ணத்துல நிறைய நல்ல காரியங்கள் செஞ்சுக்கிட்டிருக்கோம். +2 முடிச்சுட்டு உயர்கல்விக்குப் போக முடியாம தவிக்கிற பிள்ளைகளைத் தத்தெடுத்து, அவங்க விரும்பற பிரிவில படிக்க வைக்கிறோம். நூற்றுக்கணக்கான பிள்ளைகள் எங்க அரவணைப்புல இப்போ படிச்சுக்கிட்டிருக்காங்க.

அந்தப் பணிக்காக மாதமொரு முறை நாங்க சந்திச்சுக்கிறதுண்டு. ஆனா, தொழிலைப் பத்தி பேசுறதில்லை. யார்கிட்ட நன்கொடை வாங்கலாம், எத்தனை பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம், நன்கொடையை அதிகரிக்க என்ன செய்யலாம்னுதான் பேசுவோம். இன்னும் சொல்லப் போனா, சில நண்பர்கள் என்ன தொழில் செய்றாங்கன்னு கூட தெரியாது.

ஆனா, எல்லோருமே வாடிக்கையாளர்கள்கிட்ட பேசும்போது, கடைசி அஞ்சு நிமிடம், எங்க மாணவர்களுக்காக பேசுவோம். அவங்களுக்காக உதவி கோருவோம். அப்படி வாடிக்கையாளரா அறிமுகமாகி, இப்போ எங்ககூட ஐக்கியமாகி எங்க பணியில பங்கெடுத்துக்கிற நண்பர்கள் நிறைய இருக்காங்க.

சில மாதங்களுக்கு முன்னால ஏற்பட்ட மழை, வெள்ளத்தால ஏகப்பட்ட பேருக்கு தொழில் பாதிப்பு. நானும் நேரடியா பாதிக்கப்பட்டேன். அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாத அளவுக்கு மோசமான சூழல். என்னை மாதிரியே பல நண்பர்களுக்கும் பாதிப்பு!

மத்தவங்க நன்மைக்காக தங்கள் வருமானத்தில ஒரு பங்கை எந்த பிரதிபலனும் பார்க்காம கொடுக்கிற நண்பர்களுக்கு இந்த சூழலில் ஏதாவது செய்யணும்... எப்பவும் அவங்ககிட்டயே உதவிகள் கேட்டுக்கிட்டிருக்கோம், இந்த சூழல்ல அவங்களுக்கு நாம ஏதாவது உதவி செய்யணும்... எல்லோருக்குள்ளயும் ஒரு பரிவர்த்தனை இருக்கணும்ங்கிற எண்ணம் உருவாச்சு...

அதுக்கப்புறம்தான் எல்லோரும் கூடுற சமயங்கள்ல அவங்கவங்க தொழிலைப் பத்தி பேச ஆரம்பிச்சோம். ஜெகதீஸ் பில்டரா இருக்கார். செல்வகுமார் சிசிடிவி மற்றும் இன்வெர்ட்டர் நிறுவனம் நடத்துறார். சரவணகுமார் விளம்பர நிறுவனம் நடத்துறார். ரத்னகுமார் ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட் எக்ஸ்பர்ட். முத்துசுவாமி ஆர்கானிக் ஷாப் வச்சிருக்கார்...

ஒருத்தருக்கொருத்தர் மத்தவங்க தொழிலைப் பரிந்துரை செஞ்சுக்க ஆரம்பிச்சோம். என் வாடிக்கையாளர்கிட்ட என் பிசினஸைப் பத்திப் பேசும்போது, அவருக்குத் தேவை இருக்கிற பட்சத்துல நண்பர்களோட புராடக்ட் பத்தியும் பேசுவேன்.

அதுக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சுச்சு. எல்லோருக்குமே ஆர்கானிக் உணவுப் பொருட்களை வாங்கணும்ங்கிற எண்ணம் இருக்கு. ஆனா எங்கே வாங்குறதுன்னு தெரியலே. நம் நண்பர்கள்ல ஒருத்தரான முத்துசுவாமி ஆர்கானிக் ஷாப் வச்சிருக்கார்னு தெரிஞ்ச உடனே எல்லோரும் அவர்கிட்ட ஆர்டர் பண்ணினாங்க.

ஒரே மாதத்தில 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல அவருக்கு கூடுதல் பிசினஸ் ஆச்சு. அதேமாதிரி வீடு வாங்க நினைக்கிற நண்பர்களுக்கு ஜெகதீஸையோ, சேதுமாதவனையோ பரிந்துரை செய்வோம். இன்வெர்ட்டர் தேவைன்னு சொல்ற நண்பர்களுக்கு செல்வகுமாரை அறிமுகம் செய்வோம். ரொம்பவே ஆக்கபூர்வமா இந்த வேலைகள் நடந்துச்சு. இதை இன்னும் விரிவுபடுத்த நினைச்சப்பதான் ‘வணிகம்’ வாட்ஸ்அப் குரூப் உதயமாச்சு...’’ என்கிறார் கார்த்திக். 

