ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர் 9

ஜார்ஜ் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும், விஜய் அசையாமல் கிளைகளோடு ஒன்றிக்கொண்டான். அவன் இதயம் ததும்பி, தொண்டையை அடைத்துக்கொண்டது. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தால், ஜார்ஜ் நிச்சயம் அவனைக் கண்டுபிடித்துவிடுவான் என்ற கணத்தில், “ஜார்ஜ்..!” என்ற குரல் காற்றைக் கிழித்து வந்தது.

ஜார்ஜ் திரும்பினான். அடர்ந்த தோப்பின் தூரத்து முனையில் இன்னொரு டார்ச் வெளிச்சம். ஒன்றிரண்டு நிமிடங்களில், தலையில் கறுப்புத் தொப்பி அணிந்திருந்த ஒருவன் ஜார்ஜை நெருங்கினான். கீழே உயிரற்றுக் கிடந்தவர்களைக் கண்டு அவனிடம் ஆச்சரியமேயில்லை. இங்கே இதுதான் நிகழும் என்பது அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் போல! 

“ஜார்ஜ்... என்னாச்சு? முடிச்சாச்சு இல்ல..? ஏன் லேட்டுனு போன்ல கேக்கறாரு தலைவரு...”“இங்க ஒரு சின்ன பிரச்சனை, சின்னா...” என்றான் ஜார்ஜ். “வெயிட் பண்ணு...”விஜய் தவித்தான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்துக்குள் சத்தம் எழுப்பாமல் மரத்தில் நழுவி இறங்கி இருட்டில் கலந்துவிட முடியுமா? அந்த முயற்சியில் அவன் சற்றே அசைய, கிளை தழைந்து, இலைகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தன. அந்த ஒலி கேட்டு, ஜார்ஜ் உஷாராகித் திரும்பிப் பார்த்தான்.

மரக்கிளை ஆடினால் காற்று என்று நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இறங்கி, சருகுகளை மிதித்து ஓடினால் அந்த ஒலி கேட்டு, பிஸ்டல் இயங்கும் என்று தோன்றியது. விஜய் அசையாமல் கிளையோடு மறுபடியும் ஒன்றிக்கொண்டான். கீழே நடக்கும் உரையாடலை தவிப்புடன் கவனித்தான்.

“நேரமில்ல ஜார்ஜ்! கடலோரக் காவல் படை ஆளுங்க கண்காணிப்புக்காக படகுல சுத்தி வருவாங்க! அவங்க ரவுண்ட்ஸ் வர நேரத்துக்கு முன்னால, நடராஜர் கப்பலுக்குப் போயிடணும்னு போன் வந்துச்சு... கரையோரத்துல ரொம்ப நேரம் நம்ம படகு நிக்க முடியாது...”
“சரி, போய்க் காரைத் திற..!”அவன் திறந்தான். ‘‘என்ன செய்யணும்?’’ என்றான்.

“பின் சீட்டுல என்ன இருக்கு..?”“ஒரு அழுக்குத் துணிப்பை.”“அதுலதான் நடராஜர் இருக்காரு. எடுத்துட்டுப் போ..!”“ஓகே ஜார்ஜ்! கண்காணிப்புப் படகு ரவுண்ட்ஸ் வர்றதுக்கு முன்னால நீயும் இடத்தைக் காலி பண்ணிரு...”அந்த வார்த்தைகள் விஜய்க்கு நம்பிக்கை அளித்தன. ஜார்ஜ் அப்படியே புறப்பட்டுப் போய்விட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆனால், ஜார்ஜின் பதில் அந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியது.

“இங்க எவனோ ஒருத்தன் ஒளிஞ்சிருக்கான். அவனை கவனிச்சுட்டு, காரை எடுத்துட்டுப் போயிடுவேன். பாண்டிச்சேரில மீட் பண்ணலாம்..”
சின்னா தயங்கி திரும்பினான். “ஹெல்ப் வேணுமா, ஜார்ஜ்..?” என்று வந்தவன் தன் டார்ச் வெளிச்சத்தை அங்கங்கே செலுத்தித் தேடினான்.
“என்னால தனியா சமாளிக்க முடியும்... நீ நேரத்துக்குப் போயிடு!”

