ரகசிய விதிகள்
அட்டகாசத் தொடர் 7
விஜய் அதிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். “என்ன சார் பேத்தலா இருக்கு..? கொள்ளையடிச்சவங்கதான் கல்யாணியை கொலை பண்ணினாங்கன்னு தெளிவா தெரியும். அப்புறம் என்னைக் கைது செய்யறதா சொல்றீங்க..?” என்றபடி விஜய் தன்னுடைய போனை எடுத்தான்.
“உங்க போனைக் குடுத்துருங்க...” என்று இன்ஸ்பெக்டர் கை நீட்டினார். விஜய் எரிச்சலுடன் போனை அவரிடம் கொடுத்தான். “விஜய், என்னடா இது..?” என்று அவன் அம்மா கண்களில் கண்ணீருடன் பதறினாள்.
“இதோ பாருங்கம்மா... உங்க மகனை கையில விலங்கு போட்டு, ஊரே பார்க்கற மாதிரி கூட்டிட்டுப் போக முடியும். அக்கம்பக்கத்துல அசிங்கப்படக் கூடாதுனுதான் நான் காக்கி டிரஸ்ல வராம, டி-ஷர்ட்ல வந்திருக்கேன்.
வாசல்ல போலீஸ் ஜீப் நிக்காம அம்பாசிடர் நிக்குது... புரிஞ்சுக்கிட்டு ஒத்துழைப்பு கொடுங்க!” என்றார் இன்ஸ்பெக்டர்.“வெயிட் பண்ணுங்க சார்... வரேன்!” என்று அவரிடம் சொல்லிவிட்டு, விஜய் தன் அம்மாவை உள்ளே அழைத்தான். “நீயும் கல்யாணியும் தொட்டுப் பேசுவீங்களானு என்னை அவர் கேட்டுட்டிருந்தார், விஜய்...” என்றாள் மரகதம், பதற்றத்துடன்.
விஜய் ஆவேசத்தை அடக்கிக்கொண்டு, “எனக்கு எதுவும் ஆகாதும்மா... அவருக்கு காபி குடு..” என்று அவளைத் தட்டிக் கொடுத்துவிட்டு, லேண்ட்லைனில் டயல் செய்தான். எதிர்முனையில் எடுத்தது செந்தாமரை - எம்.டி. கிரிதரின் உதவியாளர். “சார், விஜய் பேசறேன்! கல்யாணி கொலையானதுல எனக்குத் தொடர்பு இருக்குன்னு சந்தேகத்தின் பேர்ல என்னைக் கைது செய்ய வந்திருக்காங்க. இந்தத் தகவலை எம்.டி சாருக்கு தெரிவிச்சிடுங்க...” என்று சொல்லிவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
வங்காள விரிகுடா. அலைகள் அடங்கிய உள்கடல் பகுதி. சக்தி வாய்ந்த மோட்டார் பொருத்தப்பட்ட அந்த மீன்பிடிப் படகு உடலைச் சாய்த்து வளைந்து திரும்பியது. அதைவிடப் பெரிதாக இருந்த இன்னொரு படகு நகராமல் நின்றிருக்க, அதை நெருங்கி இணையாக நின்றது. வெகு வெகு தொலைவில் சென்னையின் கரை புகையாகத் தென்பட்டது.
பெரிய படகிலிருந்து உயரமான மீன் கூடைகள் மோட்டார் படகுக்கு மாற்றப்பட்டன. நைலான் வலைகளில் கொத்துக் கொத்தாகச் சிக்கியிருந்த மீன்கள் வாரிக் கொட்டப்பட்டன. மோட்டார் படகில் இருந்தவர்கள் கூடைகளைத் திறந்து பார்த்தார்கள். நிரம்பியிருந்த மீன்களை விலக்கி, கைவிட்டுத் துழாவினார்கள். கனமான பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்ட பிஸ்டல்களும், ரைஃபிள் துப்பாக்கிகளும் வெளியே எடுக்கப்பட்டன. தங்களிடம் இருந்த பட்டியலுடன் ஆயுதங்களை அவர்கள் சரிபார்த்தனர். திருப்தியான பின், ஆயுதங்களை மீண்டும் மீன்களுக்கு நடுவில் பதுக்கினர். இரு படகுகளும் சட் சட்டென விலகி வெவ்வேறு திசைகளில் விரைந்தன.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம். சிறப்பு அனுமதி பெற்று விஜய்யை அங்கே வைத்து விசாரித்துக்கொண்டிருந்தார், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன்.“ஆமாம் சார்! கல்யாணியைத் தொட்டுப் பேசுவேன்... ரெண்டு பேரும் துரத்திப் பிடிப்போம். அதுக்காக, அவகூட படுத்துட்டேன்னு சொல்வீங்களா..? ஆணுக்கும் பொண்ணுக்கும் நல்ல நட்பும், ஆரோக்கியமான உறவும் இருக்க முடியும், புரிஞ்சுக்குங்க...”
