யார் இதில் வியாபாரி?



முத்துப்பாண்டி பன்னிரெண்டு தெருக்கள் கடந்திருந்தான். அவன் தள்ளுவண்டியில் பழங்கள் அப்படியே இருந்தன. ‘பால் சப்போட்டா... தேன் சப்போட்டா...’ என்று தொண்டை கிழியக் கூவியும் வாங்குவோர் யாருமில்லை.உச்சி வெயிலில் நடந்து நடந்து சோர்வாக இருந்தது. சற்று ஜனநடமாட்டம் இருக்கும் பகுதியாக ஒதுங்கி நிற்கலாம் என்ற யோசனையில் நடக்கும்போதுதான் அந்தத் தனியார் பள்ளியை பார்த்தான்.

மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பள்ளி மாணவர்கள் வெளியே வருவார்கள். அதில் நாலைந்து பேர் சில்லரைக் காசுக்காவது பழம் வாங்க மாட்டார்களா என்ற எண்ணத்தோடு பள்ளியின் அருகே சென்றான். தூங்குமூஞ்சி மரம் பள்ளி வாயிலில் நிழலை அப்பிக்கொண்டிருக்க, இளைப்பாற தோதாக இருந்தது.

அவன் அங்கு வந்து நின்ற சற்றைக்கெல்லாம் பள்ளி நிர்வாகி கோபமாக ஓடோடி வந்தார். ‘‘இது வியாபாரம் பண்ற இடமில்ல, கிளம்பு!’’ - அவர் வார்த்தைகளில் கண்டிப்பு!‘‘கொஞ்ச நேரம்தான் சார். போயிடுவேன்!’’ - கெஞ்சினான் முத்துப்பாண்டி.‘‘என்ன கொஞ்ச நேரம்? நீ பழம் விக்க இந்த இடம்தான் கிடைச்சுதா? இது விக்கறதுக்கான இடம் இல்லேங்கறேன்... அப்புறம் என்ன?’’‘‘நீ மட்டும் படிப்பை விக்கிறே?’’ - கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் வண்டியை நகர்த்தத் துவங்கினான் முத்துப்பாண்டி.         

அஜித்