வந்தவன் அந்தத் துணிப்பையை எடுத்துக்கொண்டு அலைகடலை நோக்கி ஓடினான்.விஜய் அசையாமல் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். மூச்சை இழுத்துப் பிடித்து, அடுத்த நிகழ்வுக்காகத் தவிப்புடன் காத்திருந்தான்.

ஜார்ஜ் அந்தப் புளியமரத்திலிருந்து ஆறு, ஏழு அடி தள்ளி நின்றான். டார்ச் வெளிச்சத்தை மரத்தின் கீழே செலுத்தினான். அந்த வெளிச்சத்தால் துழாவியபோது கீழே கிடந்த விஜய்யின் செல்போன் அவன் கண்களில் பட்டது. ஒரு கையில் பிஸ்டலுடன், குனிந்து போனை இன்னொரு கையால் எடுத்தான். ஆன் செய்தான். வீடியோ ஓட ஆரம்பித்து, பேட்டரி தீர்ந்து அணைந்து போனது. போனை பழையபடி கீழே போட்டான். சுற்றிலும் பார்த்தான்.

“எவன்டா வீடியோ எடுத்தது? வா வெளிய...” என்றான், கடுமையான குரலில். மரக்கிளைகளின் இருட்டில் பதுங்கியிருந்த தன்னை அவன் கவனித்திருக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் விஜய் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.ஜார்ஜ் பிஸ்டலைத் தழைத்து கீழே கிடந்த விஜய்யின் போனை நோக்கிச் சுட்டான். தோட்டா போனின் மத்தியில் நுழைந்து, போனைச் சிதறடித்தது.

‘‘நீ என்ன வீடியோ எடுத்திருந்தாலும், அதை இனிமே பிபிசிக்கோ, தூர்தர்ஷனுக்கோ அனுப்ப முடியாது...”
தனக்கும், முக்கியமான வீடியோவுக்கும் அதிர்ஷ்டமேயில்லை என்று விஜய் நொந்துகொண்டான்.எப்படிக் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. சட்டென்று ஜார்ஜ் நிமிர்ந்தான். மரத்தின் இருட்டுக் கிளைகளைப் பார்த்தான். இப்போது பிஸ்டலும், டார்ச் வெளிச்சமும் மேல் நோக்கி உயர்ந்தன.
“மரத்து மேலயே சாகப் போறியா..? பூமிக்கு வந்து சாகறியா..?”

அமெரிக்கன் போல் தோற்றமளித்த ஜார்ஜ், அவ்வளவு தெளிவாகத் தமிழ் பேசியதே விஜய்க்கு ஆச்சரியமாக இருந்தது. கிளை மீது குப்புறப் படுத்திருந்தவன், மெல்ல கிளையின் மீது கையூன்றி, நிமிர்ந்தான். அச்சத்தில் அவன் உடல் முழுவதும் வியர்த்தது. உடைகள் உடலோடு ஒட்டிக்கொண்டன.

“யாருடா நீ? பேரைச் சொல்லு..!”“விஜய்..!”
“எந்த விஜய்... அந்த டி.வி.காரனா..?”“ஆமாம்...”
“நாங்க எங்க போனாலும், ஒளிஞ்சிருந்து வீடியோ எடுக்கறதுதான் உன் வேலையா... யாருக்காக வேலை செய்யற நீ?”
“கே.ஜி. டிவி...”

“டி.வில வேலை பாக்கறே... ஆனா, எங்க பிசினஸ் எதிரி யாருக்காகவோ நீ வேலை செய்யற! கரெக்டா..?”
“அப்படில்லாம் எதுவுமில்ல...” என்றபடி விஜய் எழுந்து கிளைகளில் பேலன்ஸ் செய்து நின்றான். கைகளை முடிந்த மட்டிலும் உயரத் தூக்கினான். அப்படி சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என்று தோன்றியது. ஆனால், சரணடைந்தவனை ஜார்ஜ் சுட மாட்டான் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவனோடு வியாபாரம் பேச வந்தவர்களை அவன் அலட்சியமாகச் சுட்டுத் தள்ளியதிலிருந்தே, அவன் எதற்கும் அஞ்சாதவன் என்று விஜய்க்குப் புரிந்திருந்தது.

அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. நந்தினி சொல்லச் சொல்ல தனியே புறப்பட்டு வந்தது தவறோ? அம்மாவிடமும் நந்தினியிடமும் சொல்லிக்கொள்ளாமலேயே என் கடைசி சுவாசத்தை இங்கேதான் விரயம் செய்யப் போகிறேனா? ஜார்ஜ் புளியமரத்தின் ஒரு மெலிதான கிளைக்கு நேர் கீழே நின்றிருப்பதை விஜய் கவனித்தான். அவனுக்கு அந்தக் கணம் திடீரென அந்த யோசனை பிறந்தது. பேலன்ஸ் தவறியது போல் சட்டென்று காலை நகர்த்தி, அந்த மெல்லிய கிளையில் ஊன்றித் தடுமாறினான். அவன் கொடுத்த அழுத்தத்தில் அந்தக் கிளை வளைந்து, தழைந்து, சட்டென்று ஜார்ஜின் தலையை மேலிருந்து தட்டியது.

ஜார்ஜ் திடுக்கிட்டான். அந்த மிரட்சியில் தன்னிச்சையாகச் சுட்டான். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், கொஞ்சநஞ்சம் இருந்த தைரியமும் போய் விஜய் நிஜமாகவே தடுமாறினான். பிடிப்பு இழந்து, கீழே விழலானான். விழும்போது பயத்தில் அவன் கை நீண்டு, தன்னிச்சையாக அதே மெலிந்த கிளையைப் பற்றியது. அந்த பாரத்தில் தழைந்த கிளை, மளுக்கென முறிந்து, கீழே நின்றிருந்த ஜார்ஜின் வலது தோளில் மோதியபடி இறங்கியது. அந்த வேகத்தில் ஜார்ஜின் வலது கை அவனை நோக்கியே மடங்கியது. அவன் விஜய்யை சுடப் பார்த்து விசையை இழுக்க, அவன் கை மடங்கிய நேரத்தில் தோட்டா வெளிப்பட்டது. தோட்டா  ஜார்ஜையே தாக்கியது.

ஜார்ஜ் மல்லாந்து கீழே விழுந்தான். அவனுடைய கையிலிருந்து பிஸ்டல் எகிறிப் போனது. தோட்டா அவனுடைய இடது தோளுக்கும், இடது கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உராய்ந்து சென்றிருந்தது. வலி பொறி பறந்தது. இருந்தாலும், அவன் எழுந்திருக்கப் பார்த்தான். அதைப் பார்த்ததும், விஜய் பிஸ்டலை அள்ளிக் கையில் பிடித்தான்.

“அசையாத... சுட்டுருவேன்..!” என்றான், நடுங்கும் குரலில்.ஜார்ஜ் தலையைத் தூக்கப் பார்த்தான். ஆனால், அவன் தலை சட்டென்று ஒரு புறமாகச் சாய்ந்தது. அவன் கழுத்திலிருந்து ரத்தம் குபுக் குபுக்கென்று பெருகி, சருகுகளை நனைக்க ஆரம்பித்தது. அவன் கண்கள் மேலே செருகிக்கொண்டன.
விஜய் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து அவனை நெருங்கினான். ஜார்ஜின் போனை எடுத்து, அவசர போலீஸ் எண்ணுக்கு டயல் செய்தான்.
எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் திடீரென்று ஆயுதத்தோடு தோன்றலாம் என்று அச்சம் தாக்க, விஜய் விழிகளை விரித்து வைத்திருந்தான். சிறுசிறு ஒலிக்குக்கூட அவன் கையிலிருந்த பிஸ்டல் விறைத்து நிமிர்ந்தது.

லியோ கொண்டு வந்திருந்த வீடியோ கேமரா இன்னும் கீழேதான் கிடந்தது. அவன் பெண்ணையாற்றங்கரையில் எடுத்த வீடியோ இதில்தானே இருந்தது? விஜய் அந்த கேமராவைத் திறந்து, எஸ்.டி. கார்டை வெளியே எடுத்தான். பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.   
அவ்வப்போது திரும்பி ஜார்ஜைப் பார்த்தான். அவன் அசையாமல் கிடந்தான்.

