இது நியாயமா அடிக்கற ஆக்க்ஷன் படம்!
விஜய்சேதுபதியின் ‘றெக்க’
‘‘விஜய்சேதுபதிகிட்ட கதை சொல்லிட்டிருந்தேன். இடை இடையே அவருக்கு அடிக்கடி போன் கால்ஸ் வந்துச்சு. ‘ஸாரி ஜி... ஒரு நிமிஷம்...’னு சொல்லிட்டு அவர் போனை எடுக்கறார். எல்லாமே உதவி இயக்குநர்கள் அவர்கிட்ட கதை சொல்றதுக்காக டைம் கேட்டு வந்த போன்கள்.
 இவ்வளவு பேர் காத்திருக்குற ஒரு வாய்ப்பு இதுனு எனக்கு அப்பவே புரிஞ்சுது!’’ - கண்களில் பரவசம் மின்ன புன்னகைக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா. விஜய்சேதுபதி, லட்சுமி மேனன் நடிக்கும் ‘றெக்க’ படத்தின் இயக்குநர்.
‘‘இப்படி மோஸ்ட் வான்டட் ஹீரோன்னா அவர் எவ்வளவு பந்தா பண்ணணும்! ம்ஹும். அது கொஞ்சமும் விஜய் சேதுபதிகிட்ட இல்ல. போன் பண்ற ஒவ்வொருத்தர்கிட்டயும் பொறுப்பா பேசி, அவங்க பெயர், டீட்டெயில்ஸ் வாங்கி வச்சுக்கறார். என்னோட கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.
 ஆனா, ‘ஜி... இதுல ஆக்ஷன் ரொம்பவே தூக்கலா இருக்கு. ஓவர் டோஸ் வேணாம். நாம ஒருத்தர அடிச்சா, அதுல ஒரு நியாயம் இருக்கணும்!’னு சொன்னார். அதன்பிறகு இன்ச் பை இன்ச்சா இழைச்சு, ஒரு ஃபேமிலி ப்ளஸ் ஆக்ஷன் ஸ்கிரிப்ட்டோட போய் நின்னேன். ‘சூப்பர்ஜி... சூப்பர்ஜி’னு உடனே ஷூட்டிங் கிளம்பி வந்துட்டார்!’’‘‘அதென்ன ‘றெக்க’?’’
‘‘ஒருத்தரே ஒரே சமயத்துல நாலஞ்சு வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்ய முடியாது. எல்லாமும் ஒரே நேரத்துல ஒண்ணா வந்து சேர்ந்தா, ‘எனக்கு என்ன றெக்கையா முளைச்சிருக்கு’னு பேச்சுவாக்குல நாம சொல்வோம் இல்லையா..? அதுல இருந்து பிடிச்ச வார்த்தைதான் இந்த ‘றெக்க’. விஜய்சேதுபதியை ஒரு நடிகரா எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும்.
அவர் பிளாக் காமெடி, ஹாரர்னு வெரைட்டியா பண்ணியிருக்கார். எல்லாத்திலும் நூறு மார்க் வாங்கிட்டார். ஆனா, ‘றெக்க’யில அவரோட ஆக்ஷன் பேசப்படும். ஒரு கமர்ஷியல் ஹீரோவா அவரை உயர்த்தும் படம் இது. கும்பகோணத்துப் பையன் சிவாவா விஜய்சேதுபதி. பி.ஏ., எல்.எல்.பி. படிச்ச சிவா சந்திக்கும் பிரச்னையினால் மதுரை, கோவைனு அடுத்தடுத்து ட்ராவல் ஆகுறார். ஹீரோ சட்டம் படிச்சிருந்தாலும் படத்துல ஒரு கோர்ட் சீன் கூட இருக்காது.
‘இது ஆக்ஷன் கதை. ஸோ, நீங்க கொஞ்சம் உடம்பைக் குறைச்சா நல்லா இருக்கும்’னு அவர்கிட்ட சொன்னேன். எப்பவும் ஸ்வீட், சாக்லெட்னு விரும்பிச்சாப்பிடுற விஜய்சேதுபதி எப்படி உடம்பை குறைக்கப் போறார்னு நினைச்சேன். போட்டோஷூட் அப்போ என் கதைக்கான சிவாவாக முன்னால வந்து நின்னார்!’’
‘‘லட்சுமி மேனன்..?’’ ‘‘காலேஜ் படிக்கற பொண்ணு பாரதியா நடிக்கறாங்க. லைலா, ஜெனிலியா மாதிரி ஒரு பெப்பியான, அப்பாவியான ஹீரோயின்னா இப்ப லட்சுமி மேனன்தான் சாய்ஸ். அவரைப் பத்தி நியூஸ் எல்லாம் ‘அவர் +2 பாஸாகிட்டார்... காலேஜுக்கு ஆட்டோவுல போறார்... டூவீலர்ல போறார்’னு வரும்.