“ஸாரி விஜய்... ஃப்ரெண்டோட லவ்வரை கரெக்ட் பண்ணி, ஃப்ரெண்டையே கொலை பண்ணினவங்க எவ்வளவு பேர்னு என்கிட்ட கணக்கே இருக்கு! ஆணும், பொண்ணும் நெருக்கமா இருந்தா, தப்பு நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு... வள்ளுவர் காலத்துலேர்ந்தே இந்த மேட்டர் மட்டும் மாறல...” “கல்யாணி கர்ப்பமானதுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்ல... கல்யாணி அநியாயமா உயிரை விட்ட துக்கத்துலேர்ந்து இன்னும் நாங்க மீளவே இல்ல. நடராஜர் சிலையைத் திருடினவங்க யாருனு கண்டுபிடிக்கறதை விட்டுட்டு, டீ கப்பை சுத்தற ஈ மாதிரி என்னையே சுத்தி சுத்தி வந்துட்டிருக்கீங்க..?”
“சரி... கல்யாணிகிட்ட அந்த மாதிரி பழகினவங்க யாருன்னாவது உங்களுக்குத் தெரியுமா?”“சத்தியமா தெரியாது சார்... இந்த ஒரு விஷயத்துல மட்டும் கல்யாணி என்கிட்ட உண்மையா இல்ல!”“உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா..?”“கல்யாணி கொலையானது எந்தத் தனிப்பட்ட விரோதம் காரணமாகவும் இல்ல... கொள்ளையடிச்சவங்க கேமராவைப் பிடுங்க வந்தாங்க. உடனே குடுக்காம, கொஞ்சம் திமிறினேன். என்னைப் பணிய வைக்கறதுக்காக, குறுக்க நின்னுட்டிருந்த கல்யாணியை வெட்டிட்டாங்க.
தண்ணில விழுந்து கேமராவும் வீணாயிடுச்சு. அவங்களைப் பதிவு பண்ணின எஸ்டி கார்டும் போயிடுச்சு! எத்தனை தடவை கேட்டாலும், இந்த உண்மையை நான் மாத்திச் சொல்ல முடியாது...”“அவங்க ரெண்டு பேரும் எப்படி இருந்தாங்க..?”“நல்ல திடமான உடம்பு... இதோ, இவ்வளவு உசரம் இருந்தாங்க. வேட்டை நாய் மாதிரி ஸ்பீடா ஓடினாங்க...”“டிரைவர் பிரகாஷ்தான் உங்களுக்கு வண்டி ஓட்டினாரு. அதே பிரகாஷ்தான் ஹோண்டா கார் தொலைஞ்சதுலயும் இன்வால்வ் ஆயிருக்காரு. அவரைப் பத்தி என்ன நெனைக்கறீங்க..?”
“சார், எல்லாரையும் சந்தேகப்படறது போலீஸ் குணம். எனக்கு அவர் மேல எந்த சந்தேகமும் இல்ல...”இந்த நேரத்தில் கதவைத் தட்டிவிட்டு, ஒரு கான்ஸ்டபிள் வந்து நின்றார்.“சார், கமிஷனர் உங்களைக் கூப்பிடறார்...” என்றார், இன்ஸ்பெக்டரிடம். கமிஷனர் அறை.கமிஷனருக்கு எதிரில் அமர்ந்திருந்தவரைப் பார்த்ததுமே, இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு அவர் யாராக இருக்கும் என்று புரிந்துவிட்டது.
