விஷாலும் ராதாரவியும் சந்தித்தபோது...



மருது இயக்குநர் முத்தையா

‘சார், நான் வாழ்க்கையின் அடித்தட்டு மக்களோடு ரத்தமும் சதையுமா கலந்து திரிஞ்சவன். ஒரு வேளை சாப்பாட்டுல இருக்கிற அருமை பெருமையெல்லாம் தெரியும். அப்படி தெருவில திரிஞ்ச எனக்கு மனசுல ஹீரோவா தெரிஞ்சவர்தான் ‘குட்டிப்புலி’. அது அம்மாவிற்கும் மகனுக்குமான உறவு. சிரிச்சா அழகு சொட்டுற, முறைச்சா பதற வைக்கிற விதமா வந்து நின்னார் சசி அண்ணன்.

அடுத்து கார்த்தி சார் ‘கொம்ப’னில் மாமா - மருமகன் உறவை மேம்பட காண்பிச்சார். இப்போ அப்பத்தாவிற்கும், பேரனுக்குமான உறவில் வந்து நிற்கிறார் விஷால். என் உணர்வையும், உயிரையும் எரிபொருளா எரிச்சு தேடிக் கண்டுபிடிச்சவன்தான் இந்த ‘மருது’!’’ - தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் முத்தையா. ‘குட்டிப்புலி’, ‘கொம்ப’னில் பளிச்சென்று வெளிச்சம் காட்டியவர்.

 ‘‘40 நாள் தலைமுடி, இறுகின தோற்றம், கைலி, கட் பனியன்னு விஷால் தோற்றமே வேற மாதிரி இருக்கே...’’ ‘‘தேங்க்ஸ் சார். படத்தையும் அதே ரசனையோடதான் கொண்டு போயிருக்கேன். பாசமும், நேசமுமா பேரனை வளர்க்கிற அப்பத்தா... அவளோட கவனிப்புல உழைப்பும் அன்புமா திரிகிற விஷால். அப்படியே நீரோட்டம் மாதிரி போய்க்கிட்டு இருக்கும் அந்த உறவு. விஷால் இதில லோடுமேன். முண்டாசும், ஏத்திக் கட்டின கைலியும், மூட்டையைக் குத்தித் தூக்குற ஊக்குமா திரிகிற மனுஷன்.

எனக்கு விஷாலை புதுசா பார்க்கணும்னு ஆசை இருந்தது. ‘சொல்லுங்க முத்து, நீங்க சொன்னா சொன்னபடி மாறிக்கிறேன்’னு சொன்னார் விஷால். அப்படியே மருதுவை வார்த்தைகளில் சொன்னேன். பத்து நாளில் கொஞ்சம் உடம்பு இறுகி, கொஞ்சம் முகம் வடிஞ்சு, தலைமுடியை ஒட்ட வெட்டி, மீசையை செதுக்கி, கட் பனியனில் கைலியை மடிச்சுக் கட்டி வந்து நின்னார்ல!

அட, அதுதாங்க ‘மருது’. நீங்க சந்தையில, பஸ் ஸ்டாண்டுல சரக்கு ஏத்தி இறக்கும்ேபாது பார்த்திருப்பீங்க. அவங்க சட்டையும் வேட்டியுமா இருக்கறதே தீபாவளி, பொங்கலுக்குத்தான். அப்படியே அன்னிக்கு சட்டை போட்டால் கூட சட்டையைக் கழட்டி தோள் மேலதான் போட்டிருப்பாங்க. மீறி போட்டிருந்தால் அதில் கண்டிப்பா மூணு பட்டன் திறந்து கிடக்கும். விஷால் பேசினது ராஜபாளையம் பாஷை. ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலினு சேர்ந்து கலந்ததுதான் இந்த பாஷை. மூட்டாத லுங்கியும் இதுவரை காட்டாத நடிப்பும் இதில் விஷாலுக்கு அக்மார்க் ஸ்பெஷல்!’’
‘‘மறுபடியும் சென்டிமென்ட்டா...’’

  ‘‘அளவா கொடுத்தா சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது எதுவும் கிடையாது. யாரும் இந்த உறவுகளிலிருந்து தப்பி வந்தவங்க கிடையாது. சென்டிமென்டானு சிரிக்கிறவங்களுக்கும் சென்டிமென்ட் இருக்கு. பாட்டிக்கு பெத்த மகனைவிட பேரனுக்கு ஆக்கிப் போட்டு சாப்பிடுறதுதான் ஆசையா இருக்கும். ஒரு பாசப் பிணைப்பில் உங்களைக் கட்டிப் போடுற கதைதான் ‘மருது’. தென்மாவட்டத் தமிழன்னா இப்படித்தான் இருப்பான். தயவுசெய்து யாரும் இதுக்கு எந்த சாதி, மதம்னு வர்ணம் பூசிட ேவண்டாம். இது மருது என்கிற மனுஷனோட கதைதான்.