அவன் பின்னங்கழுத்துக்குக் கீழே ரத்தம் சேகரமாகிக்கொண்டிருந்தது. இருளில் ‘ஊம்’ என்று இரைச்சலிடும் தூரத்து அலைகளும், விசிலடிக்கும் காற்றும் அவன் எலும்புகள் வரை நடுக்கத்தைச் செலுத்த, ஜார்ஜின் போனிலிருந்து நந்தினிக்கு போன் செய்தான் விஜய். எதிர்முனையில் பதிலே இல்லை. பழக்கமில்லாத எண் என்பதால், நந்தினி எடுக்கத் தயங்குவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘விஜய்தான் பேசுகிறேன்... போனை எடு’ என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான். மீண்டும் டயல் செய்தான். இந்த முறை முதல் மணியிலேயே நந்தினி எடுத்தாள்.

“விஜய்... எங்கடா இருக்க..?”“சவுக்குத் தோப்புல... ரெண்டு பொணத்தோட...”
“என்னது..?”“பொணமாயிடுவானோனு இன்னொருத்தன் வேற காலடில கெடக்கான்...”
விஜய் புன்னகையோடு பேச முயன்றான். ஆனால், குரல் உலர்ந்திருந்தது.
“என்னடா சொல்றே..?”

விஜய் அங்கு நிகழ்ந்ததையெல்லாம் அவளிடம் விவரிக்க விவரிக்க, நந்தினி எதிர்முனையில் அழ ஆரம்பித்தாள்.
“ஏண்டா... சொன்ன பேச்சைக் கேக்காம இப்படி ரிஸ்க்குலாம் எடுக்கறே? உன்னை அவன் சுட்டிருந்தா..?”
“சுட்டானே... நான் சாகல! அவன்தான் அடிபட்டுக் கெடக்கான்... ஆம்புலன்ஸோட வரச் சொல்லி போலீஸுக்கு போன் பண்ணியிருக்கேன். நடராஜர் சிலையை கப்பலுக்குப் போறதுக்கு முன்னால போலீஸால மடக்க முடியும். செய்யறாங்களானு பார்ப்போம்... நந்து, இதையெல்லாம் சொல்லி அம்மாவை டென்ஷன் பண்ணாத!”

விஜய் அடுத்து கே.ஜி. தொலைக்காட்சி எண்ணுக்கு போன் செய்தான். முரளிதரனிடம் விவரங்களைச் சுருக்கமாக விளக்கினான்.
“பிரேக்கிங் நியூஸா போடலாமே! கீழ ஒரு கேமிரா கெடக்குதுனு சொன்னியே... அதுல வீடியோ எடுத்துப் பாரேன்...”அவ்வளவு பதற்றத்திலும், அவருடைய மூளை எப்படி செய்திப் பசியோடு யோசிக்கிறது என்று வியந்துகொண்டே விஜய், கீழே கிடந்த லியோவின் கேமிராவை எடுத்தான். போனில் இருந்த டார்ச் வெளிச்சத்தில் தன்னைச் சுற்றிலும் படம் பிடித்தான்.

கிட்டத்தட்ட ஒரு யுகம் காத்திருந்தபின், இரட்டை ஸைரன் ஒலி கேட்டது. போலீஸும், ஆம்புலன்ஸும் வந்துவிட்டன.
“ஐ’ம் இன்ஸ்பெக்டர் துரை அரசன்...” என்று ஜீப் வெளிச்சத்தில் தன்னை அறிமுகம் செய்துகொண்டவர் கண்ணியமாகத் தெரிந்தார்.
“சாகக் கெடக்கறவனை முதல்ல காப்பாத்தணும்... ஆம்புலன்ஸ்ல போகும்போது பேசுவோம்...” என்றார். ஜார்ஜை சுட்ட பிஸ்டலை ஒரு கைக்குட்டை நீட்டி, அதில் வாங்கி சுருட்டினார்.

அவருடன் வந்திருந்த சப் இன்ஸ்பெக்டரிடமும், கான்ஸ்டபிள்களிடமும் அந்தப் பிரதேசத்தை எப்படி தடயங்கள் கலையாமல் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்று படபடவென்று உத்தரவுகள் கொடுத்தார்.“என்னடா சொல்றே..?” போனில் ஒலித்த தீபக் தர்மசேனாவின் குரலில் மிளகாய் இருந்தது. சின்னதுரை மரியாதை கலந்த குரலில் மீண்டும் விவரத்தைச் சொன்னான்.