நெருக்கமான கட்டங்கள் போட்ட முழுக்கைச் சட்டையை கருநீல பேன்ட்டுக்குள் விட்டு, பெல்ட் அணிந்து, விறைப்பாக அமர்ந்திருந்த நபர், உச்ச நீதிமன்றம் வரைக்கும் அசால்ட்டாகப் போய்வரும் வக்கீல் என்று அவர் உடலெங்கும் எழுதப்பட்டிருந்தது.கமிஷனர் அமைதியான குரலில் கேட்டார். “சந்திரமோகன், சிலை திருடுனவங்க யாருனு அடையாளம் காட்ட, பரேடு நடத்தினீங்களா..?”“இன்னும் இல்ல சார்...”
“குத்தவாளிங்களைக் கோட்டை விட்டுட்டு, தப்பான ஆளுங்களை சித்ரவதை பண்றாங்கனு போலீஸுக்கு கெட்ட பேர் வந்துடக் கூடாது...” “யெஸ் சார்!”“இவரு கே.ஜி. டிவியோட அட்வகேட். பெயில் ஆர்டர் வாங்கிட்டு வந்திருக்காரு. விஜய், பிரகாஷ் ரெண்டு பேரையும் ரிலீஸ் பண்ணிடுங்க...”“யெஸ் சார்...”“முதல்ல கொள்ளைக்காரங்களைக் கண்டுபிடிக்கப் பாருங்க...”
“யெஸ் சார்...” என்று சந்திரமோகன் பட்டென்று சல்யூட் அடித்தார்.வட சென்னை.கடற்கரைச் சாலையில் கம்பீரமாக நின்றது, அந்த மூன்று மாடிக் கட்டிடம். ‘தீபக் மரைன் ப்ராடக்ட்ஸ்’ என்ற பித்தளை எழுத்துகள் வெயிலில் மின்னின. போர்ட்டிகோவில் அந்த நீளமான பென்ஸ் கார் நிறுத்தத்துக்கு வந்தது. சீருடை அணிந்த வாட்ச்மேன் ஓடி வந்து கார் கதவைத் திறந்து பிடிக்க, தீபக் தர்மசேனா இறங்கினார். ஐம்பது வயது. முகத்தில் தங்கிவிட்ட செல்வத்தின் செழிப்பு. முன் வழுக்கை. தங்க ஃபிரேம் கண்ணாடி. வெள்ளைக் கதரில் கால் சராய், வெள்ளைக் கதரில் முழுக்கைச் சட்டை. சுத்தமாக மழிக்கப்பட்ட முகம்.
லிஃப்ட்டில் ஏறி, மூன்றாவது மாடியில் வெளிப்பட்டார். மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்துக்கே உரிய விளம்பரப் படங்கள் சுவர்களை அலங்கரித்தன. தீபக் தர்மசேனா தன் அறைக்குள் நுழைந்தார். சுழல் நாற்காலியில் அமர்ந்து, ரிமோட் பொத்தானை அழுத்தினார். அறைக்கதவு உள்ளே தாழிட்டுக்கொண்டது. மேஜை இழுப்பறையைத் திறந்தார். ஒரு ஸ்மார்ட் போனை வெளியே எடுத்தார். ஸ்விட்ச் ஆன் செய்தார். இரண்டு குறுஞ்செய்திகள் வந்திருந்தன. புருவங்கள் முடிச்சிட்டன. அந்த போனை இயக்கினார். எதிர்முனையில் எடுத்தது, லியோ.
“ஐயா...” என்ற குரலிலேயே தரை வரை குனிந்த பணிவு இருந்தது.“என்ன ஆச்சுடா? வெண்ணெயைத் தடவற மாதிரி வேலையை முடிப்பேன்னு சொன்னே! அத்தனை சேனல்லயும் உங்க மூஞ்சியைத் தவிர எல்லாத்தையும் காட்டிட்டாங்க. இதான் நீங்க வேலை செய்யற லட்சணமா..?” எதிர்முனையில் சிறு மௌனம். “நாங்க எதிர்பார்க்காத சில தப்பு நடந்துடுச்சுங்க... மன்னிச்சிருங்க!” “பார்ட்டியை வரவேணாம்னு சொல்லிட்டீங்களா..?”