என் வேலைப்பளுவை புரிஞ்சுக்கிட்டு, அதைத் தன் தோளுக்கு மாத்திக்கிட்டு அப்படியே தடதடனு நடிச்சு முடிச்சார் விஷால். ராஜபாளையத்தில அசல் மார்க்கெட் ஏரியாவுல படம் பிடிச்சோம். அப்படியே விஷாலை ஒண்ணுமண்ணா, ஒரு வயித்து பையன் மாதிரி அங்கே ஜனங்க பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு என்னன்னா இன்னும் பெண்களின் மாண்பு பற்றி சொல்லித் தீரலை. சொல்லித் தீராதது அவங்களோட பிரியம். இப்பதான் முதல் பிரதி பார்த்துட்டு, ‘ரொம்ப நன்றி முத்தையா, எனக்கு ஒரு நல்ல முகம் கொடுக்கிற படம். அப்படியே எல்லோருடைய மனசிலயும் ஒட்டிக்கிற நிறைய இடங்கள் படத்துல இருக்கு’னு சொன்னார். எனக்கு அதுதான் முதல் திருப்தி!’’

‘‘அந்த அப்பத்தாதான் யாரு?’’  ‘‘இதுல அனாயாசமா பொருந்துகிறவர் மனோரமாதான். நான் ‘குட்டிப்புலி’யிலேயே அவங்கதான் அம்மாவா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அவங்க மனசு இருந்த அளவுக்கு உடம்பு ஒத்துழைக்கலை. அப்புறம் ‘கொம்ப’னில் அவங்கதான் உடனே நினைவுக்கு வந்தாங்க.

இப்பவும் அவங்கதான் நினைவு, ஏன்னா பாடுபட்டு எழுதுகிற குணத்தை, உணர்வை, பாசத்தை ஒரு நொடியில் கடத்திட்டு, அடுத்து என்ன சொல்லுனு நம்மகிட்ட நிப்பாங்க. இதுக்கு புதுசா ஒருத்தரை கொண்டு வரலாம்னு தோணுச்சு. அப்படி என் மனசில் இருந்த சித்திரம் மாதிரியே இருந்தார் கொல்லப்புளி லீலா. சிலிர்த்துப் போச்சு. அப்படியே கேரளாவிலிருந்து கூட்டிட்டு வந்திட்டேன். அவங்க ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க பாருங்க. அவ்வளவு அழகு!’’

‘‘திவ்யா இதுல விஷாலுக்கு புது ஜோடி...’’  ‘‘என்னவோ தெரியல, முதல் இரண்டு படத்திலும் லட்சுமி மேனன்தான். இனியொரு தடவை அவங்களைக் கொண்டு வந்தால் என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்க.

அதனால் இந்தப் படத்தில் திவ்யாதான். இவங்களும் குறைச்சல் இல்லை. பின்னி பெடலெடுக்கிறாங்க, எந்த கேரக்டரையும் நம்பி தாராளமா இந்தப் பொண்ணுகிட்டே கொடுக்கலாம். பண்ணுமானு பயந்துகிட்டே சீன் சொன்னா, நெத்தியடியா அடிக்குது. பாவாடை தாவணியில் அப்படியொரு பாந்தம்!’’
‘‘ராதாரவி, விஷால் இதில் ேசர்ந்து நடிக்கிறாங்களே...’’

‘‘அட நீங்க ஒண்ணு... யாரும் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை. ராதாரவியும், விஷாலும் சந்திக்கிற சீன் அபாரமா களை கட்டும். நான் கதையை விஷால்கிட்ட சொல்லும்போதே ‘ராதாரவி’னு சொல்லிட்டேன். திடீர்னு பார்த்தா நடிகர் சங்கத் தேர்தல் சூடு பறக்குது. போச்சுடானு நினைச்சேன். தேர்தல் நடந்து முடிஞ்சதும், விஷால்கிட்ட ‘ராதாரவி’ன்னு இழுத்தேன்.

 ‘சரி, அது தேர்தலோடு போச்சு. அவருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தாராளமா நீங்க அணுகலாம்’னு சொன்னார். இரண்டு பேரும் படத்தில் நடிக்க வந்ததும், பேசிக்கிட்டதும், பழகினதும், அவ்வளவு அருமை. தொழில் வேறனு புரிஞ்சுக்கிட்டவங்க. என்னைக் கேட்டா எல்லா நடிகருக்கும் மாற்று வந்தாச்சுன்னு கூட சொல்வேன். ஆனா, அந்த எம்.ஆர்.ராதா... எனக்கு என்னவோ அப்படி ஒருத்தர் வரலேன்னு தோணுது!’’

  - நா.கதிர்வேலன்