“ஆமாங்க ஐயா... படகுல ஏறப் போற நேரம், துப்பாக்கி சுடற சத்தம் கேட்டுப் போய்ப் பார்த்தேன். ஜார்ஜ் அடிபட்டுக் கெடந்தான்...”
“இந்த நடராஜர் இன்னும் எத்தனை உயிரைக் காவு வாங்குவாரோ தெரியலியே... நீ அப்படியே நழுவு! இந்நேரம் போலீஸுக்குத் தகவல் போயிருக்கும்... உஷாராகியிருப்பாங்க! படகு வேணாம்... சாமியை மறைச்சு எடுத்திட்டு வீட்டுக்குப் போயிரு! காலைல நம்ப வண்டி உன்னை பிக்கப் பண்ணிக்கும்./.”
“சரிங்க ஐயா... படகு..?”“ஒண்ணு, ரெண்டு கிலோமீட்டர் தள்ளிப் போய் கரைல ஒதுங்கட்டும்!”
“கப்பல்ல எதிர்பார்த்திட்டிருப்பாங்களே..?”

“அங்க தகவல் நான் கொடுத்துக்கறேன்... நீ சொதப்பாம வீடு போய்ச் சேர்ந்துட்டு தகவல் கொடு!”“நல்லதுங்க ஐயா...”சின்னதுரை அந்த அழுக்குத் துணிமூட்டையுடன் கரையோரமாக நடந்து இருளில் கலந்தான். ஆம்புலன்ஸ் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொண்டையில் நீல விளக்கு ஒளிர, ஸைரன் அலற விரைந்தது. ஜார்ஜ் நிறைய ரத்தம் விரயம் செய்திருந்தும், இன்னும் உயிரை இழுத்துப் பிடித்திருந்தான். அன்று இதேபோல் ஆம்புலன்ஸில் கல்யாணியின் கழுத்திலிருந்து பெருகும் ரத்தம் கண்டு பதறியதெல்லாம் நினைவில் புரள, ஜார்ஜின் அருகில் விஜய் அமர்ந்திருந்தான்.

இன்ஸ்பெக்டர் துரை அரசன், அதே ஆம்புலன்ஸில் இன்னொரு புறம் அமர்ந்திருந்தார். “சார், படகை மடக்கிட்டாங்களா..?” என்று விஜய் ஆவலுடன் கேட்டான். “சுத்துவட்டாரத்துல எந்தப் படகுமே இல்லைனு கோஸ்டல் கார்ட்ஸ் சொல்றாங்க! இதுவரைக்கும் நீங்க சொன்னதுல உண்மை எது, பொய் எது..?”இன்ஸ்பெக்டரின் கேள்வி விஜய்யை திடுக்கிட வைத்தது.

இந்த நடராஜர்

இன்னும் எத்தனை உயிரைக் காவு வாங்குவாரோ
தெரியலியே... நீ  அப்படியே நழுவு!
இந்நேரம் போலீஸுக்குத் தகவல்
போயிருக்கும்...  உஷாராகியிருப்பாங்க!’’

தலைவர் ஏன் மைக் முன்னால அமைதியா நிக்கறார்..?’’
‘‘அவர் இப்ப மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டிருக்கார்!’’

மைக்ல ஏன் தாயத்து கட்டி வச்சிருக்காங்க?’’
‘‘தலைவர் தன் பேச்சுக்கு இடைல குட்டி பேய்க் கதைகள் நிறைய சொல்றாரே..!’’

ஆனாலும் தலைவருக்கு ஈகோ ஜாஸ்தி...’’‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘ஸ்டேஷன்ல ஆஜராகி கையெழுத்துப் போடச் சொன்னா, ‘வெளிநாட்டு போலீஸ் ஸ்டேஷன்ல போடலாமா’ன்னு கேட்கறார்!’’

- அம்பைதேவா, சென்னை-116.

(தொடரும்...)

சுபா
ஓவியம்: அரஸ்