கேள்வி மேல் கேள்வி



‘‘முதியோர் இல்லத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு... ஏண்டா வந்தோம்னு இருக்குப்பா!’’ - நண்பரான சுரேந்தரனிடம் தன் கஷ்டத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார் பரசுராமன்.‘‘என்னப்பா பிரச்னை?’’ - சுரேந்தரன் கேட்டார்.‘‘நல்ல தண்ணி வசதி கிடையாது. போடற சாப்பாட்டை வாய்லயே வைக்க முடியறதில்லை. ரூம் எல்லாம் ரொம்ப மோசம். கிழிஞ்சு போன பெட்டுகளும், பாய்களும்... எலி, கரப்பான் பூச்சி தொல்லைகள் வேற...’’

‘‘அடடா... அநியாயமா இருக்கே?’’‘‘ஆமாம்பா... ஏ.சி ரூமுக்குனு தனியா காசு வாங்குறாங்க. ஆனா, சீலிங் ஃபேன் கூட ஒழுங்கா வேலை செய்யறது இல்லை. பணம் மட்டும் கரெக்ட்டா வாங்கினா போதுமா? அதுக்குண்டான வசதி செஞ்சு தரணுமில்ல? எந்த வசதியுமே இல்லாத இங்கே எப்படி தொடர்ந்து இருக்கறதுனு தெரியல!’’‘‘நீ நிர்வாகிகள்கிட்ட சொல்லலாமே பரசுராமா..?’’

‘‘சொன்னா எங்க கேக்கறாங்க சுரேந்தரா..? இருக்கறதை வச்சு அட்ஜஸ்ட் பண்ணுங்கனு சொல்றாங்க. ‘இவ்வளவு பணம் வசூல் பண்ணியும் ஏன் வசதிகள் இல்லை’னு கேள்வி மேல கேள்வி கேக்கற வயசானவங்களும், அவங்க மகன்களும்... முதியோர் இல்ல மேனேஜரான என்னால பதில் சொல்ல முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. இங்க மேனேஜர் வேலைக்கு ஏண்டா வந்தோம்னு இருக்கு’’ என்றார் பரசுராமன் விரக்தியாக!

கே.ஆனந்தன்