ஆனா, படங்கள்ல பண்ற ரோல் எல்லாம் தலையில எண்ணெய் வழிய, நடு நெத்தியில குங்குமம் வச்ச இல்லத்தரசிதான். ஆனா இந்தப் படத்துல அவர் வயசுக்கேத்த மாதிரி காலேஜ் பொண்ணாவே நடிக்கிறாங்க. இந்தக் கதையை முழுசா கேட்டு முடிச்சதும், ‘இந்தப் படம் நான் கண்டிப்பா பண்றேன். நீங்க வேற எந்த ஹீரோயின்கிட்டயும் கதை சொல்ல மாட்டேன்னு சொல்லுங்க’னு கேட்டாங்க. அந்த அளவுக்கு கதை பிடிச்சுப் போச்சு அவங்களுக்கு!’’
‘‘விஜய்சேதுபதி ஆக்ஷனை விரும்ப மாட்டாரே...’’‘‘அப்படியெல்லாம் இல்ல. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் கணேஷ், ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தயாரிச்சவர். அவரும் விஜய்சேதுபதியும் பால்ய நண்பர்கள். நான் முதல்ல கணேஷ் சார்கிட்டதான் கதையைச் சொன்னேன். ‘சேது எதிர்பாக்குற ஆக்ஷன் இதுதான்’னு சொல்லி விஜய்சேதுபதிகிட்ட அவர் அழைச்சிட்டு போனார். அவங்க ‘வாடா... போடா...’ நண்பர்கள். அதனால ஒவ்வொரு விஷயத்திலும் விட்டுக்கொடுத்துப் போறாங்க. அதில் எனக்கொரு நன்மை... இந்தப் படத்துக்காக நான் எது கேட்டாலும் அது ஈஸியா கிடைச்சிடுது!’’ ‘‘படத்துல வேற என்னஸ்பெஷல்?’’
‘‘ஹீரோ - ஹீரோயின் காம்பினேஷனே ஃப்ரெஷ்ஷா இருக்கும். விஜய்சேதுபதியோட அப்பாவா கே.எஸ்.ரவிக்குமார். வலுவான வில்லன்கள் இல்லாமல் ஆக்ஷன் ருசிக்காதே! அதனால ‘வேதாளம்’ கபீர்சிங், ‘பாண்டியநாடு’ ஹரீஷ் உத்தமன்னு இதில் ரெண்டு வில்லன்கள். ‘ஆடுகளம்’ கிஷோரை வில்லனாத்தான் பாத்திருப்பீங்க.
இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நல்ல ஒரு குணச்சித்திர நடிகரா டிராவல் ஆவார். அவர் விஜய்சேதுபதியோட அண்ணனா நடிக்கிறார். நல்ல டெக்னீஷியன்ஸ் டீம் அமைஞ்சிருக்கு. ‘சூது கவ்வும்’, ‘சேதுபதி’ படங்களோட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணாவோட வொர்க் இதிலும் பேசப்படும். டி.இமான் இசையில ரெண்டு பாடல்கள் இப்பவே ரெடி. அதுல ஒரு பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்காங்க. ‘கூட மேல கூட வச்சு’ மாதிரி ஒரு மென்மையான மெலடி!’’
‘‘உங்களைப் பத்தி...?’’‘‘லிங்குசாமி சார் எனக்கு ஹெட்மாஸ்டர் மாதிரி. அவரோட உதவியாளர் பன்னீர்செல்வம் சார்கிட்டதான் நான் வேலை பார்த்தேன். ஸோ, அவர்தான் கிளாஸ் டீச்சர். ‘ரேணிகுண்டா’, ‘18 வயசு’ படங்கள்ல வொர்க் பண்ணினேன். அவங்க ரெண்டு பேர்கிட்டேயும் நான் கத்துக்கிட்டது அதிகம்.
‘நான் இன்னும் உயரத்துக்குப் போகணும்’னு எப்பவும் விரும்புறவர் பன்னீர் சார். முதன்முதலா அவர்கிட்ட கதை சொல்லும்போதே, ‘இந்தக் கதை விஜய்சேதுபதிக்கு செம பொருத்தமா அமையும்’னு சொன்னார். படத்தை முடிச்சிட்டு அவருக்கும் லிங்கு சாருக்கும் ஸ்கிரீன் பண்ணணும்னு விரும்புறேன்!’’
- மை.பாரதிராஜா
|