வீழ்த்தவேண்டிய சர்வாதிகாரம்!



மாமன்னர்கள் சர்வாதிகாரிகள் ஆன வரலாறு சொற்பமே! ஜனநாயக தேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வரும் தலைவர்கள்தான், மக்களை வதைக்கும் சர்வாதிகாரிகளாக உருவெடுக்கிறார்கள். ஆட்சியும் பதவியும் தங்களுக்கே நிரந்தரம் என நம்புகிறார்கள். அவர்களைப் பின்பற்றும் தொண்டர்களோ, அவர்களை தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

தெய்வம் எப்படி மக்களோடு நெருங்கும்? உயர்ந்த மேடையில் உயர்ந்த இடத்தில் ஒற்றை நாற்காலியில் அமர்ந்து, மற்றவர்களை காலடியில் அமர வைத்து பெருமிதம் கொள்கிறது. மற்றவர்களை வதைத்து தான் மட்டும் சொகுசாக இருக்கப் பழகுகிறது. என்ன மோசடி செய்தும் அதிகாரத்தை எப்படியாவது கையில் வைத்துக்கொள்ளத் துடிக்கிறது. தவறான வழியில் சொத்துகள் சேர்க்கச் செய்கிறது. ஜனநாயக வழியில் எதிர்ப்பவர்களை முரட்டுக் கரம் கொண்டு அடக்கும் இந்த சர்வாதிகாரத்தை தேர்தல் மூலமாகவே வீழ்த்தவேண்டும். 

ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் குட்டி தேசம், ஈக்வடோரியல் கினியா. கடந்த வாரம் இந்த நாட்டின் அதிபராக தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்தலில் ஜெயித்திருக்கிறார் டியடோரோ ஒபியாங் நெகுமா. உலகிலேயே அதிக காலம் பதவியில் இருக்கும் அதிபர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர் இவர். 1979ல் ஆட்சிக்கு வந்தவர், 37வது ஆண்டாக அதிபராகத் தொடர்கிறார். ‘மக்களுக்கு அவர்மீது அவ்வளவு பாசமா?’ என்றால், ‘உலகிலேயே மிக மோசமான தலைவர் இவர்தான்’ என்கின்றன மனித உரிமை அமைப்புகள்.

பதவிக்கு வந்த ஆரம்ப காலத்தில் தன்னை மக்கள் சேவகன் போல காட்டிக் கொண்டவர், முதல் இரண்டு தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் யாரையுமே போட்டியிட அனுமதிக்கவில்லை. தனியாக அவர் மட்டுமே ஒரு தேர்தலில் நின்று ஜெயிப்பது அவருக்கே போரடித்திருக்கும் போல... அதன்பின் கொஞ்சூண்டு இறுக்கத்தைத் தளர்த்தி மற்றவர்களையும் அனுமதித்தார்.

ஆனால் தேர்தலில் எவ்வளவு மோசடி செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்தார். 2002ம் ஆண்டு தேர்தலில் மொத்த வாக்காளர்களைவிட அதிகமாக ஓட்டு பதிவாகி, 103 சதவீத ஓட்டு வாங்கிவிட்டார் இவர். அப்புறம் சமாளித்து அதை 100 சதவீதம் ஆக்கி முடிவு அறிவித்தார்கள். கடந்த வார தேர்தலில்கூட 97 சதவீத ஓட்டு வாங்கித்தான் அவர் ஜெயித்தார்.

‘‘மக்களின் தலைவர் நான்தான். எனக்கு ஓட்டு போடாதவர்கள், நாட்டில் கலவரம் ஏற்பட வேண்டும் என விரும்புகிறவர்கள் மட்டுமே’’ என மிரட்டல் பேச்சைக் கேட்ட பிறகு யார் மாறுவார்கள்? எதிர்க்கட்சியினருக்கு நிரந்தர வசிப்பிடமாக சிறையே இருக்கிறது. தினம் தினம் வழிபாடுகளையும் பணிந்து குனியும் அடிமைகளையும் பார்த்துப் பார்த்து அவருக்கு ‘நாம் கடவுள்தானோ!’ என்ற எண்ணம் வந்துவிட்டது. ‘‘நான் கடவுளின் அவதாரம்’’ என ஒருமுறை பேட்டியில் சொல்லியும் இருக்கிறார்.

கட்சிக்காரர்கள் அவரை ‘இதய தெய்வம்’ என்கிறார்கள். மற்ற எல்லா மனிதர்கள் மற்றும் உயிரினங்களையும்விட அவர் சக்தி வாய்ந்தவர் என நம்புகிறார்கள். அவர் தினமும் கடவுளோடு பேசுவதாகவும் நினைக்கிறார்கள். நிரந்தரத் தலைவராகவும், நிரந்தர ஆட்சியாளராகவும் அவரைக் கருதுகிறார்கள்.

இந்த நம்பிக்கையை முதலீடாக வைத்து அவர் செய்யும் மோசடிகள் பயங்கரம். பெட்ரோலிய வளம் கொழிக்கும் அந்த தேசத்தில் உறிஞ்சும் எண்ணெயில் கிடைக்கும் லாபத்தை ஒரு அமெரிக்க நிறுவனமும் இவரது குடும்பமும் பங்கு போட்டுக்கொள்கின்றன. அரசு கஜானாவில் இருக்கும் பணத்தை எடுத்து தனது குடும்பத்தினர் பெயரில் ஒரு அமெரிக்க வங்கியில் டெபாசிட் செய்தது, பிரான்சில் சொத்துக்கள் வாங்கிக் குவித்தது என எல்லாவற்றையும் உலக நாடுகள் அம்பலப்படுத்தியுள்ளன.

நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது.தவறு செய்தவர்களும், அதற்காக தண்டனை பெறக் காத்திருப்பவர்களும் சர்வாதிகார மனோபாவத்தோடு அதிகார நாற்காலியில் அமர்ந்திருப்பது ஆபத்தானது என்பதை உணர வேண்டும். தவறு செய்தவர்களும், அதற்காக தண்டனை பெறக் காத்திருப்பவர்களும் சர்வாதிகார  மனோபாவத்தோடு அதிகார நாற்காலியில் அமர்ந்திருப்பது
ஆபத்தானது.

- அகஸ்டஸ்