உன்னால் நல்லது நடக்கட்டும்!



சுமதிக்கு நிச்சயம் ஆனபோதே மாமியார் சொல்லிவிட்டார், ‘‘இனிமே அவ எங்க வீட்டுப் பொண்ணு, அவ வேலைக்கு போகணும்னு அவசியமே இல்லை!’’ என்று!அப்போது சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஆனால், இப்போது... திருமணமாகி ஒரு மாதமாக வீட்டிலேயே கிடக்க என்னவோ போலிருந்தது. எப்போதும் பரபரப்பாக இருந்துவிட்டு, திடீரென மணிக்கணக்கில் உட்கார்ந்து டி.வி. திரையை வெறிப்பதில் ஒருவித வெறுமை வந்துவிட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. கணவன் சுந்தரிடம் இது பற்றிப் பேசலாமா என சுமதி தயங்கிக் கொண்டிருந்த சமயம்... வீட்டு வாசலில் கால் டாக்ஸி வந்து நின்றது. கணவன்-மனைவி இரண்டு பேர் கையில் பழத்தட்டுடன் சுந்தரின் வீட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே வந்ததும் அந்தப் பெண் நேராக சுமதியின் காலில் விழுந்து, ‘‘சிஸ்டர், நீங்க மட்டும் இல்லைன்னா என் வீட்டுக்காரரை உயிரோட பார்த்திருக்கவே முடியாது.

ஆபரேஷன் நேரத்துலயும், அதுக்கு அப்புறமும் ஒரு நர்ஸா நீங்க செய்த கனிவான சேவைதான் அவரைப் பிழைக்க வச்சிருக்கு!’’ - அந்தப் பெண் கண்ணீர் மல்கப் பேசினாள். அவர்கள் சென்றதும், சுமதியின் மாமியார்  சொன்னாள்... ‘‘அம்மா சுமதி! நீ பழையபடி வேலைக்குப் போகணும்னு விரும்புனா போ தாயி. உன்னால மற்றவங்களுக்கு நல்லது நடக்கட்டும்!’’ நெகிழ்ந்து போனாள் சுமதி.         
      

வி.எம்.ராஜன்