“வாய்ப்பில்ல... அவர் ஏற்கனவே மகாபலிபுரத்துக்கு வந்துட்டாரு... தகவலும் குடுத்துட்டாரு...”“டேய்... நீங்க ஏதாவது முட்டாள்தனம் பண்ணி மாட்டிக்கிட்டா, கோர்ட் கூண்டுல நீங்க ஏறுறதுக்கு முன்னால, உங்களை பரலோகத்துக்கு அனுப்பிடுவேன். ஞாபகம் வெச்சுக்கங்க...” என்று தொடர்பைத் துண்டித்தார்.பொத்தானை அழுத்தி, “ரிக்கியை வரச் சொல்...” என்றார். அவர் அனுமதியளித்ததும் கதவு திறந்து, ரிக்கி சக்கரம் வைத்த சூட்கேஸ் ஒன்றைத் தள்ளிவந்தான்.
“ரிக்கி, சரக்கெல்லாம் போய் சேர்ந்துருச்சா..?”ரிக்கி, அந்தப் பயணப் பெட்டியை மேஜை மீது வைத்துத் திறந்தான். கட்டுக் கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.“பார்ட்டிக்கு திருப்திதானே..?”“ரொம்ப திருப்தி...”“வேற மேட்டர்ல ரெண்டு உயிர் போயிருக்கு... போலீஸ் ரொம்ப மும்முரமா ஒவ்வொரு நூலாப் பிடிச்சுக் கோப்பாங்க... ஒவ்வொரு நிழலையும் வேவு பார்ப்பாங்க... நம்ப பசங்க எல்லாரையும் கவனமா இருந்துக்கச் சொல்லு...” ரிக்கி தலையசைத்தான்.
பிரகாஷ், பன்னீர் இருவரும் அறையின் இருட்டு மூலையில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். “கொள்ளைக்காரங்க மூஞ்சில துணி கட்டியிருந்தாங்கனு சொல்றீங்களே, எப்படிக் கட்டியிருந்தாங்க..?” என்று சந்திரமோகன் கேட்க, பிரகாஷ் துணியை முக்கோணமாக மடித்து நெற்றி, கண்களை விடுத்து, மூக்கையும், வாயையும் மூடிக் கட்டிக் காட்டினார். “இப்ப வரவங்கள்ல அவங்க இருக்காங்களானு பாத்துச் சொல்லுங்க...”
அங்கிருந்து பதினைந்து அடி தள்ளி, அதே போல் முகம் மூடி ஆறு பேர் ஒவ்வொருவராக நடந்து வந்தார்கள்.“இல்ல சார்... இவர் கொஞ்சம் குள்ளம். இவர் ரொம்ப தாட்டியா இருக்கார்... இதுல யாருமே இல்ல சார்...”“கொள்ளையடிச்சவன் எப்ப பரேடுக்கு வருவானோ..?” என்று எரிச்சலுடன் சந்திரமோகன் பொருமினார்.அந்த ஆறு நபர்களும் சந்தேகத்துக்குரியவர்கள் அல்ல என்று விடுவிக்கப்பட்டார்கள்.
கே.ஜி. தொலைக்காட்சி நிலையம். கான்ஃபரன்ஸ் ஹால். முக்கியமான ஊழியர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அங்கு கனமானதொரு மௌனம் நிலவியது. பெரிதாக்கப்பட்ட கல்யாணியின் புகைப்படம் ஒன்றுக்கு மாலை அணிவித்தார், கிரிதர். கண்களை மூடி கை கூப்பினார். ஊழியர்களைப் பார்த்துத் திரும்பினார். கணீரென்ற குரலில் பேசத் துவங்கினார்.
“நாம எதிர்பார்க்காத ஒரு பேரிழப்பு இது! ஆனா, இதுக்கெல்லாம் மிரண்டு போயிடக் கூடாது. இந்தத் தொழில்ல இருந்தா கத்தியப் பாக்கணும், ரத்தத்தைப் பாக்கணும், கண்ணெதிர நாலு பொணம் விழும். எல்லாத்தையும் தாண்டி, நடுநிலையோட தைரியமா செயல்பட்டுத்தான் ஆகணும். அப்படி இருக்கறதுதான் மீடியா தொழில். என் வாழ்க்கைய தூர்தர்ஷன்ல ஒரு மராமேனாதான் ஆரம்பிச்சேன். ரெண்டு மீனவர் குரூப்புக்குள்ள சண்டைனு கவர் பண்ண, முட்டத்துக்குப் போயிருக்கேன். அங்க வெட்டறதுக்கு வந்திருக்காங்க.
