இலவசம் ரொம்ப மோசம்!



‘‘ரமா... என்னோட சித்தப்பா பையன் கல்யாணத்துக்கு மோதிரம் போடணும். கடைசியா நீ வளையல் வாங்குனியே, அந்தக் கடைக்குப் போய் ஒரு மோதிரம் செலக்ட் பண்ணுவோம், கிளம்பு!’’ என்றான் சரவணன்.‘‘ஐய்யய்யோ அந்தக் கடையா? வேண்டாம். வேற கடைக்குப் போகலாங்க!’’‘‘ஏண்டி? நகையில எதாவது பித்தலாட்டம் பண்ணிட்டாங்களா?’’

‘‘அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு!’’‘‘செய்கூலி நிறைய வாங்கறாங்களா?’’
‘‘அதெல்லாம் குறைவுதாங்க! ஆனா ஒரு பொருளும் இலவசமா தர மாட்டேன்னுட்டாங்க. மற்ற கடையில பர்ஸ், ஹேண்ட் பேக், சாமி படம்... அது இதுனு எவ்வளவு குடுக்கறாங்க, இவங்க எதுவும் தர்றதில்லை!’’

‘‘அப்ப கண்டிப்பாக அந்தக் கடையிலதான் எடுக்கணும்!’’‘‘என்னங்க, இப்படிச் சொல்றீங்க?’’‘‘ரமா, இலவசம்னு ஒரு வார்த்தையைக் கேள்விப்பட்டாலே அங்கே ஜாக்கிரதையா இருக்கணும். பர்ஸ், ஹேண்ட் பேக்னு சீப்பான பொருளா இலவசம் தந்துட்டு அதுக்கு பத்து மடங்கா செய்கூலி, சேதாரம்னு நம்மகிட்ட புடுங்கிடுவாங்க. உன்னோட வளையல் ரேட்டைப் பார்த்தேன்.

மற்ற கடைகளை விட குறைவா இருந்துச்சு. அதனாலதான் மோதிரம் அங்க எடுக்கலாம்ங்கறேன், புரிஞ்சுதா?’’மனதில் பல கோணங்களிலும் எண்ணங்களை ஓடவிட்ட ரமா, இனி இலவசங்களுக்காக எந்த முக்கிய முடிவும் எடுத்துவிடக் கூடாது எனத் தீர்மானித்தவளாய், ‘‘புரிஞ்சுதுங்க!’’ என்றாள்.

வி.சகிதா முருகன்