பயம்



இரவு பதினொரு மணி... இருண்ட, ஆளரவமற்ற அந்த மயானப் பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பிரபாகர், தன் பின்னால் ஏதோ உருவம் நெருங்கி வருவதை உணர்ந்தான். அவன் இதயம் இன்னும் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.‘திருடனோ, சைக்கோ கொலைகாரனோ, ஒருவேளை... பேயாகக் கூட இருக்குமோ!’ விருட்டென்று அந்த உருவம் பிரபாகர் தோளைப் பற்றியது. ‘‘அய்யோ!’’ - அரண்டே போய்விட்டான் அவன்.

‘‘என்ன தம்பி! ஏதோ அவசரச் செலவுக்கு எங்கிட்ட பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினே. மூணு மாசமாச்சு. இப்பல்லாம் வேலை முடிஞ்சு ராத்திரி நம்ம கடைப் பக்கமா வராம இந்த வழியாத்தான் வர்றே போலருக்கு!’’ - பலசரக்கு கடைக்காரர் குருசாமிதான் நின்றிருந்தார்.

‘‘இல்லீங்க அய்யா... நானும் திருப்பித் தரணும்னு நினைக்கிறேன். ஆனா, அம்மாவுக்கு மருந்துச் செலவு அது இதுனு...’’ - தந்தியடித்தான் பிரபாகர்.
‘‘புரியுதுப்பா. பணத்தை எப்போ முடியுமோ அப்ப கொடு. ஒண்ணும் அவசரமில்லை. அதுக்காக பயந்துக்கிட்டு இப்படிப்பட்ட சுடுகாட்டுப் பாதையில ராத்திரி நேரத்துல வராதே. ரவுடிப் பசங்க உலவுற இடம். அதைச் சொல்லத்தான் வந்தேன்!’’ என்றபடி கிளம்பினார் குருசாமி.
பிரபாகருக்கு பயம் விலகி, குற்ற உணர்வு மனம் முழுக்கப் பரவியிருந்தது.    

கீர்த்தி