நதித்தண்ணில விஷம் கலக்குதுனு கேள்விப்பட்டு ஆவுடையாபுரம்ங்கற ஊருக்குப் போனபோது, அங்க குழிதோண்டியே புதைக்கப் பார்த்தாங்க. எல்லாத்தையும் தைரியமா எதிர்கொண்டதாலதான் நான் தனியா நியூஸ் சேனல் ஆரம்பிக்கற லெவலுக்கு வர முடிஞ்சுது. நமக்கு உயிர் முக்கியம்... அதே அளவு செய்தியும் முக்கியம்...”பொதுவாக சிக்கனமாகவே வார்த்தைகளை உதிர்க்கும் எம்.டி. இன்று இவ்வளவு பேசுகிறாரே என்று அத்தனை பேரும் ஆச்சரியத்துடன் கவனித்தனர்.
திருவான்மியூர் கடற்கரை. இரவு ஆளத் துவங்கியிருந்தது. வெளிச்சமற்ற மணல்வெளி. எங்கெங்கோ யார் யாரோ சிதறியிருந்தார்கள். நந்தினியைச் சீண்டும் அளவு நெருக்கத்தில் அமர்ந்திருந்தாலும், தன் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான், விஜய். இருவர் முகங்களிலும் வழக்கமாக மின்னும் புன்னகை இல்லை.
“விஜய், என் பேச்சை நீ கேப்பியா..?” என்று நந்தினி மெல்லிய குரலில் கேட்டாள். “என்ன..?”“தெரிஞ்ச ஜோசியர் ஒருத்தர் இருக்காரு. ரொம்ப நம்பிக்கையானவரு. அவர்கிட்ட உன் ஜாதகத்தைக் காட்டுவோம். உனக்கு நேரம் சரியில்ல... ஏதோ தப்பு நடக்குது. பிரச்னைக்கு மேல பிரச்னையில நீ மாட்டிக்கற. அவரைக் கேட்டு, ஏதாவது பரிகாரம் செய்யணும்னா செய்யலாம்...”விஜய் உலர்ந்த புன்னகையை உதிர்த்தான்.
“ஒரே ஒரு பரிகாரம்தான் தேவை. கல்யாணியோட குடும்பத்துக்கு ஏதாவது உருப்படியா செய்யணும். அதை விட்டுட்டு, பாலபிஷேகம், மோர் அபிஷேகம்னு எந்தப் பரிகாரமும் என்கிட்ட சொல்லாத. என் மனசு கேக்காது...”நந்தினியிடம் பேசியபடியே தற்செயலாக நிமிர்ந்து பார்த்தான். அதிர்ந்தான். கடற்கரை மணலை முத்தமிடும் அளவுக்கு உள்ளே வந்திருந்த தார்ச் சாலையின் முனையில் அந்தக் கார் நின்றிருந்தது. அதன் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களை அவனுக்குச் சட்டென அடையாளம் புரிந்தது. இவர்கள்தானே பெண்ணையாற்றங்கரையில் கல்யாணியைத் துடிக்கத் துடிக்க வெட்டியவர்கள்..? விஜய்யின் ரத்தம் வேகமெடுத்தது.
‘‘நீங்க ஏதாவது முட்டாள்தனம் பண்ணி மாட்டிக்கிட்டா, கோர்ட் கூண்டுல நீங்க ஏறுறதுக்கு முன்னால, உங்களை பரலோகத்துக்கு அனுப்பிடுவேன். ஞாபகம் வெச்சுக்கங்க...’’‘‘தலைவர் சிகிச்சைக்குப் போன ஆஸ்பத்திரியில என்ன கலாட்டா..?’’ ‘‘அங்கே இருக்கற நர்ஸ் கிட்ட விருப்ப மனு கொடுத்தாராம்!’’
‘‘நேர்காணல்ல எதுக்கு மோப்ப நாய் இருக்கு..?’’‘‘அதிருப்தி எம்.எல்.ஏவா மாறக்கூடியவங்களை முன்கூட்டியே மோப்பம் பிடிச்சு காட்டிக் கொடுக்குமாம்!’’ ‘‘என் ஊழல் பங்காளிகளே...’’‘‘ஓட்டுக்குப் பணம் கொடுத்ததை தலைவர் எப்படி குத்திக் காட்டறார் பாரேன்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.
(தொடரும்...)
சுபா
ஓவியம்: அரஸ்
|