இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ்!



ஆண்ட்ராய்டு போனில் ஆரம்பித்து ஆட்டோ வரை ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வந்துவிட்ட யுகத்தில், ஜி.பி.எஸ் என்றால் என்ன என அதிகம் விளக்கத் தேவையில்லை! ஒரு பொருளோ, வாகனமோ, மனிதரோ... இருக்கும் இடத்தைத் துல்லியமாக அறிய செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் ஜி.பி.எஸ் உதவுகிறது.

கூகுள் மேப்பில் வழி பார்ப்பதும், ஓலா ஆட்டோவை புக் செய்வதும் சாத்தியமாவது இதனால்தான். இதைத் தாண்டியும் பல ரகசியப் பயன்பாடுகளுக்கு ஜி.பி.எஸ். தேவை. இப்போது உலகமே பயன்படுத்தும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் அமெரிக்காவுக்கு சொந்தமானது.

இதற்கு மாற்றாக ‘இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ்’ அமைப்பைக் கட்டமைப்பதில் இறுதி வெற்றி அடைந்திருக்கிறோம் நாம்!கடந்த வியாழக்கிழமை ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட், விண்ணில் செலுத்திய IRNSS-1G என்ற செயற்கைக்கோள் இதை சாத்தியமாக்கியுள்ளது. கடந்த 2013 ஜூலையில் ஆரம்பித்து இந்த வரிசையில் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இவை ஏழும் இணைந்து செயல்பட்டு இந்தியாவுக்கு பிரத்யேக ஜி.பி.எஸ் வசதியைக் கொடுத்துள்ளன.

விவசாயம், கட்டுமானம், போக்குவரத்து, சுற்றுலா, மீன்பிடித்தல், வானிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட பல அத்தியாவசியத் துறைகளில் ஜி.பி.எஸ் பயன்படுகிறது. இவை எல்லாவற்றைவிடவும் உளவு மற்றும் ராணுவத் தேவையும் இதற்கு இருக்கிறது.

உலகில் இதுவரை நான்கு சூப்பர் பவர்கள் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தை வைத்துள்ளன. அமெரிக்காவின் ஜி.பி.எஸ், ரஷ்யாவின் குளோனாஸ், சீனாவின் பெய்டன், ஐரோப்பாவின் கலிலியோ ஆகிய சிஸ்டம்களே அவை! இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 5வது இடம்.

அமெரிக்காவின் ஜி.பி.எஸ் சிஸ்டமே உலகம் முழுக்க பயன்படுகிறது. விண்ணில் 24 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, உலகம் முழுவதையும் தன் கண்காணிப்பில் வைத்திருக்கிறது அமெரிக்கா. இவற்றில் ஏதேனும் 4 செயற்கைக்கோள்கள் எந்த இடையூறும் இல்லாமல் ஒரு இடத்தைக் கண்காணிக்க முடிந்தாலே போதும்... அது பற்றிய தகவல்களை நாம் பெறலாம்.

இது இலவசமாகத் தரும் சேவை என்பதால், எவருக்கும் இதைத் தருவதை அவர்கள் நிறுத்திக்கொள்ளவும் முடியும். கடந்த 99ம் ஆண்டு கார்கில் போரின்போது, பாகிஸ்தான் ஊடுருவல் குறித்த தகவல்களை ஜி.பி.எஸ் மூலம் பெற நாம் முயன்றபோது, அமெரிக்கா உதவி செய்ய மறுத்துவிட்டது. ‘நமக்கென்று தனியாக செயற்கைக்கோள் தகவல் சிஸ்டம் தேவை’ என இந்தியாவை உணர வைத்த தருணம் அதுதான்.

இந்த ஜி.பி.எஸ் சிக்னலை இலவசமாகவே எல்லோருக்கும் தருகிறது. ஜி.பி.எஸ் ரிசீவர் இருக்கும் எல்லோரும் இதைப் பயன்படுத்தலாம்.

‘‘இந்த சாதனையின் மூலம், நமது பாதையை நாமே தீர்மானிக்கும் தொழில்நுட்பத்தை அடைந்துள்ளோம்’’ என இஸ்‌ரோ அமைப்பைப் புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ஜி.பி.எஸ். சிஸ்டத்துக்கு ‘நேவிக்’ என பெயர் சூட்டியுள்ளார். Navigation Indian Constellation என்பதன் சுருக்கம் இது.

அமெரிக்கா 24 செயற்கைக்கோள்களை வைத்து ஜி.பி.எஸ் சிஸ்டம் அமைத்திருக்கிறது என்றால், நாம் 7 செயற்கைக்கோள்களை வைத்து இதைச் செய்துள்ளோம். இதுதவிர 2 செயற்கைக்கோள்கள் ‘ஸ்டேண்ட் பை’ ஆக உள்ளன.

இந்த சிஸ்டம் மூலம் இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் கண்காணிக்க முடியும். இதுதவிர இந்திய எல்லையைத் தாண்டிய 1500 கிலோமீட்டர் சுற்றளவுப் பகுதியையும் கவனிக்க முடியும். எனவே இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான் போன்ற அண்டை நாடுகளுக்கும், முடிந்தால் பாகிஸ்தானுக்கும் இதைப் பயன்படுத்தும் வசதியை நாம் அளிப்பது சாத்தியம். இதன்மூலம் அண்டை தேசங்களுடன் நல்லுறவை வளர்க்கலாம்.

இந்த சிஸ்டத்துக்கான ஆன்டெனாக்கள், ரிசீவர்கள் போன்றவற்றை இப்போதுதான் நிறுவிக்கொண்டிருக்கிறார்கள்.  எனவே இது முழுமையாக செயல்பாட்டுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

இந்த ஒட்டுமொத்த சிஸ்டத்தை உருவாக்க 1410 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ராணுவப் பயன்பாட்டுக்கு 10 மீட்டர் துல்லியமாக இது இலக்கைக் காட்டும். தீவிரவாத முகாம் ஒன்றை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கத் தீர்மானித்தால், இந்தத் தொழில்நுட்பம் பொருத்திய குண்டுகளை ஏவி துல்லியமாக அழிக்கலாம்.

விமானப் போக்குவரத்து, இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப் பணிகள் மேற்கொள்வது என எல்லாவற்றுக்கும் நேவிக் உதவும். ஜி.பி.எஸ் போல இல்லாமல், இந்தியாவின் நில அமைப்பை அறிந்துகொண்டு உருவாக்கப்பட்ட சிஸ்டம் என்பதால், மலைகள், காடுகளில் தவறுகள் செய்யாமல் இலக்கைக் காட்டும்.

இந்த நேவிக் இரண்டுவித பயன்பாட்டுக்கு உதவுகிறது. பொதுமக்களுக்கு ஜி.பி.எஸ் போலவே இது உதவும். ஒரு இலக்கை 20 மீட்டர் துல்லியமாக அடையாளம் காண இந்தப் பயன்பாட்டில் சாத்தியம். உதாரணமாக, வங்கக்கடலில் மீன் பிடிக்கப் போன நாகை மீனவர் வழி தவறுகிறார் என்றால், நேவிக் ரிசீவரை அவர் வைத்திருந்தால் துல்லியமாக அவரை ஹெலிகாப்டர் தேடிக் கண்டுபிடிக்கும்.

- அகஸ்டஸ்