‘‘இப்போதைக்கு குழுவில் 50 பேர் இருக்காங்க. அடுத்தடுத்து இன்னும் நிறைய பேரை சேர்க்கிற திட்டமும் இருக்கு. இதுல இருக்கிறவங்க தங்களோட புதிய ப்ராஜெக்ட், தயாரிப்புகளை பகிர்ந்துக்குவாங்க. மற்ற நண்பர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள்கிட்ட தங்களோட பிசினஸ் பத்தி பேசுறபோது, அந்த தயாரிப்புகள் பத்தியும் பேசுவாங்க.

ஒருவேளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அந்த தயாரிப்பு தேவைப்பட்டா, ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தருவாங்க. நான் என்னோட வாடிக்கையாளர்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது, அவர் ஒரு நல்ல வெப்சைட் டிசைனர் கேட்டார்.

அமிர்தா கார்த்திக்கை பரிந்துரை செஞ்சேன். அவருக்கு ஒரு பிசினஸ்... இந்த மாதிரி ஒருத்தர் மற்றவரை பரிந்துரை செய்யும்போது பிசினஸ் விரிவடையுது. எல்லோருக்குமே புதுசு புதுசா வாடிக்கையாளர்கள் கிடைக்கிறாங்க.

சோர்வைப் போக்கி உற்சாகமூட்டுற வகையில வெற்றிகரமான வணிகர்கள், தொழிலதிபர்களோட பேச்சுகள், வெற்றிக்கதைகள், தன்னம்பிக்கை கொடுக்கிற செய்திகளையும் குரூப்ல போடுவோம். சந்தேகங்கள், பிரச்னைகள், உதவிகள் தேவைப்பட்டா அதையும் பதிவு செய்வாங்க. மத்தவங்க உதவுவாங்க. அதனால 50 பேர் எப்பவும் நமக்கு பக்கபலமா நிக்குறாங்கன்னு ஒரு நம்பிக்கையும், தெளிவும் பிறக்குது. புதுசு புதுசா சிந்திக்கவும் முடியுது. தைரியமா தொழில்ல அடுத்த அடி எடுத்து வைக்கவும் முடியுது’’ என்கிறார் செல்வகுமார்.

‘‘வெறும் வாட்ஸ்அப் குரூப்பா மட்டுமில்லாம, ‘வணிகத்தை’ ஒரு இயக்கமா முன்னெடுக்கிற வேலையில இறங்கியிருக்கோம். இதுக்குன்னு (www.vanigam.org) ஒரு வெப்சைட் தொடங்கியிருக்கோம். அதுல, ஒவ்வொரு மெம்பரோட பிசினஸ் பத்தியும் ஒரு பக்கம் இருக்கும். அதுல வீடியோ ஆல்பம், ப்ராடக்ட் பத்தின விபரங்களும் இருக்கும். ஃபேஸ்புக் பக்கமும் ஓப்பன் பண்ணியிருக்கோம். அதன்மூலமா புதிய நண்பர்களையும், உறுப்பினர்களையும் சேக்குறோம். மாதம் ஒருமுறை மாலை நேரத்துல எல்லோரும் சந்திக்கிறோம்.

அந்த சந்திப்புல, யார் மத்தவங்களுக்காக அதிகம் பரிந்துரை செய்திருக்காங்களோ அவங்களைப் பாராட்டி கௌரவிக்கிறோம். புதிய வழிகாட்டுதல்கள், சந்தேகங்களுக்குத் தீர்வு, புதிய திட்டங்களுக்கு ஆலோசனை... இப்படி அந்த ரெண்டு மணி நேர சந்திப்புல எல்லாம் கிடைக்கும். ஒருத்தர் தன்னோட அனுபவத்தைப் பகிர்ந்துக்கும்போது, அது மத்தவங்களுக்குப் பாடமா இருக்கும். ‘வணிகம்’ வாட்ஸ்அப் குரூப் உண்மையிலேயே எங்களை தொழில்ல அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கு...’’ என்று நெகிழ்கிறார் செல்வமுத்துக்குமரன்.

வீண் அரட்டைகளும், வம்புகளும், பொழுதுபோக்குகளும்புரண்டோடும் வாட்ஸ்அப் மூலம் வணிகத்தையும் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் வளர்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது ‘வணிகம்’ வாட்ஸ்அப் குரூப்.

வீண் அரட்டைகளும், வம்புகளும்,  பொழுதுபோக்குகளும் புரண்டோடும் வாட்ஸ்அப் மூலம் வணிகத்தையும்  நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும் வளர்க்க முடியும் என்று  நிரூபித்திருக்கிறது ‘வணிகம்’ வாட்ஸ்-அப் குரூப்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்