மனிதன்



குறைந்தபட்சம் சில்லறை கேஸ் ரெளடிக்குக்கூட ஜாமீன் வாங்கித் தர முடியாமல் தவிக்கிற... பைசாவுக்கும் பெறாத ஒரு வக்கீல், இந்தியாவின் லீடிங் லாயரைத் தோற்கடிப்பதே மனிதன். ‘என்றென்றும் புன்னகை’ என்கிற லைட் ஹார்ட் படத்தை எடுத்த அஹமத், இந்தத் தடவை சமூக அக்கறையோடு எடுத்து வைத்த அடுத்த ஸ்டெப் ‘மனிதன்’.

சேஃப் படங்களையே செய்து வந்த உதயநிதி இதில் பெரிய அளவில் மாறுதல் காட்டியிருக்கிற விதமே ஆஹா! ஏழை எளிய மக்களைத்  துச்சமாகக் கையாளும் அலட்சியப் பணக்காரர்களை நோக்கி விளாசப்பட்ட சாட்டையடியே இந்தக் கதை.எந்த வழக்கும் கை வரப் பெறாமல் ஏகத்துக்கும் சிக்கலில் இருக்கிறார் வக்கீல் உதயநிதி.

ஊருக்குள் இருக்கும் மாமா மகள் ஹன்சிகா கொடுத்த பிரஷரில் சென்னைக்கே வந்து ‘ஏதாவது கேஸ் கிடைக்குமா?’ எனப் பார்க்கிறார். இப்படி வந்த  இடத்தில், ஆறு பேரை கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் கவனம் வைக்கிறார்.

பிரகாஷ்ராஜின் கிடுக்கிப்பிடி வாதத் திறமையால் வழக்கு தவிடுபொடியாகிறது. தீர்ப்புக்கு எதிராக உதயநிதி பொதுநல வழக்குத் தொடர்கிறார். இதில் உதயநிதி வெற்றி பெற்றாரா? பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நீதி கிடைத்ததா? வல்லவரான பிரகாஷ்ராஜின் வாதத்திறமை என்னவானது? என்பதேஅர்த்தம் நிறைந்த மீதிக் கதை.

உதயநிதிக்கு நிச்சயம் இது அடுத்த படி - இடம். படத்தின் மொத்த இயல்பையும் ஒன்று விடாமல் புரிந்து ெகாண்டு, முதலில் அசட்டு வக்கீலாகவும், பிறகு ெகாஞ்சம் ெகாஞ்சமாக கூச்சம் போக்கி, விபரங்கள் சேகரித்து, பிரகாஷ்ராஜை கதிகலக்கும் இடங்களிலும் செமத்தியாக ஸ்கோர் செய்கிறார். இதுவரையில் நகைச்சுவையில் மட்டுமே கவனம் செலுத்திய உதயநிதி, இனி எந்தப் பயணத்திற்கும் தயாராகலாம். படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே பின்பாதி முடிச்சுகளைப் புதைத்து வைத்திருக்கும் டைரக்டர் அஹமதின் இயக்கத்திற்கு பெரும் துணையாய் இருக்கிறார்.

பணமும், அதிகாரமும் இருந்தால் குற்றங்கள் செய்தாலும் தப்பி விடலாம் என இருந்ததை அள்ளி நொறுக்கிய வகையில் இயக்குநருக்கு ஹேட்ஸ் ஆஃப்! வழக்கின் திருப்பங்களும், ஒரு சிறு தவறுகூட வழக்கையும் அதன் போக்கையும் திருப்புகிற விதமும் விறுவிறுப்பு. பெரிய வக்கீலையே யோசித்து காய் நகர்த்தினால் வீழ்த்திவிடலாம் என்பதை உணர்த்தும் காட்சிகள் படத்தின் பலம்.

பெரும் வசனங்களை எதிர்கொண்டாலும் தியேட்டரில் எழும் கைதட்டல்கள் அதனை நிரூபிக்கின்றன. இயல்புக்கும், குற்றத்திற்கும், நெகிழ்ச்சிக்கும் ஏற்ற மாதிரி வசனங்களில் அஜயன்பாலாவும், அஹமதும் நிமிர்ந்து நிற்கிறார்கள்.  ஹன்சிகாவை மலர்த்திய சிரிப்பில் அளவாகப்பயன்படுத்தியிருக்கிறார்கள். உதயநிதியிடம் நாணயத்தை மட்டும் எதிர்பார்க்கும் இடங்களில் ஹன்சிகா அருமையாகத் தேறிவிட்டார். அவ்வப்போது வந்தாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதம்.

நீதிபதியிடம் சத்தம் போட்டு உரத்துப் பேசுவது, சரமாரியாக கிடைத்த கேப்பில் யோசிக்க விடாமல் பேச்சில் தாக்குவது என ஸ்கிரீனில் தட்டுப்படும்போதெல்லாம் பிரகாஷ்ராஜ் தடாலடிதான்! ‘நடிப்பில் நான் சீனியர்’ என்பதை நீதிபதி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே நிரூபிக்கிறார் ராதாரவி. சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் ஒரே சாயலில் இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. மதியின் கேமரா அளவாகவும், எல்லை மீறாமலும் உழைப்பைக் கொட்டியிருக்கிறது. நீதியை நிமிர வைக்கும் மனிதன்.

- குங்குமம் விமர்சனக் குழு